கிரிக்கெட் இனி மெல்லச் சாகும்... ஐபிஎல் தொடரில் செய்ய வேண்டிய மாற்றங்கள் - என்னென்ன தெரியுமா?
IPL 2024 Impact Player Rule Change : தற்போது ஐபிஎல் தொடர் என்பது பேட்டர்களுக்கு மட்டும் சாதகமாக செயல்படும் சூழலில், இந்த மாற்றங்களை செய்வதன் மூலம் பந்துவீச்சாளர்களுக்கும் சாதகமாக ஆட்டம் மாறும். அவை குறித்து விரிவாக இதில் காணலாம்.
IPL 2024 Impact Player Rule Change : 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் தொடங்கும் போது பலருக்கும் ஒரு இனம்புரியாத உணர்வு இருந்தது. கங்குலி, ரிக்கி பாண்டிங் போன்ற எதிர் எதிர் துருவங்கள் எல்லாம் ஒரு அணியில் விளையாட போகிறார்களா என்ற கேள்வி அன்று பல ரசிகர்களின் மனங்களில் இருந்தது. குறிப்பாக, வீரர்களை ஏலம் எடுத்தது கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது எனலாம்.
இருப்பினும், ஐபிஎல் கிரிக்கெட் தொடங்கியபோது இது இரண்டு, மூன்று ஆண்டுகள் வரை தாக்குப்பிடிக்கும் அவ்வளவுதான் என்று பல வெளிநாட்டு வீரர்கள் நினைத்துள்ளனர், இதனை சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் அஸ்வினும் வீரர்களின் பெயரை குறிப்பிடாமல் உறுதிப்படுத்தினார். ஆனால், இந்த ஐபிஎல் ஒரு ஆலமரமாக வளர்ந்து, கிளைப் பரப்பி உலக கிரிக்கெட்டுக்கு பல்வேறு பலன்களை வழங்கி வருகிறது எனலாம்.
25 முறை 200+ ரன்கள்...
குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணி ஐபிஎல் தொடரால் பெற்ற நன்மைகளை இங்கு சொல்ல ஆரம்பித்தால் அது பெரிதாகிவிடும். விஷயம் அதுவல்ல, நடப்பு ஐபிஎல் தொடர் என்பது பேட்டர்கள் 'மட்டும்' ஆதிக்கம் செலுத்தும் களமாக மாறியிருக்கிறது. ஆம், முன்பெல்லாம் 180 அல்லது 200 ரன்கள் வந்தால் நாம் வாய்ப்பிளந்து ஆச்சர்யப்படுவோம். ஆனால் தற்போது 230 முதல் 250 ரன்கள் வரை அசால்ட்டாக அடிக்கின்றனர்.
மேலும் படிக்க | இஷான் கிஷானுக்கு மீண்டும் அபராதம் விதித்த பிசிசிஐ! ஏன் தெரியுமா?
ஒரு அணி என்றில்லாமல் ஏறத்தாழ பாதிக்கும் மேற்பட்ட அணிகள் இதை செய்கின்றனர் என்பதே நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம். நடப்பு ஐபிஎல் தொடரில் மட்டும் (ஏப். 27 லக்னோ vs ராஜஸ்தான் போட்டி வரை) மொத்தம் 25 முறை 200 ரன்கள் ஒரு இன்னிங்ஸ்களில் அடிக்கப்பட்டுள்ளது. 250 ரன்களை சன்ரைசர்ஸ் அணி மூன்று முறையும், கொல்கத்தா இரண்டு முறையும், பெங்களூரு, டெல்லி, பஞ்சாப் ஆகிய அணிகளும் ஒரு முறையும் அடித்துள்ளன. அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் 1 முறையாவது 200 ரன்களை அடித்துள்ளன.
ஒரு தலைப்பட்சமாகும் கிரிக்கெட்
கடந்தாண்டு தான் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக சிக்ஸர்கள், அதிக 200+ ரன்கள் ஸ்கோர்கள், அதிக சதங்கள், அதிக அரைசதங்கள், அதிக 200+ ரன் சேஸிங்கள் என பல சாதனைகள் (?) படைக்கப்பட்டது. ஆனால், நடப்பு ஐபிஎல் தொடரை கடந்தாண்டை முறியடிக்க தற்போது சீறிப்பாய்ந்து வருகிறது எனலாம். கடந்தாண்டு மொத்தம் 1,124 சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட நிலையில், தற்போதே 814 சிக்ஸர்கள் (44 லீக் போட்டிகள்) அடிக்கப்பட்டுவிட்டது.
ஒவ்வொரு ஆண்டும் தொடர் முன்னேறிக்கொண்டு தானே செல்கிறது என உங்களுக்கு தோன்றலாம், ஆனால் அது ஏன் பந்துவீச்சாளர்களுக்கு மட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ரன்கள் குவிக்கப்பட்டு வருகிறது என்பது மகிழ்ச்சிக்கரமான செய்தி அல்ல என்பதே இங்கு நாம் கூற வருவது. பேட்டர்களின் திறமையின் மீது எவ்வித கருத்துகளையும் இங்கு கூற விரும்பவில்லை, ஆனால் கிரிக்கெட் என்ற ஆட்டத்தை ஒருதலைப்பட்சமாக அதாவது பேட்டர்களுக்கான ஆட்டமாக பார்க்கக் கூடாது என்பது வாதமாக உள்ளது.
மூன்று முக்கிய விஷயங்கள்...
ரன்களும், சிக்ஸர்களும் அடிக்கப்பட்டால்தான் பார்வையாளர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பது முன்பு பலரின் கருத்தாக இருந்தது. ஆனால் தற்போது இப்படி 'குவிக்கப்பட்டு' வரும் ரன்கள் அயர்ச்சியையே அளிக்கிறது என ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது. ஆக, பார்வையாளர்கள் வீரர்களுக்கு இடையில் நடக்கும் அந்த சுவாரஸ்யமான போரையே விரும்புகிறார்களே ஒழிய, மிஷன்கள் வீடியோ கேம் விளையாடுவதை பார்க்க அல்ல.
மேலும் படிக்க | 'Dream 11 ஒரு மோசடி செயலி...' லட்சக்கணக்கில் ரூபாயை பறிகொடுத்த நபர் - பின்னணி என்ன?
நடப்பு தொடரில் (IPL 2024) இப்படி ரன்கள் குவிக்கப்படுவதற்கு முக்கிய காரணங்கள் என்றால் மூன்று விஷயங்களை நாம் அடிப்படையாக சொல்லலாம். முதலாவது, கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 'Impact Player'விதி; இரண்டாவது, மைதானங்களின் பவுண்டரி லைன்கள் மிகவும் அருகில் இருப்பது; மூன்றாவது, முக்கியமான ஒன்று, தட்டையான ஆடுகளங்கள். இந்த மூன்று விஷயங்கள்தான் நடப்பு தொடரில் இந்த பேட்டர்களின் ஆதிக்கத்திற்கு பெரும் பங்கை ஆற்றுகிறது என சின்னப்பிள்ளையை கேட்டாலும் சொல்லும்.
Impact Player விதி - எதற்கு?
Impact Player விதி டி20 பிரான்சைஸ் கிரிக்கெட்டின் மார்க்கெட்டிங் உத்திகளில் பெரும் பாய்ச்சல் எனலாம். ஒரு அணி தங்களின் இன்னிங்களுக்கு ஏற்ப கூடுதலாக ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்டர்களையும், பந்துவீச்சாளர்களையும் வைத்துக்கொள்ளலாம். பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளத்தில் இருந்து எவ்வித உதவியும் இல்லாத போது, பேட்டர்கள் துணிந்து ஆட நினைக்கிறார்கள்.
பின்வரிசையில் அதாவது 9வது, 10வது வீரர்கள் பேட்டர்கள் இருப்பதால் விக்கெட்டை துச்சமாக நினைத்து முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாட நினைக்கிறார்கள். இந்த விதியை நீக்க வேண்டும் என்பது பலரின் கோரிக்கை என்றாலும், இதில் இருந்து ஐபிஎல் நிர்வாகம் பின்வாங்குமா என்பது கேள்விக்குறிதான்.
பவுண்டரி லைன்: சிறிதினும் சிறிது கேள்
பெங்களூரு சின்னசாமி, டெல்லி அருண்ஜெட்லி, மும்பை வான்கடே ஆகியவை 'சிறிதினும் சிறிது கேள்' என்பது போல் பவுண்டரி லைன்கள் (Boundary Line) 57, 58 மீட்டர் வரைதான் வைத்திருக்கின்றன. 70 மீட்டருக்கே நீங்கள் வைத்தாலும் தற்போதைய பேட்டர்கள் அதிலும் சிக்ஸர்களை பறக்கவிடும் வல்லமை கொண்டவர்கள் என்றாலும், பந்துவீச்சாளர்களுக்கு என அந்த சாதகத்தை கூட ஏற்படுத்த மறுப்பதுதான் கவலைக்குரிய விஷயம். டெல்லி, பெங்களூருவை விடங்கள் மற்ற மைதானங்களிலாவது ஒரு நிலையான பவுண்டரி டிஸ்டன்ஸை நிர்ணயிக்க வேண்டியது அவசியமாகிறது.
மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் போக வாய்ப்பு இருக்கா...? கால்குலேட்டர் சொல்வது என்ன?
தார் ரோடு ஆடுகளங்கள்
நடப்பு தொடரில் பாதிக்கும் மேற்பட்ட போட்டிகள் முடிந்துவிட்டன. இருப்பினும் மைதானங்களின் ஆடுகளங்களில் (Pitch Changes) எவ்வித மாற்றங்கள் இல்லை. காரணம், தற்போது பல ஆடுகளத்தை பராமரிப்பதில் பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன, முன்பை போல ஆடுகளங்கள் உடைவதே இல்லை என்பது பல மூத்த வீரர்களின் குரலாக இருக்கிறது.
தார் ரோடு போன்ற ஆடுகளங்கள் பேட்டர்களை ஒரு பரிமாண வீரராக மட்டுமே மாற்றும். சுழற்பந்துவீச்சில் இப்போதெல்லாம் இந்திய வீரர்கள் தடுமாறுவதற்கும் இதுதான் முக்கிய காரணம் எனலாம். இந்த ஆடுகளங்களால் ஆப் ஸ்பின் என்ற வகையாறவே தற்போது காணாமல் போயுள்ளது. அஸ்வினை தவிர வேறு யாரும் நம் மனங்களில் டக்கென ஞாபகத்திற்கு வர மறுக்கிறார்கள். லெக் ஸ்பின்னர்கள், மிஸ்ட்ரி ஸ்பின்னர்கள்தான் இப்போது எல்லாம். பனியும் வந்துவிட்டால் பந்துவீச்சாளர்களின் நிலை இன்னும் மோசமாகிறது.
எனவே, ஆடுகளம், பவுண்டரி லைன், பவர்பிளே ஓவர்கள், இம்பாக்ட் பிளேயர் விதி இவற்றில் ஏதும் மாற்றங்கள் கொண்டுவரும்பட்சத்தில் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்கள் என்ற இனம் உயிர் வாழும், இல்லையெனில் கிரிக்கெட் இனி மெல்லச் சாகும்.
மேலும் படிக்க | CSK vs SRH: பவர்பிளேயில் தீக்சனா! சென்னை அணியில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ