விபத்தில் சிக்கிய ஐபிஎல் வீரர்... ரூ.3.60 கோடிக்கு ஏலம்போனவருக்கு காயம் - நடந்தது என்ன?
IPL 2024: கடந்த ஏலத்தில் ரூ.3.60 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஏலம் போன முக்கிய வீரர் பைக்கில் செல்லும்போது விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டுள்ளது.
IPL 2024, Robin Minz: ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் இந்திய கிரிக்கெட்டில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது. டி20 கிரிக்கெட் மட்டுமின்றி டெஸ்ட், ஒருநாள் போட்டிகளிலும் ஐபிஎல் பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
உதாரணத்திற்கு பும்ரா ஐபிஎல் மூலம் வெளிச்சத்திற்கு வந்து தற்போது மூன்று பார்மட்களிலும் உலகின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளராக உருவெடுத்திருக்கிறார். பும்ரா மட்டுமின்றி பல வீரர்களின் வாழ்வை ஐபிஎல் தொடர் முற்றிலுமாக மாற்றி உள்ளது. பொருளாதார ரீதியாக ஐபிஎல் அவர்களின் வாழ்வையும் உயர்த்தியுள்ளது எனலாம்.
தோனியை போல...
குறிப்பாக, ஐபிஎல் தொடரின் ஏலம் வரும்போதெல்லாம் எந்தெந்த வீரர்களின் தலையெழுத்து மாறப்போகிறது என்பதை கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும். அந்த வகையில், இந்தாண்டு ஏலத்தில் சுமார் ரூ.3.60 கோடிக்கு ராபின் மின்ஸ் என்ற 21 வயதே ஆன இளம் வீரர் குஜராத் டைட்டன்ஸ் அணியால் ஏளம் எடுக்கப்பட்டார். இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இவர் இந்தாண்டின் ஏலத்தின்போது அதிக கவனத்தை பெற்றிருந்தார்.
ராபின் மின்ஸ் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் பிறந்தவர். இடதுகை வீரரான இவர் தோனியை போலவே பெரிய ஹிட்டர் என இளம் வயதிலேயே பெயர் பெற்றவர். தோனியின் பெரிய ரசிகரான இவர் சாஞ்சல் பட்டாச்சார்யா என்ற அனுபவ பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்றவர், அவர்தான் தோனிக்கும் பயிற்சியாளராக இருந்தார்.
இடதுகை பொல்லார்ட்
ராபின் மின்ஸ் தந்தை ராஞ்சி பிர்ஸா முண்டா விமான நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் ராஞ்சி டெஸ்ட் முடிந்து செல்லும்போது, குஜராத் அணியின் கேப்டன் சுப்மான் கில் சந்தித்து பேசியிருந்தது வைரலானது. ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் அவர் பல கோடிக்கு ஏலம் போயிருந்தாலும், கடந்த சீசனில் இவரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணிதான் முதன்முதலில் இவரை அடையாளம் கண்டு இங்கிலாந்தில் உயர்தர பயிற்சி அளித்தது. மும்பை இந்தியன்ஸ் மட்டுமின்றி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முகாமில் விளையாடி உள்ளார். மின்ஸ் குறித்து ராபின் உத்தப்பா விவரிக்கையில், இவர் இடதுகை கைரன் பொல்லார்ட் என ஒருமுறை கூறியிருந்தார். அந்தளவிற்கு இவர் மீது அதிக கவனம் இருந்தது.
விபத்தில் சிக்கி காயம்
இன்னும், ஐபிஎல் தொடங்க 20க்கும் குறைவான நாள்களே உள்ள நிலையில், ராபின் மின்ஸ் இன்று பைக் விபத்தில் சிக்கி உள்ளார். கவாஸ்கி சூப்பர்பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, இன்னொரு பைக்கில் மோதி விபத்தில் சிக்கியதாக தெரிகிறது. இதனை அவரது தந்தை சேவியர் மின்ஸ் ஊடகங்களிடம் உறுதிப்படுத்தினார்.
சூப்பர் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது அவர் இன்னொரு பைக்கில் மோதி விபத்தில் சிக்கினார். இப்போது எந்த பிரச்னையும் இல்லை. தற்போது அவர் கண்காணிப்பில் உள்ளார்" என்றார். மேலும், அவரின் பைக்கின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது வலது முழங்காலில் காயங்கள் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அவர் ஐபிஎல் போட்டியில் களமிறங்குவாரா என்ற சந்தேகம் கிளம்பி உள்ளது.
மேலும் படிக்க | ஐபிஎல்லில் விளையாடுவாரா ரிஷப் பந்த்? வெளியான லேட்டஸ்ட் தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ