பல சவால்களுக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை ஆடிக்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கு செவ்வாய்க்கிழமை மற்றொரு அதிர்ச்சி கிடைத்தது. வயிற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா ஆடமாட்டார். இந்திய அணியில் ஏற்கனவே பலர் காயமடைந்து விளையாட முடியாத நிலையில் உள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் பந்துவீச்சு தாக்குதலில் முக்கிய பங்கு வகிக்கும் பும்ராவுக்கு, சிட்னியில் நடந்த மூன்றாவது டெஸ்டின் போது இந்த பாதிப்பு ஏற்பட்டது என தெரியவந்துள்ளது.


ஜஸ்ப்ரீத் பும்ராவின் (Jasprit Bumrah) ஸ்கேன் அறிக்கைகள் அவரது வயிற்றுப் பகுதியில் காயத்தால் ஏற்பட்டுள்ள அழுத்தத்தைக் காட்டியுள்ளன. இங்கிலாந்துக்கு எதிரான நான்கு டெஸ்ட் தொடர்களை மனதில் வைத்து, அவர் காயத்தை அதிகரிக்க வேண்டாம் என இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்று அறியப்படுகிறது. "சிட்னியில் ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருந்த போது, ஜஸ்பிரீத் பும்ராவுக்கு வயிற்றுப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. அவர் பிரிஸ்பேன் டெஸ்டில் ஆட மாட்டார். ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக நடக்கவுள்ள டெஸ்ட் போட்டிக்கு முன்னர் அவர் குணமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று BCCI வட்டாரங்கள் செய்தி நிறுவனமான பி.டி.ஐ.-க்கு தெரிவித்தன.


ஜனவரி 15 ஆம் தேதி தொடங்கும் பிரிஸ்பேன் டெஸ்டில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள முகமது சிராஜ் இந்திய பந்துவீச்சு தாக்குதலுக்கு தலைமை வகிப்பார் என்றும் நவ்தீப் சைனி, ஷார்துல் தாக்கூர் மற்றும் டி நடராஜன் (T.Natarajan) ஆகிய பந்து வீச்சாளர்களும் இடம் பெறுவார்கள் என்றும் இப்போது எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர் துவங்கியதிலிருந்து பல இந்திய வீரர்கள் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ: சிட்னி டெஸ்ட் டிரா! ஆஸ்திரேலியாவின் வெற்றி நம்பிக்கையை உடைத்த அஸ்வின் - விஹாரி கூட்டணி


டெஸ்ட் தொடர் துவங்குவதாற்கு முன்பே இஷாந்த் ஷர்மா தொடரிலிருந்து வெளியேறினார். ரோஹித் சர்மா முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் காயம் காரணமாகவும், பின்னர் ஆஸ்திரேலிய தனிமைப்படுத்தல் விதிகள் காரணமாகவும் ஆடவில்லை. முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் முறையே மூன்று மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளை ஆடத் தவறவிட்டனர். கேப்டன் விராட் கோஹ்லி (Virat Kohli) தனது மகளின் பிறப்புக்காக நாடு திரும்பினார்.


சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த மூன்றாவது டெஸ்டுக்குப் பிறகு, ஹனுமா விஹாரி மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் பிரிஸ்பேனில் நடக்கவிருக்கும் நான்காவது டெஸ்ட் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் விளையாட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஹாரிக்கு ஏற்பட்டுள்ள தொடை எலும்பு காயமும் ஜடேஜாவின் கட்டை விரல் காயமும் இதற்கு காரணங்களாகும்.


இருப்பினும், பும்ராவின் காயம் அஜிங்க்யா ரஹானே தலைமையிலான இந்திய அணிக்கு (Team India) மிகப்பெரிய அடியாக இருக்கும். இந்திய வேகப்பந்துவீச்சு தாக்குதல் இப்போது ஒரு அனுபவமற்ற தாக்குதலாக உள்ளது. முகமது சிராஜ் இரண்டு டெஸ்ட்களிலேயே ஆடியுள்ளார். நவ்தீப் சைனிக்கு ஒரு டெஸ்ட் அனுபவமே உள்ளது. ஷார்துல் தாக்கூர் மற்றும் நடராஜன் ஆகியோர் இந்த டெஸ்டில்தான் அறிமுகமாகக்கூடும்.


இது தவிர ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் காயமடைந்துள்ளனர். எஸ்சிஜி டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் முழங்கையில் அடி பட்டதையடுத்து, பந்த் களமிறங்கவில்லை. அதே நேரத்தில் காயமடைந்த நிலையிலும் அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸிலும் முதுகுவலியுடன் ஆடி ஆட்டத்தை டிரா செய்வதில் பெரும் பங்கு வகித்தார். 


ALSO READ: அனுஷ்கா ஷர்மா, விராட் கோலிக்கு பெண் குழந்தை பிறந்தது! வெளியான போட்டோ!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR