இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்டிலும் இந்திய அணி தோல்வியடைந்ததால், 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது இங்கிலாந்து....! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 7-ஆம் நாள் துவங்கி நடைப்பெற்று வருகிறது. நேற்றைய முன்தினம் நான்காவது நாள் ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு 464 ரன்கள் இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்தது. இதனை அடுத்து, களமிறங்கிய இந்திய அணியில் தவான் (1), புஜாரா (0), விராட் கோலி (0)  அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்தியா 2 ரன்னிற்குள் 3 விக்கெட்டை இழந்தது. 


5-ம் நாள் ஆட்டம் நேற்று தொடங்கிய நிலையில், ரஹானே சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடி 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய விஹாரி 0 ரன்களில் அவுட் ஆனார். திடீர் திருப்பமாக, ராகுல் - பந்த் ஜோடி பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.


ராகுல் தனது சதத்தை பதிவு செய்ய அவருக்கு பக்க பலமாக பந்த் நிதானமாக விளையாடினார். ரஷித் பந்தில் ராகுல் 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறாவிட்டாலும் டிரா செய்து விடும் என்று நினைத்த நிலையில், ராகுல் அவுட் ஆனது ஏமாற்றமளித்தது.


சிறப்பாக விளையாடி முதல் சதத்தை பதிவு செய்த பந்த், 114 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் இறங்கிய ஜடேஜா, இஷாந்த், சமி ஆகியோரும் சொற்ப ரன்களில் அவுட் ஆக, 345 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.


விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இரண்டாவது இன்னிங்சில் சதமடித்த இங்கிலாந்து வீரர் குக், இந்த போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 


இங்கிலாந்தின் சாம் கரன், இந்திய அணியின் விராட் கோலி ஆகியோருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.