புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களாக மாறுவார்கள். அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் அரசியலில் தாக்கம் செலுத்தக்கூடியவர்களாக புலம் பெயர்ந்தவர்கள் இருப்பார்கள் என்று எழுத்தாளர் ஷாஜஹான் தெரிவித்துள்ளார். சமூக வலைதளப் பக்கங்களிலும் இதுகுறித்துப் பதிவு செய்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவரின் அனுபவப் பகிர்வு: 


''சில ஆண்டுகளுக்கு முன் ரயிலில் வரும்போது சக பயணியாக இருந்த ஓர் இளைஞனைப் பார்த்தேன். பொதுவாக பான்பராக்வாயன் என்று கேலியாகக் குறிப்பிடப்படுகிற வடக்கத்தியன். பேசிக் கொண்டிருக்கும்போது தெரிந்தது அவன் கோவையில் ஒரு லாரி புக்கிங் ஆபீசில் வேலை செய்கிறான் என்பது. தமிழே பேசத் தெரியாமல் எப்படி தமிழ்நாட்டில், அதுவும் புக்கிங் ஆபீசில் வேலை செய்வான் என்று புரியவில்லை. அதிகமாகத் துருவிக் கேட்கவில்லை. 


புலம்பெயர் தொழிலாளர்கள் ஒருகாலத்தில் அன்ரிசர்வ் என்னும் பொதுப்பெட்டியில்தான் பயணம் செய்வார்கள். அது மிகக் கொடுமை. ஆனால் இப்போது முறையாகப் பதிவு செய்த ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிக்கிறார்கள், அந்த அளவுக்கு வருமானத்தில் உயர்ந்து விட்டார்கள் என்பதில் ஒரு பக்கம் மகிழ்ச்சி. 


கடந்த ஏதோவொரு தமிழகப் பயணத்தின்போது, சென்னையிலிருந்து டெல்லிக்கு விமானப் பயணம் என்பதால் திருப்பூரிலிருந்து சென்னைக்கு ரயிலில் வருவதற்காக திருப்பூரில் காத்திருந்தபோது, வேறொரு ரயிலுக்காகக் காத்திருந்த ஏராளமான பெண்களைப் பார்த்தேன். பேச்சுக் கொடுத்தபோது, பீகார், உபி, ஜார்க்கண்ட் மட்டுமல்ல மணிப்பூரிலிருந்தெல்லாம் புலம்பெயர்ந்து திருப்பூருக்கு வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது.



மேலும் படிக்க | Zomatoவின் அறிவிப்பு : விளக்கம் கேட்கும் போக்குவரத்து காவல்துறை


நண்பன் மாணிக்கத்துடன் பேசும்போது, காகித ஆலையில் தமிழ்நாட்டு இளைஞர்களே வேலைக்கு வருவதில்லை, வந்தாலும் ஒழுங்காக வருவதில்லை, அதனால் பெரும்பாலும் வடக்கத்தியர்கள்தான் என்று சொன்னான். அவர்களை சப்ளை செய்வதற்கென சில ஏஜென்ட்கள் இருக்கிறார்கள் என்றான். ஏஜென்ட்கள் லட்சக்கணக்கில் காசு பார்க்கிறார்கள். கோவையைச் சுற்றியுள்ள பல ஆலைகளில் வடக்கத்தியர்கள்தான். அதுவும் எந்த அளவுக்கு என்றால், அறிவிப்புகள், சுற்றறிக்கைகள்கூட இந்தியில்தான். 


அக்காவின் மருமகன் அன்னூரில் சிறிய அச்சகம் வைத்திருக்கிறார். அவருடைய வாடிக்கையாளர்களாக இருக்கும் மில்களிலிருந்து அவ்வப்போது சில வேலைகள் வருகின்றன. அவற்றை மொழியாக்கத்துக்காக எனக்கு அனுப்பி வைப்பார். அதாவது, தமிழிலிருந்து இந்திக்கு! ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் பெரும்பாலும் வடக்கத்தியர்கள் என்பதால் சுற்றறிக்கைகள் இந்தியில் அச்சிடப்படுகின்றன. நான்கு நாட்களுக்கு முன்னால் ஒரு கோரிக்கை வந்தது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரில், பெண்களுக்கான ஹாஸ்டலில் வார்டன் வேலைக்கு இந்தி தெரிந்த பெண் தேவை. தங்குமிடம் இலவசம். நர்சிங் படித்தவராக இருந்தால் இன்னும் நன்று! 


சில மாதங்களுக்கு முன்னால், தஞ்சையில் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் வாடகைக்கு ஓட்டும் ஒருவருக்கு இயந்திர உதவியாளர் தேவை என்று கேட்டார்கள். ஃபேஸ்புக்கில் பதிவு போட்டுக் கேட்கட்டுமா என்று நான் கேட்டேன். தமிழ்நாட்டு ஆட்கள் வேண்டாம், வேலையே செய்ய மாட்டார்கள், வடக்கத்தியர்கள்தான் வேண்டும் என்றார்கள். வடக்கத்திய ஆள் கிடைக்காததால், வாடகைக்கே போகாமல் சும்மா நிறுத்தி வைத்திருந்தார்கள். 



தோட்டப் பராமரிப்பு வேலையைச் சுத்தமாகச் செய்தது குறித்து உடுமலையைச் சேர்ந்த சுகுணா கடந்த வாரம் பதிவு எழுதியிருந்தார்கள்.  நூறுநாள் வேலைத்திட்டம் உழைப்பாளிகளைக் கெடுத்துவிட்டது என்று ஒருசாரார் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதே நூறு நாள் வேலைத் திட்டம் நாடு முழுக்கவும் இருக்கிறது. வடக்கே இருப்பவர்களை அது ஏன் கெடுக்கவில்லை? அவர்கள் எப்படி கடின உழைப்பாளிகளாகவே தொடர்கிறார்கள்? 


தமிழ்நாட்டில் கல்வி அதிகரித்துவிட்டது, அதனால் இந்த உடலுழைப்பு வேலைகளைச் செய்ய வேண்டிய நிலையில் இன்றைய இளைஞர்கள் இல்லை, உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாவதில்லை என்கிறார்கள் சிலர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் 600-700 ரூபாய் கேட்கும் வேலையை 300 ரூபாய்க்குச் செய்ய இவர்கள் தயாராக இருக்கிறார்கள். உண்மையில் இதுதான் காரணமா, இல்லை உடலுழைப்பு வேலைகளில் ஈடுபடுவதில் ஆர்வமில்லாதது காரணமா என்பதற்கு தரவுகள் ஏதும் இல்லை. எல்லா வேலைகளிலும் வடக்கிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள். 


பென்ஷன் போன்ற சமூகப் பாதுகாப்புகள் ஏதுமில்லாமல், விபத்துகள் ஏற்படும்போது நிவாரணங்கள் ஏதுமில்லாமல் சுரண்டப்படுகிறார்கள் என்பதும் உண்மைதான். அக்காவின் பேரன் நிசார் கோவையில் ஒரு மருத்துவமனையில் இருந்தபோது, துணையாக நானும் இருந்தபோது, கம்பத்திலிருந்து கீழே விழுந்து இடுப்பொடிந்து, நடமாட முடியாத நிலைக்குப் போகப்போகிற இளைஞன் ஒருவனையும் பார்த்தேன். ஆஸ்பத்திரியில் சேர்த்து, கைச்செலவுக்கு கொஞ்சம் காசு கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார் கான்டிராக்டர். 


மலிவு உழைப்பு சக்தியாக குறைந்த கூலிக்கு நிறைவாக வேலை செய்கிறார்கள். குடும்பத்தை விட்டுவிட்டுத் தனிநபர்களாக புலம்பெயர்ந்து, இங்கே சம்பாதித்து ஊருக்குப் பணம் அனுப்பிக் கொண்டிருந்த நிலை மாறி, குடும்பத்தோடு வருகிறவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அவர்களுடைய நுகர்வுகளால் தமிழகத்தில் வர்த்தகம் அதிகரித்து, வியாபாரிகளுக்குப் பயன் கிடைக்கிறது. தேயிலை எஸ்டேட்களில், தேயிலை ஆலைகளில், நூற்பாலைகளில், பனியன் கம்பெனிகளில், சாலை போடும் பணிகளில், மின்கம்பம் போடும் பணிகளில், கட்டிட வேலைகளில், டைல்ஸ் பதிக்கும் வேலைகளில், சலூன்களில், ஹோட்டல்களில் சப்ளையர்களாக, லாட்ஜ்களில் ரூம்பாயாக, மால்களில், சாலையோரக் கடைகளில் – ஏன், விவசாயம் தோட்ட வேலைகளில்கூட குடும்பம் குடும்பமாக நிறைந்து கொண்டே இருக்கிறார்கள். 



இதில் தவறு ஏதும் இல்லை. இந்தியாவில் யாரும் எந்த மாநிலத்திலும் குடியேறலாம்.


மேலும் படிக்க | நேர்மையாக பணிசெய்யும் டிராஃபிக் போலீஸுக்கு ‘கிஃப்ட்’ கொடுத்த 6 வயது சிறுமி


டெல்லியில் நான் வந்து குடியேறிய காலத்திலேயே தமிழர்கள் பத்து லட்சம் பேர் இருப்பதாகச் சொல்லப்பட்டது. அரசுத் துறைகளிலும் தனியாரிலும் இருப்பவர்களைவிட, உடலுழைப்பு சார்ந்த ஹவுஸ் மெய்ட் போன்ற வேலைகளில் இருக்கும் அடித்தட்டு மக்கள் ஏராளம். கேரளம், கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தவர்களையும் சேர்த்தால், சுமார் 30 லட்சம் பேர் இருக்கலாம். ஆனால் குடும்பம் குடும்பமாக இருந்தாலும், பல்லாண்டுகளாக இங்கேயே வசித்து, தமிழைப் பேச மட்டுமே தெரிந்த – எழுதப்படிக்கத் தெரியாத தில்லித்தமிழர்களாக இருந்தாலும் - இவர்களில் யாரும் இங்கு மொழியிலோ, பண்பாட்டிலோ, அரசியலிலோ தாக்கம் செலுத்தவில்லை, செலுத்த முடியாது. 


ஆனால் தமிழ்நாட்டில் மொழியிலும் உணவு முறைகளிலும் பண்பாட்டிலும் கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை புலம் பெயர்ந்தவர்கள் தமது சொந்த மாநிலத்தில் வாக்களிக்கச் செல்வார்கள். அதுவும், புலம் பெயர்ந்தவர்களில் 75 விழுக்காட்டினர்தான் வாக்காளர் அட்டை வைத்திருப்பதாகவும், அதிலும் 30 முதல் 50 சதவிகிதம் பேர்தான் சொந்த ஊருக்கு வாக்களிக்கச் செல்வதாகவும் ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் குடும்பத்துடன் குடியேறத் துவங்கும்போது, சொந்த ஊருக்கு வாக்களிக்கப் போகும் வழக்கங்கள் குறையும். தமிழ்நாட்டு வாக்காளர்களாக மாறுவார்கள். அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் அரசியலில் தாக்கம் செலுத்தக்கூடியவர்களாக புலம் பெயர்ந்தவர்கள் இருப்பார்கள்''.


இவ்வாறு  ஷாஜஹான் தெரிவித்துள்ளார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G