இந்திய அணியின் பிளேயிங் லெவன்... ஜிம்பாப்வே போட்டியில் இதுதான் பிளான்!
IND vs ZIM: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
IND vs ZIM: இந்திய கிரிக்கெட் அணிக்கு தற்போதைய புதிய விடியல் பிறந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். 11 ஆண்டுகளாக ஐசிசி கோப்பைக்கு ஏங்கிக் கிடந்த ரசிகர்களை இந்திய அணி, ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்று அதற்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்திருக்கிறது. ரோஹித், கோலி, ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 அரங்கில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். இனி அவர்களை டெஸ்ட் மற்றும் ஓடிஐ அரங்கில் மட்டுமே பார்க்க முடியும்.
இதன்மூலம், இந்திய டி20 அணி முழுவதுமாக இளம் வீரர்களின் ஆதிக்கத்திற்கு போகிறது எனலாம். ஹர்திக், அக்சர், ரிஷப் பண்ட், சூர்யகுமார், பும்ரா ஆகியோர் இன்னும் சற்று காலம் சர்வதேச டி20 கிரிக்கெட் பக்கம் செல்ல மாட்டார்கள் எனலாம். அடுத்தடுத்து ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய தொடர்கள் அடுத்தாண்டு நடைபெற இருப்பதால் வேலைப் பளுவை குறைக்க இனி அனைத்து சர்வதேச டி20 தொடர்களிலும் இந்திய இளம் அணிக்கே வாய்ப்பு வழங்கப்படும் எனலாம்.
IND vs ZIM: எங்கு, எப்போது பார்ப்பது?
அந்த வகையில், இந்திய அணி தற்போது ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஜூலை 6ஆம் தேதி முதல் ஜூலை 14ஆம் தேதி ஜிம்பாவ்வே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி விளையாட உள்ளது. இதில் அனைத்து போட்டிகளும் ஜிம்பாப்வே தலைநகர் ஹராரே நகரில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற உள்ளன. இந்திய நேரப்படி போட்டிகள் மாலை 4.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும். தொலைக்காட்சியில் சோனி ஸ்போர்ட்ஸ் சேனலிலும், சோனிலிவ் ஓடிடி தளத்திலும் இதனை நேரலையில் காணலாம்.
முதலிரண்டு போட்டிகளுக்கு மட்டும்...
தற்போது சுப்மான் கில் தலைமையிலான இந்திய அணி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரின்கு சிங், ரியான் பராக் என இளம் பேட்டர்கள் முழுவதும் இடம்பெற்றுள்ளனர். முதலிரண்டு போட்டிகளுக்கு மட்டும் சாய் சுதர்சன், ஜித்தேஷ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்ற இரண்டு போட்டிகளில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், தூபே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். நீண்ட நாள் கழித்து வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் இடம்பிடித்திருக்கிறார்.
வேகப்பந்துவீச்சில் ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் உள்ளனர். இதில் முதலிரண்டு போட்டிக்கு மட்டும் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்பந்துவீச்சில் ரவி பீஷ்னோய் உள்ளார். விக்கெட் கீப்பர் பேட்டராக துருவ் ஜூரேல் இருப்பார். முதலிரண்டு போட்டிகளில் ஜித்தேஷ் சர்மாவும், கடைசி மூன்று போட்டிகளில் சஞ்சு சாம்சனும் இருப்பார்கள்.
இந்திய அணியின் பிளான் என்ன?
இதை பார்க்கும் போது முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணியில் சுப்மான் கில் - அபிஷேக் சர்மா ஆகியோர் ஓப்பனிங்கில் இறங்க வாய்ப்புள்ளது. அதிரடியான ஓப்பனிங்கிற்கு பின் ருதுராஜ் கெய்க்வாட், ரியான் பராக், ரின்கு சிங், துருவ் ஜூரேல், வாஷிங்டன் சுந்தர் என பேட்டிங் வரிசை நீளும். இதில் ரியான் பராக், அபிஷேக் சர்மா சுழற்பந்துவீச்சில் ஓரிரு ஓவர்கள் கைக்கொடுப்பார்கள். வாஷிங்டன் சுந்தர் - ரவி பீஷ்னோய் ஆகியோர் பிரதான சுழற்பந்துவீச்சாளர்களாக இருப்பார்கள். இதில் வாஷிங்டன் பவர்பிளே ஓவர்களிலும் வீசுவார்.
மேலும் மூன்று பிரதான வேகப்பந்துவீச்சாளர்கள் அணியில் இருப்பார்கள். இடதுகை வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் இடம்பெறுவார்கள். கலீல் - தேஷ்பாண்டே - வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பவர்பிளே ஓவர்களை வீசினார்கள் என்றால், மிடில் ஓவர்களில் பீஷ்னோய், சுந்தர் தங்களின் பங்களிப்பை செலுத்துவார்கள். 12ஆவது ஓவருக்கு பின்னர் முகேஷ் குமார் பந்துவீச வருவார். டெத் ஓவர்களில் முகேஷ் உடன் தேஷ்பாண்டே மற்றும் கலீல் ஆகியோரும் கைக்கொடுப்பார்கள்.
இந்திய அணியின் பிளேயிங் லெவன் (கணிப்பு)
சுப்மான் கில் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ரியான் பராக், ரின்கு சிங், துருவ் ஜூரேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பீஷ்னோய், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே
மேலும் படிக்க | அடுத்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்ற அணிகளின் பட்டியல் இதோ..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ