IPL: பஞ்சாப்பை பீஸ் பீஸ் ஆக்கிய குஜராத்... வெற்றிக்கு உதவிய 3 தமிழக வீரர்கள்!
PBKS vs GT Match Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
PBKS vs GT Match Highlights: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நடப்பு 17வது ஐபிஎல் சீசனில் தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமையான இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. ஒவ்வொரு போட்டியும் முக்கியத்துவம் நிறைந்த போட்டி ஆகும். அந்த வகையில், மாலையில் நடந்த போட்டியில் ஆர்சிபி அணி கொல்கத்தாவிடம் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி தொடரில் இருந்து ஏறத்தாழ வெளியேறிவிட்டது.
அதை தொடர்ந்து, பஞ்சாபில் உள்ள முல்லான்பூர் மைதானத்தில் குஜராத் டைட்ன்ஸ் அணியுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி (PBKS vs GT) மோதியது. இந்த தொடரில் முதல் கட்டத்தில் குஜராத்தை அணியிடம் பஞ்சாப் த்ரில் வெற்றி பெற்றிருந்தது. ஷஷாங்க் சிங், அஷுடோஷ் ஷர்மா ஆகியோர் அந்த போட்டியில்தான் முதல்முறையாக கடைசி வரை விளையாடி அணிக்கு வெற்றியை பெற்று தந்தனர். எனவே இன்றைய போட்டியின் மீதும் எதிர்பார்ப்பு இருந்தது.
பஞ்சாப் அணிக்கு பின்னடைவு
அதன்படி, டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆடுகளம் மெதுவாக செயல்படும் என்பதை கருத்தில் கொண்டு பஞ்சாப் இந்த முடிவை எடுத்தது. ஆனால், அது அந்த அணிக்கே பின்னடைவாக அமைந்தது.
பிரப்சிம்ரன் சிங் உடன் சாம் கரன் ஓப்பனிங் இறங்கினார். பிரப்சிம்ரன் பவர்பிளேவில் இன்று அதிரடியாய் விளையாடினார். குறிப்பாக, சந்திப் வாரியர் வீசிய ஓவரில் 21 ரன்கள் குவிக்கப்பட்டது. இருப்பினும் பவர்பிளேவின் கடைசி ஓவரில் மோகித் சர்மாவிடம் பிரப்சிம்ரன் சிங் வீழ்ந்தார். அவர் 21 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 35 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
சாதித்த சாய் கிஷோர்
சாம் கரன் 19 பந்துகளில் 20 ரன்களை எடுத்தும், ரைலி ரூசோ 7 பந்துகளில் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இம்பாக்ட் வீரராக களமிறங்கிய ஹர்பிரீத் சிங் பாட்டீயாவும் இன்று சொதப்பலாகவே விளையாடினார். ஹர்பிரீத் பிரர் ஆறுதல் அளிக்கும் விதமாக 12 பந்துகளில் 29 ரன்களை அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 142 ரன்களை எடுத்து ஆல்-அவுட்டானது. ஹர்பிரீத் சிங் பாட்டீயா 19 பந்துகளில் 14 ரன்களையே எடுத்திருந்தார்.
பஞ்சாப் அணியின் பேட்டிங்கை பீஸ் பீஸாக நறுக்கியது சாய் கிஷோரின் சுழல்தான். இன்று குஜராத் சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டும் 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், அதில் சாய் கிஷோர் நான்கு விக்கெட்டுகளை தூக்கினார். குறிப்பாக, குஜராத் அணி பஞ்சாப் உடன் மோதிய போட்டியில் சிறப்பாக விளையாடிய ஷஷாங்க் சிங், அஷுடோஷ் ஷர்மா ஆகியோரை சாய் கிஷோர் (Sai Kishore) தன் வலையில் சிக்கவைத்தார். பீல்டிங்கில் இரண்டு சிறப்பான கேட்ச்களை மற்றொரு தமிழக வீரரான ஷாருக்கான் (Shahrukh Khan) பிடித்தார்.
நிதானமாக வென்றது குஜராத்
143 ரன்கள் என்ற இலக்கை குஜராத் சற்று நிதானமாகவே துரத்தியது. சாஹா இன்றும் சொதப்பினார். 11 பந்துகளில் 1 பவுண்டரியை மட்டும் அடித்து 13 ரன்களை எடுத்தார். சுப்மான் கில் 35, மில்லர் 3, சாய் சுதர்சன் (Sai Sudharsan) 31, ஓமர்சாய் 13 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும் ராகுல் தெவாட்டியா சிறப்பாக விளையாடினார்.
ஷாருக் கான் 8, ரஷித் கான் 3 ரன்களில் ஆட்டமிழந்தாலும் தெவாட்டியா 5 பந்துகள் மிச்சமிருக்க ஆட்டத்தை முடித்துவைத்தார். அவர் 18 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 36 ரன்களை சேர்த்தார். பஞ்சாப் பந்துவீச்சில் ஹர்ஷல் படேல் 3, லியம் லிவிங்ஸ்டன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சாய் கிஷோர் ஆட்ட நாயகனாக தேர்வானார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ