IND vs WI: 13 ஆண்டுகளாக காத்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி; சாதிக்குமா?
வெஸ்ட் இண்டீஸ் எதிராக தொடர்ந்து ஒன்பது தொடர்களை கைப்பற்றியுள்ள இந்திய அணி 10 வது முறையும் சாதிக்குமா? என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்பட்டு உள்ளது.
புது டெல்லி: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைப்பெற்ற டி 20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதனையடுத்து ஒருநாள் தொடரின் முதல் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது. அதில் இந்திய அணி தோல்வியை தழுவியது. 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை பெற்றுள்ளது. இந்தநிலையில் நாளை இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏ.சி.ஏ-வி.டி.சி.ஏ கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும். நாளைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. தொடரை வெல்ல வேண்டும் என்றால் மீதமுள்ள இரண்டு போட்டியிலும் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும்.
நாளை போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமானது. 13 ஆண்டுகளாக மேற்கிந்திய தீவுகள் அணிகள் மீது ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய அணிக்கு மீண்டும் ஒரு சிக்கல் வந்துள்ளது. அந்த சிக்கலை தகர்த்து 10 வது முறையாக அந்த அணிக்கு எதிராக தொடரை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்பட்டு உள்ளது. 2006 ஆம் ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் எதிராக இந்திய அணி தொடர்ந்து ஒன்பது தொடர்களை கைப்பற்றியுள்ளது.
இந்திய அணியை பொறுத்த வரை கடைசி ஆட்டத்தை வைத்து பார்த்தால், பந்து வீச்சு மிகவும் பலனளிக்கவில்லை. விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள ஆட்டத்தில் பந்து வீச்சு மீது அதிக கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். பேட்டிங் பொறுத்தவரை இந்திய அணி நல்ல பார்மில் உள்ளது. அதேநேரத்தில் மேற்கிந்திய தீவுகள் இரண்டிலும் நல்ல நிலையில் உள்ளனர்.
முதல் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்ததால், இந்திய அணி முதலில் களம் கண்டது. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனையடுத்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய அணியின் தொடக்க வீரர் ஷாய் ஹோப் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் 102*(151) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக ஷிம்ரான் ஹிட்மையர் 139(106) ரன்கள் குவித்து அணியின் வெற்றினை உறுதி செய்தார். ஆட்டத்தின் 47.5-வது ஓவரில் 2 விக்கெட் மட்டுமே இழந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.
எனவே நாளைய ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியமானது. இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக போராடும். இதனால் நாளைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.