மயங்க் யாதவ் வேகத்திற்கு இதுதான் காரணமா...? அவரின் தாயார் பகிர்ந்த சீக்ரெட்
Mayank Yadav Food Diet: ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்துவீசிவரும் மயங்க் யாதவின் உணவுமுறை குறித்து அவரது தாயார் மம்தா ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
Mayank Yadav Food Diet: கிரிக்கெட் உலகில் தற்போது இந்தியா அடைந்திருக்கும் இடம் என்பது கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் யாராலுமே யூகித்திருக்க முடியாது. இந்தியாவில் விளையாட்டு ரீதியிலான சந்தையில் கிரிக்கெட் மட்டுமே பெரும்பான்மை பங்கை வகிக்கின்றது. உலகிலேயே அதிக செல்வம் கொழிக்கும் கிரிக்கெட் வாரியம் என்பது பிசிசிஐ தான். கிரிக்கெட்டில் இந்தியாவின் உயரத்திற்கு ஐபிஎல் தொடரே ஒரு பொருத்தமான உதாரணமாக இருக்கும்.
1983ஆம் ஆண்டுக்கு பின்னர் கிரிக்கெட் இந்தியாவின் பரந்துப்பட்ட நகரங்களில் கோலோச்சியது. அதில் இருந்து ஊக்கமடைந்து வந்த அடுத்த தலைமுறைதான் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சௌரப் கங்குலி, விவிஎஸ் லக்ஷமன் என பலரையும் கூறலாம். இவர்களுக்கு பின் சேவாக், ஜாகீர் கான், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் என வலுவான வீரர்கள் வருகை புரிந்தாலும், இந்தியாவின் மிகவும் பின்தங்கிய மாநிலமான ஜார்க்கண்டில் இருந்து வந்த மகேந்திர சிங் தோனிதான் இந்திய அணி முகத்தை மாற்றினார் எனலாம், அதில் கங்குலிக்கும் பெரிய பங்கிருப்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இந்திய அணியின் மிகப்பெரிய பிரச்னை
தோனியும் தலைமையில் கோப்பைகள் வென்றது, சச்சினுக்கு பின் விராட் கோலி என இந்திய கிரிக்கெட் வளர்ந்துகொண்டே வருகிறது. 2008க்கு பின் இந்திய கிரிக்கெட்டில் ஐபிஎல் தொடரின் தாக்கத்தை தவிர்க்கவே முடியாது. இப்போதும் கூட, வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற இருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் (ICC T20 World Cup 2024) இந்திய அணியின் தேர்வில் நடப்பு ஐபிஎல் தொடரும் (IPL 2024) நிச்சயம் தாக்கம் செலுத்துவதை நம்மால் பார்க்க முடிகிறது.
மேலும் படிக்க | 2024 டி20 உலகக் கோப்பைக்கு முன் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்தியா!
இப்படி இந்தியா கிரிக்கெட்டின் உச்சத்தில் இருப்பதாக கூறப்பட்டாலும், உலகத்தரத்தில் பேட்டர்களை தயாரிக்கும் அளவிற்கும், சுழற்பந்துவீச்சாளர்களை கொண்டு வரும் அளவிற்கும் வேகப்பந்துவீச்சாளர்களை இந்தியா கண்டடைவது குறைவாக உள்ளது. அதாவது, மீடியம் பேஸர்கள் இன்றி பிரதான அதி வேகப்பந்துவீச்சாளராக இந்திய அணியில் இப்போது யாரும் இல்லை. அதாவது, 150 கி.மீ., வேகத்தில் தொடர்ச்சியாக வீசக்கூடியவர்கள் யாருமில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இந்திய அணியின் கட்டமைப்பின் அடிப்படையிலேயே அதில் சில பிரச்னைகள் இருப்பதாக வல்லுநர்கள் எப்போதும் கூறுவார்கள்.
மயங்க் யாதவின் வருகை
ஆனால், இந்த ஐபிஎல் யுகத்தில் இந்தியாவுக்கு அந்த தலைவலியும் தற்போது குறைய தொடங்கியிருக்கிறது. இளம் வீரர்களான உம்ரான் மாலிக், மயங்க் யாதவ் ஆகியோர் 150 கி.மீ., வேகத்தில் இயல்பாக பந்துவீசக்கூடியவர்களாக உள்ளனர். இவர்களை சரியான பயிற்சிக் கொடுத்து இந்திய அணி நிர்வாகம் வளர்த்தெடுக்கும்பட்சத்தில் இந்தியாவுக்கு அவர்கள் பல வெற்றிகளை குவித்து தரும் காலம் வெகுத்தொலைவில் இல்லை எனலாம்.
அந்த வகையில், நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக 2 போட்டிகளில் மட்டும் விளையாடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி 5.13 எகானமியை வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 156.7 கி.மீ., வேகத்தில் வீசி மயங்க் யாதவ் அத்தனை பேரையும் அசரவைத்தார். அவர் விரைவில் இந்திய அணிக்கு காலடி எடுத்து வைப்பார் என பலரும் ஆருடம் கூறி வந்தாலும் மயங்க் யாதவின் உணவுமுறை குறித்தும், அவர் குறித்தும் அவரது தாயார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
மேலும் படிக்க | முஸ்தாபிசுர் ரஹ்மானுக்கு பதிலாக சென்னை அணியில் இடம் பெறப்போவது யார்?
கிருஷ்ண பக்தர்
மயங்க் யாதவின் (Mayank Yadav) தாயார் மம்தா கூறுகையில்,"மயங்க் யாதவ் முன்பு அசைவம் சாப்பிட்டு வந்த நிலையில், தற்போது சைவத்திற்கு மாறிவிட்டார். அவர் கடந்த 2 ஆண்டுகளாக சைவ உணவுக்கு மாறிவிட்டார். அவர் சாப்பிடுவதற்கு என்ன உணவை கேட்டாலும், அதன்படி அவருக்கு அந்த உணவை வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். அவர் எதுவும் வித்தியாசமாக சாப்பிடவில்லை. பருப்பு, ரொட்டி, அரிசி, காய்கறி, பால் ஆகியவற்றைதான் சாப்பிடுகிறார்.
அவரின் உடலுக்கு அசைவம் சரியாக இல்லை என அவரே கூறினார். அசைவத்தை கைவிட்டதற்கு அவர் இரண்டு காரணங்களை கூறினார். முதலில், அவர் கடவுள் கிருஷ்ணன் மீது நம்பிக்கை வைக்க தொடங்கிவிட்டதாகவும், அதனால் அசைவம் சாப்பிடுவதில்லை எனவும் கூறினார். இருப்பினும், அவர் அசைவம் சாப்பிடாததற்கான காரணத்தை நாங்கள் அவரிடம் கேட்கவில்லை. தான் செய்வது அனைத்தும் தனது விளையாட்டுக்கும், உடலுக்கும் தேவையானது என்று அவரே தெரிவித்தார்" என்றார்.
மேலும் மயங்க் யாதவின் தாயார், தனது மகன் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று ஆசை தனக்கிருப்பதாகவும் தெரிவித்தார். வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் மயங்க் யாதவ் விளையாட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இல்லையெனில் அவருக்கு தகுந்த பயிற்சி அளித்து, வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு இந்திய அணி அவரை தயார் செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | டெல்லிக்கு எதிராக மிகப்பெரிய வெற்றி பெற்ற கேகேஆர்! ஐபிஎல் புள்ளிப் பட்டியல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ