பெண்களுக்கான அட்டகாசமான சேமிப்புத் திட்டங்கள்: சூப்பர் வட்டி, பம்பர் வருமானம்
மகிளா சம்மான் சேவிங் சர்டிஃபிகேட் எனப்படும் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம் 2023 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் அரசாங்கதால் அறிவிக்கப்பட்டது. இது மத்திய அரசின் ஒரு சிறுசேமிப்புத் திட்டமாக செயல்படுகிறது. இந்த திட்டம் 2025 ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும்
இது ஒரு முறை முதலீடு செய்து வருமானம் பெறும் சேமிப்பு திட்டமாகும். இந்திய குடியுரிமை பெற்ற அனைத்து வயது பெண்களும் இதில் முதலீடு செய்யலாம். 2 ஆண்டு காலத்திற்கு இதில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச முதலீட்டுத் தொகை ரூ 2 லட்சமாக உள்ளது. இதில் 7.50 சதவீத நிலையான வட்டி கிடைக்கும்.
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு ரூ.1.50 லட்சம் வரை வரி சலுகைகள் கிடைக்கும். 2023 டிசம்பரில் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்தை முதலீடு செய்தால், முதிர்வின் போது ரூ.2,32,044 லட்சம் கிடைக்கும்.
குறுகிய காலத்திற்கு பணத்தை டெபாசிட் செய்து நல்ல வருமானம் ஈட்ட விரும்பும் பெண் முதலீட்டாளர்களுக்கு இது நல்லதொரு திட்டமாக கருதப்படுகின்றது. வங்கிகள் அல்லது தபால் நிலையங்கள் மூலம் இந்த திட்டத்திற்கான கணக்கை திறக்கலாம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா என்றழைக்கப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிக்க உதவும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்கை 10 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கு தொடங்கலாம். இதில் ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்து பெரும் வருமானத்தைப் பெறலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகாலம் பங்களிப்பை அளிக்க வேண்டும்.
கணக்கு தொடங்கப்பட்ட பெண் குழந்தைக்கு 21 வயதாகும் போது முழுத் தொகையையும் எடுக்கலாம். எனினும், அவருக்கு 18 வயதாகும்போது உயர்கல்வி செலவுகளுக்கு பகுதியளவு தொகையை எடுத்து பயன்படுத்தலாம்.
அரசாங்கம் தற்போது இந்த திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு 8.2 சதவீத வட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்தில் வருமான வரிச் சட்டத்தின் 80c பிரிவின் கீழ் ஒரு நிதியாண்டில் ரூ. 1.50 லட்சம் வரை வரி சேமிப்பு செய்யலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் பெற்றோருக்கு பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளில் உதவி கிடைக்கும். பெண் குழந்தைகள் இருக்கும் பெற்றோருக்கு சிறந்த திட்டமாக இது பார்க்கப்படுகின்றது.