இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைகளை மாற்ற நிர்வாகிகள் திட்டமிட்டு இருப்பதற்கு லோதா கமிட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லோதா கமிட்டி சிபாரிசின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இத்துடன் சீர்திருத்தங்களை அமல்படுத்த நிர்வாக கமிட்டியையும் நியமித்தது.
 
இந்த புதிய விதிமுறையின்படி 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் நிர்வாகியாக இருக்க முடியாது. மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஒருவர் 6 ஆண்டுகள் மட்டுமே தொடர்ச்சியாக பதவியில் நீடிக்க முடியும். 


அதன் பின்னர் மீண்டும் பதவிக்கு வர விரும்பினால் 3 ஆண்டுகள் இடைவெளி இருத்தல் அவசியம் ஆகும். மேலும் கிரிக்கெட் வாரிய செயலாளரை விட தலைமை செயல் அதிகாரிக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டது என்பது உள்பட பல அம்சங்கள் இதில் இடம் பெற்று இருந்தன. 


முன்னதாக கடந்த மாதம், நிர்வாக சீர்திருத்தங்கள் முடிந்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் நடைப்பெற்றது.


BCCI புதிய தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும், செயலாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் டிசம்பர் 1-ஆம் நாள் நடைபெற உள்ளது.


உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் கொண்டு வரப்பட்ட நிர்வாக சீர்திருத்தங்களை தங்களுக்கு சாதகமாக மாற்றம் செய்ய புதிய நிர்வாகிகள் திட்டமிட்டு இருப்பதாகவும், அது குறித்து பொதுக்குழுவில் விவாதிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


இது குறித்து லோதா தலைமையிலான கமிட்டியில் செயலாளராக இருந்த கோபால் சங்கரநாராயணன் தெரிவிக்கையில், ‘இந்திய கிரிக்கெட் வாரிய விதிமுறைகளை மாற்றம் செய்ய பொதுக்குழுவில் அனுமதி கிடைக்கும்பட்சத்தில் உடனடியாக இத்தகைய நிர்வாக சீர்திருத்தங்களை நீர்த்து போகச்செய்யும் முயற்சிகளை எதிர்த்து நாம் செயல்படாமல் இருந்தாலோ? அல்லது உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இந்த பிரச்சினையை கவனத்தில் கொள்ளாமல் விட்டாலோ? அது உச்சநீதிமன்றம் உத்தரவை கேலிக்கூத்தாக்கி விடும் என தெரிவித்துள்ளார்.


மேலும் கிரிக்கெட் வாரிய விவகாரங்களில் உச்சநீதிமன்றம் இன்னமும் கூட செயலாற்றி தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும். உச்சநீதிமன்றம் இந்த விஷயத்தில் தலையிடவில்லை என்றால் சீர்திருத்த முயற்சிகள் அனைத்தும் விரயமாகி விடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.