இனி இந்திய அணியின் ஓப்பனிங்கில் இவர்தான்... கம்பீர் களமிறக்கும் `இந்திய சுனில் நரைன்`
Team India: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீர் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்களை செய்து வரும் நிலையில், அதில் நடைபெற இருக்கும் முக்கிய மாற்றம் குறித்து இங்கு காணலாம்.
India National Cricket Team: நேற்று இரண்டு கிரிக்கெட் போட்டிகள் ஒரே நேரத்தில் நடைபெற்றன. ஒன்று, இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியும், மற்றொன்று தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் (TNPL 2024) லைகா கோவை கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் மோதிய இறுதிப்போட்டியும் ஆகும். இந்தியாவை வீழ்த்தி இலங்கை ஓடிஐ தொடரில் முன்னிலை பெற்றது. 2023ஆம் ஆண்டு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி, முதல்முறையாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டிஎன்பிஎல் கோப்பையைும் வென்றது.
இந்தியாவின் தோல்வியையும், திண்டுக்கலின் வெற்றியையும் இங்கு குறிப்பிடுவதற்கு காரணம் இருக்கிறது. அதை சற்று பின்னர் பார்ப்போம். முதலில், இந்திய அணியின் தோல்வி குறித்து பார்ப்போம். முதல் போட்டியில் செய்த அதே தவறைதான் இரண்டாவது போட்டியிலும் இந்தியா செய்தது. ஓப்பனிங் ஓரளவுக்கு அதிரடியாக அமைந்தாலும், அந்த அதிரடியை மிடில்-ஆர்டர் தொடரவில்லை. விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தங்களது பணியை இந்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக ஆற்றவில்லை.
இந்திய அணியின் மிடில் ஆர்டர் குழப்பங்கள்
மறுபுறம் மிடில் ஆர்டரில், பேட்டிங் வரிசையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அதனை குழப்பங்கள் என்றும் சொல்லலாம். முதல் போட்டியில், 4ஆவது இடத்தில் அக்சர் பட்டேலும், நேற்று 4ஆவது இடத்தில் ஷிவம் தூபேவும் களமிறங்கினர். ஷிவம் தூபேவை சேஸிங்கில் ஃபினிஷராக கம்பீர் - ரோஹித் இணை அணுகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்றைய அணுகுமுறை சற்று குழப்பத்தை உண்டாக்கியது. ஷ்ரேயாஸ், கேஎல் ராகுல் ஆகியோர் இன்னும் ஒரு ஆர்டர் கீழே இறங்கி விளையாடுவது மிடில் ஆர்டரில் குழப்பத்தை உண்டாக்குகிறது.
மேலும் படிக்க | இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை! இஷான் கிஷன் எடுத்த அதிரடி முடிவு!
இந்திய அணியில் ஏற்படும் மாற்றங்கள்
துணை கண்டத்தில் விளையாடும்போது சுழலை அதிரடியாக எதிர்கொள்ளும் வீரர்களை அணியில் வைத்திருக்க வேண்டும். ஷ்ரேயாஸ், கேஎல் ராகுல் சுழலை நல்ல எதிர்கொள்வார்கள் என்றாலும் ரிஷப் பண்ட் போன்றோரும் அந்த இடத்தில் இருந்தாக வேண்டும். மேலும் ஆட்டச் சூழலை கணித்து அதற்கேற்ப விளையாடவும் வீரர்கள் தேவை எனலாம். கம்பீரின் வருகைக்கு பிறகு இந்திய அணி பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருப்பதால், அவரின் அடுத்தடுத்த அதிரடி முடிவுகளை நாம் எதிர்பார்க்கலாம்.
அஸ்வின் காட்டிய அதிரடி
மற்றொருபுறம், டிஎன்பில் இறுதிப்போட்டியை இதோடு ஒப்பிடவில்லை. டிஎன்பிஎல் கோப்பையை கைப்பற்றிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிசந்திரன் அஸ்வினின் பேட்டிங்கில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையே, இந்திய அணியின் தடுமாற்றத்துடன் ஒப்பிட விரும்புகிறேன். திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தொடக்கத்தில் சற்று சருக்கினாலும், அதன்பின் சுதாரிப்புடன் விளையாடி பிளேஆப் சுற்றுக்கு முன்னேற்றியது. எலிமினேட்டர், குவாலிஃபயர் 2 மற்றும் இறுதிப்போட்டி ஆகிய மூன்று போட்டிகளிலும் வேற லெவல் ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை தட்டிச்சென்றிருக்கிறது.
இதில், பிளே ஆப் சுற்றில் ரவிச்சந்திரன் அடுத்தடுத்து மூன்று அரைசதங்களை அடித்து மிரட்டினார். அதுவும் எலிமினேட்டர் மற்றும் இறுதிப்போட்டியில் ஒன்-டவுனில் இறங்கியும், குவாலிஃபயர் 2 போட்டியில் ஓப்பனிங்கில் இறங்கியும் அஸ்வின் அரைசதம் அடித்து அவரது அணியின் வெற்றிக்கு தனது பந்துவீச்சால் மட்டுமின்றி, பேட்டிங்கின் மூலமாகவும் பங்களித்தார். இனி பௌலர்கள் பந்துமட்டும் வீசினால் போதாது, பேட்டர்கள் பேட்டிங் மட்டும் செய்தால் போதாது என்ற விதியின் அடிப்படையில் பேட்டிங்கிற்கு பிரத்யேக பயிற்சி பெற்றதன் மூலம் அஸ்வின் இத்தகைய முன்னேற்றத்தை அடைந்துள்ளார்.
செய்வாரா கம்பீர்?
இங்குதான், டிஎன்பிஎல் வெற்றியும், இந்தியாவின் தோல்வியும் ஒரே புள்ளியில் சந்திக்கின்றன எனலாம். அதாவது, இந்தியாவின் ஒருநாள் அணியில் இடம்பிடிக்க அஸ்வினுக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிகளில் 11-40 ஓவர்கள் வரை வெளிவிட்டத்தில் நான்கு பேர் மட்டுமே பீல்டிங் செய்ய வேண்டும் என்பதால் முழு நேர ஆஃப் ஸ்பின்னர்களுக்கான தேவை குறைந்தது, இதனால் இந்திய அணியிலும் அஸ்வினுக்கு இடம்கிடைப்பது அரிதானது.
2023 உலகக் கோப்பையிலேயே அக்சர் படேல் காயத்திற்கு பிறகுதான் அஸ்வின் அணிக்குள் கொண்டுவரப்பட்டார். இப்போது பேட்டிங் சிறப்பாக இருப்பதால் இவரை பயன்படுத்திக்கொள்வது இந்திய அணிக்கு நன்மையேயாகும். அஸ்வின் கிரிக்கெட் நுணுக்கங்களை அறிந்தவர், தலைமை பண்புக்கு ஏற்றவர், சீனியரும் கூட... எனவே, கௌதம் கம்பீர் நிச்சயம் அஸ்வினை பயன்படுத்துவார் என எதிர்பார்க்கலாம். அதுவும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைனை ஓப்பனிங்கில் களமிறக்கி எப்படி மேஜிக் நடத்தினாரோ, அதேபோல் அஸ்வினை ஓப்பனங்கில் கொண்டுவரவும் கம்பீர் தயங்க மாட்டார் எனலாம்.
மேலும் படிக்க | யார் இந்த ஜெஃப்ரி வாண்டர்சே? இந்திய அணியை புரட்டிப்போட்ட ஸ்பின்னர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ