பவுண்டரி என நினைத்து ரன்-அவுட் ஆனா வீரர் :சிரிப்பை உண்டாக்கிய வீடியோ
ரன்-அவுட் ஆனதுக் கூட தெரியாமல் சக வீரருடன் பேசிக்கொண்டு இருந்த பாகிஸ்தான் வீரர். சிரிப்பை உண்டாக்கிய வீடியோ.
பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அசத்தலான ரன்-அவுட் செய்த ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர்.
அபுதாபியில் கடந்த 16 ஆம் தேதி பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 282 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 137 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சில் ஆடி வருகிறது பாகிஸ்தான் அணி.
பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சின் போது மூன்றாவது வீரராக களம் இறங்கிய அசார் அலி 64 ரன்கள் எடுத்திருந்த போது, ஆஸ்திரேலியா வீரர் பீட்டர் சிடில் வீசிய பந்தை அடித்து விளையாடினார். அந்த பந்து எல்லைகோட்டை நோக்கி சென்றது. டெஸ்ட் போட்டி என்பதால், பந்து பவுண்டரி சென்று விடும் என நினைத்த பாகிஸ்தான் வீரர் அசார் அலி, தன் சக வீரருடன் பேசிக்கொண்டு இருந்தார். ஆனால் பந்து எல்லைகோட்டை தொடவில்லை. ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் ஸ்டார்க் பந்தை கைப்பற்றி விக்கெட் கீப்பரை நோக்கி வீசினார். அதுக்கூட தெரியாமல் அசார் அலி பேசிக்கொண்டு இருந்தார்.
இதைச்சரியாக பயன்படுத்திக் கொண்ட ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் டிம் பெயின், அவரை ரன்-அவுட் செய்தார். அப்பொழுது பாகிஸ்தான் அணி 52.2 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்திருந்தது.
அசத்தலான ரன்-அவுட் இடம்பெற்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.