UAE-ல் பாகிஸ்தானின் சாதனையை துவம்சம் செய்த ஆஸ்திரேலியா!
நேற்று நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.
ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகள் முடிவடைந்து தற்போது அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன. முதலாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை வென்று பைனலுக்கு முன்னேறியது நியூஸிலாந்து அணி. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதின. 2016 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய அமீரகத்தில் ஒரு போட்டியில் கூட தோல்வி பெறாமல் பாகிஸ்தான் அணி தொடர்ந்து 16 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. இந்த சாதனையை முறியடித்து ஆஸ்திரேலியா அணி பைனலுக்கு முன்னேறி உள்ளது.
ஐக்கிய அமீரகத்தில் டாஸ் வெல்வது மிகவும் முக்கியமானதாக கருதப்படும் நிலையில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்த தொடர் முழுவதும் அசத்திய பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் இந்த போட்டியிலும் அசத்தினார். முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில் பாபர் அசாம் 39 ரன்களுக்கு வெளியேறினார். இரண்டு நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரிஸ்வான், நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி 52 பந்துகளில் 67 ரன்கள் விளாசினார். அதன்பின் களமிறங்கிய ஜமான் 55 ரன்கள் அடித்து அசத்தினார். இறுதியாக பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.
மிகவும் கடினமான இலக்கை எதிர்த்து ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு அப்ரிடி ஆரம்பத்திலேயே அதிர்ச்சியைக் கொடுத்தார். முதல் பந்திலேயே ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் அவுட் ஆகி வெளியேறினார். சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 41 ரன்களுக்கு சர்ச்சையான முறையில் வெளியேறினார். சதாப்கானின் சிறப்பான பந்து வீச்சினால் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி போட்டியை தன்பக்கம் மாற்றினார். கடைசி 5 ஓவரில் கிட்டதட்ட 60 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மேத்யூ வேட் மற்றும் ஸ்டாயினிஸ் அதிரடியாக விளையாடினர். அப்ரிடியின் பந்தில் தொடர்ந்து 3 சிக்சர்களை அடித்த மேத்வ் வேட் ஒரு ஓவர் மீதமிருக்க ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெறச் செய்தார்.
துபாயில் நடைபெற்ற கடைசி 16 போட்டிகளில் சிஎஸ்கே அணி மட்டுமே முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்றுள்ளது. நேற்று 176 ரன்கள் அடித்தும் பாகிஸ்தான் அணியால் வெற்றி பெற முடியவில்லை. வரும் 14ம் தேதி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் உலகக் கோப்பை டி20 போட்டி பைனலில் மோதுகின்றன. இரண்டு அணிகளுமே தங்களது முதல் உலகக் கோப்பைக்காக விளையாடுகின்றனர்.
ALSO READ உலக கோப்பை தோல்வி: ஐசிசி தரவரிசையில் கீழே இறங்கிய விராட் கோலி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR