இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட்டில் இந்திய அணி தோற்றது. இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சுரியனில் நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 335 ரன் குவித்தது. அந்த அணியின் மார்க்ரம் 94 ரன்களும் ஹாசிம் அம்லா 82 ரன்களும் கேப்டன் டுபிளிசிஸ் 61 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணியில் கேப்டன் விராத் கோலி மட்டும் பொறுப்பாக ஆடி 153 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற இந்திய அணி 307 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 


அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 258 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் இந்திய அணி வெற்றி பெற 287 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.


இந்நிலையில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை 4_நாள் தொடங்கியது. ஆட்ட நேர முடிவிலேயே 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி நாளான இன்று இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. விக்கெட் அடுத்தடுத்து வீழ்ந்ததில் இந்திய அணி 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 


இதனால் தென்னாப்பிரிக்க அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.


இந்திய கிரிக்கெட் அணி இதுவரை தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.