ஓய்வில் சென்றார் புவனேஷ்வர் குமார்; இந்தியாவிற்கு மேலும் ஒரு அடி!
தசைப்பிடிப்பு காரணமாக நேற்றைய போட்டியில் இருந்து வெளியேறிய இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார், அடுத்த 2 அல்லது 3 போட்டிகளுக்கு பங்கேற்கமாட்டார் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
தசைப்பிடிப்பு காரணமாக நேற்றைய போட்டியில் இருந்து வெளியேறிய இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார், அடுத்த 2 அல்லது 3 போட்டிகளுக்கு பங்கேற்கமாட்டார் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
மான்செஸ்டர் மைதானத்தில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பல பரீட்சை மேற்கொண்டன. இப்போட்டியில் பாகிஸ்தானை டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 89 ரன்களில் இந்திய அணி தோற்கடித்து 7-வது முறையாக உலகக் கோப்பையில் வென்ற அணி எனும் பெருமையை தக்கவைத்தது.
இந்த போட்டியில், புவனேஷ்வர் குமார் தனது 3-வது ஓவரை வீசியபோது அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இவர் தொடர்ந்து பந்துவீச இயலாமல் ஓய்வுக்கு சென்றார். அவரின் ஓவரில் மீதமிருந்த 2 பந்துகளை விஜய் சங்கர் வீசினார். அதன்பின் போட்டி முழுவதும் புவனேஷ்வர் குமார் பங்கேற்கவில்லை.
இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் புவனேஷ்வர் குமாரின் காயம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "அவரின் காயம் குணமடையும் வரை ஓய்வில் இருக்க வேண்டியிருப்பதால், அவருக்கு பதிலாக அடுத்து வரும் ஆட்டங்களில் ஷமி பந்துவீசுவார்" என விராட் கோலி தெரிவித்தார்.
மேலும் புவனேஷ்வர் குமார் அடுத்து 2 முதல் 3 போட்டிகளுக்கு விளையாட மாட்டார், புவனேஷ்வர் குமார் இருப்பு அணிக்கு மிகவும் முக்கியம், விரைவில் குணமடைவார் என நம்புகிறேன் எனவும் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் ஏற்கனவே காயம் காரணமாக தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஓய்வில் சென்றுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வீரர் காயம்காரணமாக ஓய்வில் சென்றிருப்பது அணிக்கு சற்று பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி வரும் 22-ஆம் தேதி நடைபெறவிருக்கும் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை சந்திக்கின்றது. இப்போட்டியில் இந்திய அணி எவ்வாறு சமாளிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.