இனி டெஸ்ட் போட்டிகள் நான்கு நாட்கள் மட்டுமே? ஐ.சி.சி. ஆலோசனை
சர்வதேச டெஸ்ட் போட்டிகளின் நாட்கள் குறைக்க ஐசிசி புதிய திட்டம் ஒன்றை வகுத்து வருகிறது. அதன்படி 2023 முதல் நான்கு நாள் மட்டுமே போட்டி என அறிவிக்க வாய்ப்பு.
புது டெல்லி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி-ICC) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடப்படும் டெஸ்ட் போட்டிகளின் நாட்கள் கணக்கை 2023 முதல் நான்கு நாளாக குறைக்க திட்டமிட்டுள்ளது. ஐந்து நாட்கள் போட்டியை நான்கு நாட்களாக குறைப்பதன் மூலம் பல நாள்கள் கூடுதலாகக் கிடைக்கும்.
டெஸ்ட் போட்டிகள் மீதான ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை ஐசிசி எடுக்கவுள்ளது. மேலும் கூடுதலாக கிடைக்கும் அதிகப்படியான நாட்களில் டி-20 போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்றும் ஐ.சி.சி. திட்டமிட்டுள்ளது.
ஐ.சி.சி.யின் கிரிக்கெட் குழு 2023 முதல் 2031 வரை ஐந்து நாட்கள் டெஸ்ட் போட்டிகளை நான்கு நாட்கள் என நடத்தி முறையாக பரிசீலிக்க உள்ளது. நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டி விளையாடினால், மேலும் ஒரு டெஸ்ட் போட்டி (Test Match) விளையாட நேரம் கிடைக்கும். அதாவது நான்கு டெஸ்ட் போட்டிகளை 5 நாட்கள் விளையாடினால் 20 நாட்கள் தேவை. அதுவே அந்த 20 நாட்களில் 4 நாட்கள் டெஸ்ட் போட்டி விளையாடினால் ஐந்து டெஸ்ட் போட்டிகள் விளையாட முடியும்.
நான்கு நாள் டெஸ்ட் போட்டி என்பது புதிய முறை அல்ல. இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து இடையே நடைபெற்ற கடைசி போட்டியும், அதேபோல 2017 இல் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் ஒரு டெஸ்ட் ஆட்டத்தை நான்கு நாட்கள் விளையாடி உள்ளது.
இதுக்குறித்து இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. ஆனால் இந்த திட்டம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆலோசனை செய்து வருகிறது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது