IPL 2023: சாம்பியன்ஸை பழிதீர்த்து முதலிடத்திற்கு முன்னேறிய ராஜஸ்தான்... சாம்சன், ஹெட்மயர் மிரட்டல்!
IPL 2023 GT vs RR: ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது.
IPL 2023 GT vs RR: நடப்பு ஐபிஎல் தொடரின் 23ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை, குஜராத் டைடன்ஸ் அணி சந்தித்தது. இப்போட்டி, குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய குஜராத் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. சாஹா 4 ரன்களிலும், சாய் சுதர்ஷன் 20 ரன்களிலும் பவர்பிளே ஓவர்களிலேயே ஆட்டமிழந்தனர். கில் ஒருமுனையில் நிலைத்து நின்று விளையாடினார்.
சற்று நேரம் நிலைத்த பாண்டியா 28 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த சில ஓவர்களிலேயே சுப்மன் கில்லும் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவர்களில் மில்லர், அபினவ் மனோகர் ஆகியோர் இணைந்து ஸ்கோரை உயர்த்தினர். அதன்மூலம், 20 ஓவர்களில் குஜராத் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்களை எடுத்தது. மில்லர் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 30 பந்துகளில் 46 ரன்களையும், மனோகர் 13 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உள்பட 27 ரன்களையும் குவித்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சில் சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகளையும், போல்ட், ஸாம்பா, சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
மேலும் படிக்க | IPL 2023 MI vs KKR: மகளிர் அணியின் ஜெர்சியில் மும்பை இந்தியன்ஸ் - ஏன் தெரியுமா?
தொடர்ந்து, 178 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ஓப்பனர்கள் ஜெய்ஸ்வால் 1, பட்லர் 0 ஆகியோர் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடிய படிக்கல் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரியான் பராக் 5 ரன்களில் நடையைக்கட்டினார்.
இந்த சூழலில், கேப்டன் சஞ்சு சாம்சன் உடன் ஹெட்மயர் கூட்டணி சேர்ந்தார். இருவரும் அதிரடி காட்டினாலும், குறிப்பாக சாம்சன் ரஷித் கான் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்து மைதானத்தையே மிரளவைத்தார்.
இந்த ஜோடி 59 ரன்களை சேர்ந்திருந்த நிலையில், சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். அவர் 32 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 60 ரன்களை குவித்தார். ஹெட்மயர் அதிரடியை தொடர்ந்தார். ஷமி வீசிய 19ஆவது ஓவரில் ஜூரல், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரி என 18(10) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து, களமிறங்கிய முதல் இரு பந்துகளிலேயே அஸ்வின் பவுண்டரியும், சிக்ஸரையும் அடித்து 10(3) ரன்களில் எடுத்து, அடுத்த பந்திலேயே ஷமியிடம் வீழ்ந்தார்.
கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இரண்டாம் பந்தில் சிக்ஸரை பறக்கவிட்டு ஹெட்மயர் ஆட்டத்தையும் முடித்து வைத்தார். அவர் 26 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 60 ரன்களை குவித்து, ஆட்ட நாயகனாகவும் தேர்வானார்.
இதன்மூலம், 19.2 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து, ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷமி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ராஜஸ்தான் அணி, விளையாடிய 5 போட்டிகளில் 4இல் வென்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. குஜராத் அணி 3 வெற்றிகள், 2 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
கடந்த ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணி, ராஜஸ்தான் அணியுடன் இந்த போட்டிக்கு முன் வரை 3 போட்டிகளில் (கடந்தாண்டு இறுதிப்போட்டி உள்பட) விளையாடியிருந்தது. இந்நிலையில், அத்தனை போட்டிகளுக்கு பழிதீர்க்கும் விதமாக இந்த நான்காவது போட்டியில் ராஜஸ்தான் வெற்றியை பதிவு செய்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ