ராமேஸ்வரத்தில் புனித நீராடிய பிரதமர் மோடி - புகைப்படங்கள் இதோ!
PM Modi Rameswaram Visit Photos: பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இன்று சாமி தரிசனம் மேற்கொண்டார்.
முன்னதாக, அவர் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடினார். அதுவரை பொதுமக்களுக்கு அங்கு நீராட அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பின், பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதன்பின்னர், ராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் நீராடினார். மேலும், ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு புனித தீர்த்தத்தை எடுத்துச் செல்ல உள்ளார்.
ராமநாதசுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனத்தை செய்ததை முன்னிட்டு கோவிலில் இன்று யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
பிரதமர் மோடி இன்று இரவு ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் தங்குகிறார். முன்னதாக, ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்த பிரதமர், ஹெலிகாப்டர் மூலமாகவே ராமேஸ்வரம் வந்தடைந்தார்.
நாளை காலை பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் இருந்து கார் மூலம் தனுஷ்கோடி செல்ல இருக்கிறார். அங்கு கோதண்டராமசுவாமி கோவிலில் தரிசனம் மேற்கொண்டு, ராமர் பாலம் பகுதியை பார்வையிடுகிறார்.
பின்னர், நாளை மதுரைக்கு ஹெலிகாப்டரில் செல்லும் அவர் சிறப்பு விமானம் மூலம் அயோத்தி புறப்படுகிறார். அதாவது, ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பிரதமர் மோடி நேரடியாக தமிழகத்தில் இருந்து செல்கிறார்.
மூன்று நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி தொடரை நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கிவைத்தார்.