இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் ஆகிறார் தோனி?
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக தோனி நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டி20 உலகக் கோப்பை 2021 போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ஆச்சரியமூட்டும் விஷயமாக இந்திய அணிக்கு ஆலோசகராக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். 40 வயதாகும் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அரையிறுதியில் தோல்வியுற்ற பின் தனது ஓய்வை அறிவித்தார்.
இந்திய அணியின் ஆலோசகராக தோனி (MS Dhoni) செயல்படுவர் என்று பிசிசிஐ (BCCI) செயலாளர் ஜெய்ஷா நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார். " ஐபிஎல் போட்டிக்காக துபாயில் உள்ள தோனியிடம் பேசினோம், இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட தோனியும் விருப்பம் தெரிவித்தார். மேலும் பிசிசிஐயில் இருக்கும் அனைவருக்கும் இதனை ஏற்றுக்கொண்டனர். இந்திய அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன், விராட் கோலியும் ரோகித் சர்மாவும் தோனியை ஆலோசகராக நியமிக்க சம்மதித்தனர்.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தோனியின் அனுபவம் இந்திய அணிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முக்கியமான சர்வதேச போட்டிகளில் இக்கட்டான கட்டத்தில் தோனி இந்திய அணிக்காக கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். உலகத்தர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், இந்தியாவின் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டனுமான தோனி 2007 ஆம் ஆண்டு சவுத் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை மற்றும் இந்தியாவில் நடைபெற்ற 2011 50 ஓவர் உலகக் கோப்பையை வென்று கொடுத்துள்ளார்" என்று தெரிவித்தார் ஜெய்ஷா.
இந்த வருடம் நடக்கவுள்ள மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளுக்காக தோனி தனது அணியுடன் ஐக்கிய அமீரகத்தில் உள்ளார். 2019 ஆகஸ்ட் 15ஆம் தேதி ஒரு இன்ஸ்டகிரம் பதிவின் மூலம் தனது ஓய்வை அறிவித்த தோனி தற்போது வரை அதுகுறித்து யாரிடமும் பேசாமல் இருந்து வருகிறார். தோனி இதுவரை 90 டெஸ்ட் போட்டி, 350 ஒருநாள் போட்டி மற்றும் 98 டி20 போட்டிகளில் விளையாடி 4876, 10773, 1617 ரன்களை அடித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை முடிந்த பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ரவிசாஸ்திரி விலக உள்ளார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியானது. தற்போது தோனி இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் பட்சத்தில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக தோனி நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விராட் கோலி (கேப்டன்) தலைமையில் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹார், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா , புவனேஸ்வர் குமார், முகமட் ஷமி ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். கூடுதல் வீரர்களாக ஸ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாகூர் மற்றும் தீபக் சஹர் இடம்பெற்றுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR