63 நாயன்மார்களுடன் ஆதியோகி தேர் பவனி! ஈஷாவுக்கு பாத யாத்திரை வந்த சிவ பக்தர்கள்!
Isha Mahashivaratri 2024 : பல்வேறு மாநிலங்களில் இருந்து ஈஷாவுக்கு பாத யாத்திரை வந்த சிவ பக்தர்கள்! 63 நாயன்மார்களுடன் ஆதியோகி தேர் பவனி... நாளை சிவராத்திரி மகோத்சவம்...
மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சிவ பக்தர்கள் கோவை ஈஷா யோக மையத்திற்கு நேற்று (மார்ச் 6) பாத யாத்திரையாக வருகை தந்தனர். சென்னை, பெங்களூரு, நாகர்கோவில், பட்டுக்கோட்டை, பொள்ளாச்சி, கோவை ஆகிய 6 இடங்களில் இருந்து வெவ்வேறு தேதிகளில் புறப்பட்ட குழுவினர் ஆதியோகி திருமேனியுடன் கூடிய தேர்களை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
அனைத்து குழுவினரும் ஆலாந்துறை பகுதிக்கு நேற்று மதியம் வந்து சேர்ந்தனர். அங்கிருந்து 63 நாயன்மார்களை தனி தனி பல்லக்குகளில் ஏந்தி ஆதியோகி தேர்களுடன் ஈஷாவுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களுக்கு ஈஷாவின் நுழைவு வாயிலான மலைவாசலில் இருந்து தியானலிங்கம் வரை கைலாய வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் ஹரியானாவைச் சேர்ந்த மதுராந்தா என்ற இளைஞர் உத்தரபிரதேசம் மாநிலம் வாராணாசியில் தொடங்கி 41 நாட்கள் 2,300 கி.மீ பாத யாத்திரையாக பயணித்து ஆதியோகியை தரிசனம் செய்தார். இந்த யாத்திரை தொடர்பாக அவர் கூறுகையில், ”சிவ பக்தியில் என்னை கரைத்து கொள்வதற்காக நான் இந்த பாத யாத்திரையை மேற்கொண்டேன். காசி முதல் கோவை வரையிலான இந்த யாத்திரை என்னுடைய நண்பர் ஒருவரும் என்னுடன் சேர்ந்து வருவதாக திட்டமிட்டு இருந்தோம். ஆனால், எதிர்பாராத விதமாக யாத்திரை தொடங்குவதற்கு முன்பு அவர் விபத்தில் சிக்கி ஐ.சி.யூவில் அனுமதிக்கப்படும் சூழல் உருவானது. இருந்தபோதும், நான் என்னுடைய யாத்திரையை திட்டமிட்டப்படி தொடர்ந்தேன். ஆதியோகி சிவனின் அருளால் ஐ.சி.யூவில் இருந்து மீண்டு வந்த அந்த நண்பர் என்னுடைய யாத்திரையில் இடையில் வந்து சேர்ந்து கொண்டார். இது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது” என கூறினார்.
மேலும் படிக்க | 300 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ‘யோகமான சிவராத்திரி’! நற்கதி கிடைக்க செய்யும் யோகங்கள்!
சென்னை குழுவினருடன் பாத யாத்திரை மேற்கொண்ட ஜனனி அவர்கள் கூறுகையில், ”சென்னையில் இருந்து புறப்பட்ட எங்கள் குழு 29 நாட்களில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் வழியாக பயணித்து வந்துள்ளது. பல கிராமங்களில் அங்குள்ள மக்கள் ஆதியோகியை தங்கள் வீட்டிற்கு அருகிலேயே தரிசனம் செய்ததை பெரும் பாக்கியமாக கூறினர். உடல் அளவில் இந்த யாத்திரை எனக்கு சவாலாக இருந்தாலும், மனதளவில் பெரும் நிறைவை தருகிறது” என்றார்.
இந்த யாத்திரையில் கலந்து கொண்ட அனைவரும் மகா சிவராத்திரிக்காக 40 நாட்கள் சிவாங்கா விரதம் இருந்து வருகின்றனர். தினமும் 2 வேளை மட்டுமே உணவு உட்கொள்ளும் அவர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று வந்த பிறகு தியானலிங்கத்தில் தங்கள் விரதத்தை நிறைவு செய்து கொள்வார்கள்.
ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் இந்தியாவின் தலைசிறந்த இசை கலைஞர்கள் சங்கர் மஹாதேவன், குருதாஸ் மான், தமிழ் நாட்டுப்புற பாடகர் திரு. மஹாலிங்கம், மும்பை தாராவி பகுதியைச் சேர்ந்த ராப்பர்ஸ் இசை குழுவினர் மற்றும் ஆப்பிரிக்கா, லெபனான், பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த இசை கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் மகாசிவராத்திரி நாளன்று இரவு முழுவதும் விழா கோலாகலமாக நடைபெறும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ