சதம் அடித்தும் வேஸ்ட்...? மெதுவாக விளையாடினாரா விராட் கோலி - அவரே சொன்ன காரணம்!
ஐபிஎல் தொடரின் 19ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோதுகிறது. டாஸ் வென்று சஞ்சு சாம்சன் ஆச்சர்யமளிக்கும் வகையில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எந்த மாற்றமும் இல்லை. பெங்களூரு அணியில் அனுஜ் ராவத்திற்கு பதில் அறிமுக வீரர் சௌரவ் சவுகான் இடம்பெற்றார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விராட் கோலி - ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை ஓப்பனராக இறங்கினர். டிரன்ட் போல்ட், பர்கர் ஆகியோரை இந்த இணை அதிரடியாக எதிர்கொண்டது. 4 ஓவர்களில் 42 ரன்களை அடித்தது. அஸ்வின் வீசிய 5ஆவது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இருப்பினும், ஆவேஷ் கானின் 6ஆவது ஓவரில் 8 ரன்கள் வந்தது.
பவர்பிளே ஓவரில் விக்கெட் இழப்பின்றி ஆர்சிபி 53 ரன்களை குவித்தது. தொடர்ந்து, இருவரும் சற்று நிதானம் காண்பிக்க 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் வந்தது. இருப்பினும் அவ்வப்போது பவுண்டரியும், சிக்ஸரும் விராட் கோலி அரைசதம் கடந்தார். ஃபாப் அரைசதம் நோக்கி வந்துகொண்டிருந்தார்.
14ஆவது ஓவரின் முடிவில்தான் ஆர்சிபிக்கு முதல் விக்கெட்டே விழுந்தது. டூ பிளெசிஸ் 33 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 44 ரன்களை அடித்து சஹாலிடம் வீழ்ந்தார். அடுத்து இறங்கிய மேக்ஸ்வெல்லும் 1 ரன்னில் பர்கர் வீசிய அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார்.
அறிமுக வீரர் சௌரவ் சவுகான் நான்காவது வீரராக களமிறங்கி அஸ்வின் ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார். இருப்பினும் அவரும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், விராட் கோலி போராடி 67 பந்துகளில் சதம் அடித்தார். இது அவரின் 8ஆவது ஐபிஎல் சதமாகும். மொத்தமாக 9ஆவது டி20 சதமாகும். கடைசி ஓவரில் 14 ரன்களை குவித்து 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 183 ரன்களை ஆர்சிபி எடுத்தது.
ஆர்சிபி அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 72 பந்துகளில் 12 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் என 113 ரன்களை எடுத்துள்ளார். டூ பிளெசிஸ் 43 ரன்களை எடுக்க மற்ற மூவரும் ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே எடுத்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சில் சஹால் 2 விக்கெட்டுகளையும், பர்கர் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
போட்டி முடிந்தது விராட் கோலி கூறுகையில்,"ஆடுகளம் பார்ப்பதை விட முற்றிலும் வித்தியாசமாக தெரிகிறது. அது தட்டையானது என நினைத்தேன், ஆனால் பந்து ஆடுகளத்தில் நின்று வருகிறது. அப்போதுதான் பந்தின் வேகம் மாறுகிறது என்பதை உங்களால் உணரமுடியும். ஓப்பனர்களில் ஒருவர் (விராட் அல்லது ஃபாஃப்) கடைசி வரை பேட் செய்ய வேண்டியிருந்தது. இந்த மொத்த ஸ்கோரும் இந்த ஆடுகளத்தில் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். நான் எந்த முன்முயற்சியோடும் வரவில்லை. என்னால் ஆக்ரோஷமாக விளையாட முடியாது என எனக்கு தெரியும், பந்து வீச்சாளர்களை யூகித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை மட்டும் யோசித்தேன். இது வெறும் அனுபவம் சார்ந்த மற்றும் சூழல் சார்ந்த முதிர்ச்சியான ஆட்டம் அவ்வளவுதான். இனி பனி இருந்தாலும், மேற்பரப்பு கரடுமுரடானதாகவும், வறண்டதாகவும் இருக்கிறது. இது பேட்டர்களுக்கு எளிதாக இருக்காது. அஸ்வினுக்கு எதிராக என்னால் இறங்கி அடிக்க முடியவில்லை. மிட்-விக்கெட்டை நோக்கி ஸ்லாக் செய்ய முடியவில்லை, எனவே நேராக அடிக்கவே முயற்சித்தோம்" என்றார்.