வேகமாக வரும் வாகனங்களைக் கண்டால் நாய்கள் பின்னால் துரத்துவது ஏன்?
பைக், ஸ்கூட்டர் அல்லது கார் ஓட்டும் போது தெருநாய்கள் திடீரென உங்கள் வாகனத்தை துரத்துவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இதனால் நீங்கள் பயந்திருக்ககூட வாய்ப்புண்டு. அந்த நொடியில் வேகமாக செல்லவே முயற்சித்திருப்பீர்கள். சில சமயங்களில் இது விபத்தில் முடியக்கூட வாய்ப்புகளுண்டு.
சரி, நாய்கள் ஏன் துரத்துகின்றன என்பதற்கான காரணத்தை ஆராய்ந்தால் பல காரணங்கள் பட்டியலிடப்படுகின்றன. நாய்கள் இருக்கும் இடத்தில் புதிய நபர்கள் வந்தால் அவர்களை நாய்கள் எதிரிகளாகவே பார்க்கும். அவர்களால் ஆபத்து வரும் என நினைத்து முன்னெச்சரிக்கையாக துரத்தும், குரைக்கும்.
நாய்களுக்கு டயர் வாசனை பிடிக்காதாம். வாகனங்கள் வரும்போது டயரில் இருந்து வரும் வாசனை நாய்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் என்பதால், வாகனங்கள் வரும்போது பின்னால் துரத்துவதாகவும் கூறப்படுகிறது.
இதனைக் காட்டிலும் புதிய நபர்களின் வருகை ஆபத்தை ஏற்படுத்தலாம் என்ற உள்ளுணர்வில் தங்களை பாதுகாத்துக் கொள்ளவே நாய்கள் இப்படி துரத்துகின்றன என நிபுணர்கள் கூறுகின்றன.
நாய்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என நினைக்கும் விலங்கு. அதன் எல்லைக்குள் புதியதாக ஒருவர் வருவதை அதனால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஒருவேளை நாயின் குட்டி கொல்லபட்ட நேரத்தில் அல்லது காணாமல் போன நேரத்தில் நாய்கள் கோபமாக இருக்கும். அந்த நேரத்தில் அந்த பகுதிக்கு செல்பவர்களையும் நாய் கோபத்துடன் கடிக்க துரத்தும்.
இப்படியான இக்கட்டான நேரத்தில் நீங்கள் சிக்கிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். நாய்கள் துரத்தும்போது நீங்கள் வாகனத்தை வேகமாக ஓட்டக்கூடாது. உங்கள் வாகனம் பாதுகாப்பாக செல்வதில் தான் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
சிலநேரம் டயர்களின் மோசமான வாசனை காரணமாகவும் நாய்கள் துரத்தும் என்பதால், நீங்கள் நாய் ஓடிவருவதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பாதுகாப்பாக வாகனத்தை இயக்குவதிலேயே குறியாக இருக்க வேண்டும்.
சாலையில் நீங்கள் தவறு செய்தால் எதிரே வருபவர்களுக்கும் ஆபத்தாக முடியும் என்பதால், உங்களை பாதுகாப்பதுடன் மற்றவர்களையும் பாதுகாப்பதை மனதில் கொண்டு வாகனங்களை இயக்க வேண்டும்.