ருதுராஜின் ருத்ர தாண்டவம், அரண்டுபோன ஆஸ்திரேலியா - இந்திய 222 ரன்கள் குவிப்பு
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது 20 ஓவர் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. டாஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்தது
ஓப்பனிங் இறங்கிய ஜெய்ஷ்வால் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாக, மறுமுனையில் நங்கூரம் போல் நிலைத்து நின்றார் ருதுராஜ் கெய்க்வாட்.
புயலுக்கு முன் அமைதிபோல் முதல் 21 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த அவர், அதன்பிறகு ருத்ரதாண்டவம் ஆடி 32 பந்துகளில் 50 ரன்களையும் 52 பந்துகளில் 100 ரன்களையும் விளாசி பிரம்மிக்க வைத்தார்.
அவரின் அபார பேட்டிங் காரணமாக இந்திய அணி மீண்டும் ஒருமுறை 200 ரன்களை கடந்தது. 20 ஓவர் முடிவில் 222 ரன்களை குவித்து ஆஸ்திரேலியாவுக்கு பிரம்மாண்ட வெற்றி இலக்கை நிர்ணயித்திருக்கிறது.
அத்துடன் ருதுராஜ் கெய்க்வாட் பல சாதனைகளையும் படைத்துள்ளார். 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சதமடித்த முதல் இந்திய வீரர் ருதுராஜ் தான்.
மேலும், 20 ஓவர் கிரிக்கெட்டில் சதமடித்த இந்திய வீரர்களின் பட்டியலிலும் ருதுராஜ் தன்னுடைய பெயரை இணைத்துக் கொண்டார்.
57 பந்துகளை எதிர்கொண்ட அவர் 123 ரன்கள் விளாசி கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தார்.
முதல் 21 பந்தில் 21 ரன்களும், அடுத்த 36 பந்துகளில் 102 ரன்களும் விளாசினார் ருதுராஜ் கெய்க்வாட்.