India vs Pakistan: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐசிசி ஆடவர் உலகக் கோப்ப தொடரின் (ICC World Cup 2023) லீக் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீசி வருகிறது. இந்திய அணியில் சுப்மான் கில் மீண்டும் சேர்க்கப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிராஜின் Cross Seam


இந்திய அணிக்கு வழக்கம்போல் பும்ரா - சிராஜ் தொடக்க ஓவர்களை வீசினர். பும்ரா கட்டுக்கோப்பாக வீச, சிராஜ் அதிகமாகவே ரன்களை கசியவிட்டார் எனலாம். பாகிஸ்தானின் இமாம் உல் ஹக் - அப்துல்லா ஷஃபீக் ஜோடி ஆரம்பத்தில் செட்டிலாகி பவுண்டரிகளை குவித்து வந்தனர். இருப்பினும், சிராஜ் வீசிய 8ஆவது ஓவரில் அப்துல்லா ஷஃபீக் 20(24) ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் வீசிய கிராஸ் சீம் பந்து ஷஃபீக்கின் விக்கெட்டை காவு வாங்கியது.


அச்சுறுத்திய பார்டனர்ஷிப்


தொடர்ந்து, இமாம் உல் ஹக் பாண்டியாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து 36(38) ரன்களில் வெளியேறினார். ஆனால், பாகிஸ்தானின் நட்சத்திர வீரர்களான பாபர் அசாம் - ஷதாப் கான் இம்முறையும் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். ஹர்திக், குல்தீப், ஜடேஜா, ஷர்துல் என வேறு வேறு பந்துவீச்சாளர்களை முயற்சித்தும் அந்த பார்ட்னர்ஷிப்பை வீழ்த்த முடியவில்லை. இதில், ஷர்துலுக்கு 2 ஓவர்கள் மட்டுமே வழங்கப்பட்டது. அந்த பார்ட்னர்ஷிப் 50 ரன்களையும் தாண்டி சென்றுகொண்டிருக்க, ரோஹித் சிராஜை பந்துவீச அழைத்தார்.


மேலும் படிக்க | IND vs PAK: நீலக் கடலில் மூழ்கிய அகமதாபாத்! குவிந்த இந்திய ரசிகர்கள்... பாக் ரசிகர்களுக்கு பாதுகாப்பு..!


மீண்டும் சிராஜ்


சிராஜ் (Siraj) ஏற்கெனவே, 5 ஓவர்களை முதல் ஸ்பெல்லில் வீசியிருந்த நிலையில், தற்போது 28ஆவது ஓவரில் இரண்டாவது ஸ்பெல்லை வீச வந்தார். இருப்பினும், அந்த ஓவரில் அவர் 2 பவுண்டரிகளை கொடுத்தார். மறுமுனையில் குல்தீப் வீச 30ஆவது ஓவரை சிராஜ் வீச வந்தார். அந்த ஓவரின் நான்காவது பந்தில் குட் லெந்த்-ல் ஸ்டம்பை நோக்கிய கோணத்தில் வீசினார். அந்த பந்தை Third Man திசையில் தட்டிவிட நினைத்த பாபர் அசாமை (Babar Azam) ஏமாற்றி, அந்த ஆஃப் ஸ்டம்பை பந்து பதம் பார்த்தது. பாபர் அசாம் 50(58) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 


ஒரே ஓவரில் 2 விக்கெட்


இது போட்டியில் இந்திய அணியின் ஆதிக்கத்தை மீண்டும் கொண்டு வந்தது. இதைத் தொடர்ந்து, 33ஆவது ஓவரை வீசிய குல்தீப் யாதவிடம் சௌத் சாகீல் 6 (10) ரன்களுக்கு எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். கள நடுவர் அவுட் கொடுக்காவிட்டாலும், ரோஹித் எடுத்த டிஆர்எஸ் மூலம் அது அவுட் என உறுதிசெய்யப்பட்டது. அதே ஓவரின் கடைசி பந்தில் இஃப்திகார் அகமது 4(4) போல்டாகி வெளியேற குல்தீப் யாதவ் (Kuldeep Yadav) தனது இரண்டாவது விக்கெட்டை கைப்பற்றினார். 


பும்ரா வேற மாதிரி தாக்குதல் 


பாகிஸ்தானுக்கு அடுத்தடுத்து விக்கெட் சரிந்த அந்த வேளையில் பும்ரா (Bumrah) மீண்டும் பந்துவீச்சு தாக்குதலுக்கு கொண்டு வரப்பட்டார். பும்ரா அதுவரை 3 ஓவர்களை மட்டுமே வீசியிருந்தார். அவரின் இரண்டாவது ஸ்பெல்லை 34ஆவது ஓவரில் வீச வந்தார். அந்த ஓவரிலேயே இந்தியாவுக்கு பெரும் பலன் கிடைத்தது. அந்த ஓவரின் கடைசி பந்தில் பும்ரா வீசிய ஸ்லோவர் ஆஃப் கட்டருக்கு, களத்தில் செட்டிலாகி இருந்த நட்சத்திர வீரர் ரிஸ்வான் (Rizwan) பலியானார். அவர் 49(69) ரன்களில் வெளியேற இந்தியாவின் நம்பிக்கை மிளிர்ந்தது. 


முடித்துவைத்த ஜடேஜா


தொடர்ந்து, துணை கேப்டன் ஷதாப் கானும் 2(5) பும்ராவின் அடுத்த ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார். மேலும், 40ஆவது ஓவரில் மீண்டும் வீச வந்த ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) முகமது நவாஸ் விக்கெட்டை கைப்பற்றினார். தொடர்ந்து, டெயிலெண்டர்களும் விரைவாக ஆட்டமிழக்க பாகிஸ்தான் 191 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. 


இந்திய பந்துவீச்சில் பும்ரா, சிராஜ், குல்தீப், ஹர்திக், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். குறிப்பாக பும்ரா 7 ஓவர்களை வீசி வெறும் 19 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார், அவரின் எகனாமி 2.70 ஆகும்.  


மேலும் படிக்க | IND vs PAK: போட்டி ஆரம்பித்ததும் திடீரென பெவிலியன் சென்ற விராட்... என்ன காரணம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ