ஐபிஎல் 2017: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றி
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் போட்டியின் 20-வது ‘லீக்’ ஆட்டம் ராஜ்கோட்டில் நேற்று இரவு 8 மணிக்கு நடைப்பெற்றது. இதில் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் - விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.
டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல் - விராட் கோலி களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்திருந்த போது கெய்ல், பாசில் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். மேலும் டி20 போட்டிகளில் 10,000 ரன்களை கடந்து கெய்ல் புதிய சாதனையும் படைத்திருந்தார். இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை எடுத்தது.
214 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர் ஸ்மித் 1 ரன்னில் வெளியேறினார். அடுத்து மிக்கல்லம்-யுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரெய்னா 8 பந்துகளில் 2 புண்டரி, 2 சிக்சர் என 23 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதையடுத்து, பின்ச் 19 (15), டி கார்த்திக் 1 (4), ஜடேஜா 23 (22) ரன்களும் எடுத்து வெளியேற குஜராத் அணி தடுமாறியது.
எனினும் அந்த அணியின் கிஷான் 16 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 39 ரன்கள் எடுத்து வெளியேறினார். பெங்களூரு சார்பில் சஹால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்து குஜராத் வெற்றி வாய்ப்பை இழந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.