NPS சந்தாதாரர்களுக்கு PFRDA கொடுத்த புதிய வசதி: பயன்படுத்தினால் பலனடையலாம்
இதுவரை என்பிஎஸ் (NPS) சந்தாதாரர்களுக்கு பல நிதி மேலாளர்களைத் (Multiple Fund Managers) தேர்ந்தெடுக்கும் வசதி இல்லை. சந்தாதாரர் ஒரு ஓய்வூதிய நிதி மேலாளரைத் தேர்ந்தெடுத்ததும், என்பிஎஸ் -இன் வெவ்வேறு அசெட் வகைகளில் முதலீடு செய்யப்பட்ட பணம் அந்த நிதி மேலாளரால் நிர்வகிக்கப்பட்டது. அதாவது, ஒரே நிதி மேலாளர் அனைத்து அசெட்களையும் நிர்வகித்தார்.
PFRDA -வின் புதிய விதிகளின் படி, இப்போது சந்தாதாரர்கள் ஒவ்வொரு அசெட் வகுப்பிற்கும் வெவ்வேறு நிதி மேலாளர்களைத் தேர்வு செய்யலாம். எனினும் இதற்கு சில நிபந்தனைகளும் உள்ளன.
இந்த வசதியைப் பயன்படுத்த, சந்தாதாரர்கள் அசெட் ஒதுக்கீட்டிற்கு, ஆக்டிவ் சாய்ஸ் தேர்வைத் தேர்வு செய்ய வேண்டும், தானியங்கு முறையை (auto mode) தேர்வு செய்யக்கூடாது.
இந்த வசதி அல்டர்னேட் அசெட் க்ளாஸ்களில் கிடைக்காது, ஈக்விட்டி, அரசு பத்திரங்கள் மற்றும் கார்ப்பரேட் பத்திர சொத்துகளில் மட்டுமே கிடைக்கும்.
இந்த வசதி All Citizen Model (Tier-I), NPS corporate model (Tier-I) and Tier-II (All subscribers) வகைகளில் மட்டுமே கிடைக்கும். அதாவது, டயர்-1 என்பிஎஸ் கணக்கு வைத்திருக்கும் அரசு ஊழியர்கள் இந்த வசதியைப் பெற முடியாது. அவர்களுக்கு டயர்-2 கணக்கு இருந்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.
இத்திட்டத்தில் சேரும் புதிய முதலீட்டாளர்கள், பதிவுசெய்த மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் பல ஓய்வூதிய நிதி மேலாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வசதியைப் பெற முடியும்.
எடுத்துக்காட்டாக, உங்கள் NPS முதலீட்டிற்கான நிதி மேலாளராக நீங்கள் HDFC Pension Fund -ஐ தேர்ந்தெடுத்திருந்து, ஈக்விட்டி மற்றும் பாண்டுகளில் முதலீடு செய்தால், அதே ஃபண்ட் உங்கள் இரு நிதிகளையும் நிர்வகிக்கும். ஆனால் இப்போது நீங்கள் ஈக்விட்டிகளுக்கு வேறு ஃபண்ட் மேனேஜரையும், பாண்டுகளுக்கு வேறு ஃபண்ட் மேனேஜரையும் தேர்வு செய்ய முடியும். இதன் நன்மை என்னவென்றால், உங்கள் அசெட்களுக்கு ஏற்ப சிறந்த நிதி மேலாளரை நீங்கள் தேர்வு செய்ய முடியும்.
PFRDA சமீபத்தில் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதில் சந்தாதாரர்கள் படிப்படியாக மொத்த தொகை திரும்பப் பெறும் வசதியைப் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இப்போது சந்தாதாரர்கள் 75 வயது வரை மாதந்தோறும், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் தங்களின் ஓய்வூதியத் தொகையில் 60 சதவீதத்தை திரும்பப் பெறலாம்.