பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பதவியேற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Cricinfo அறிக்கையின்படி, சண்டிகா ஹதுருசிங்க தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார், அவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக தனது பதவியில் இருந்து விலகவில்லை.
 
இதற்கிடையில், ஆர்தர் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும் இதுவரை அவர் இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் (SLC) அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றும், அவரை பயிற்சியாளராக நியமிப்பதில் இலங்கை வாரிய அதிகாரிகள் ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது, அங்கு டிசம்பர் 11 முதல் பாகிஸ்தான் அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 


இந்நிலையில் உலகக் கோப்பை முடிவடைந்ததிலிருந்து இலங்கை கிரிக்கெட் வாரியம் தங்கள் அணிக்கு புதிய பயிற்சியாளரைத் தேடி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக பல முன்னாள் பயிற்சியாளர்களிடமும் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் தற்போது வரையிலும் ஒரு உறுதியான முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் தற்போது ஆர்தர் இந்த பதவிக்கு நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகி வருகிறது.


இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லே சில்வா இதுகுறித்து தெரிவிக்கையில்., "நாங்கள் மிக்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், எங்கள் ஒப்பந்தம் சுமுகமான நிலையினை எட்டும் என எதிர்பார்க்கிறோம்" என தெரிவித்துள்ளார். 


ஆர்தர் முன்பு தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். என்றபோதிலும் 2016 முதல் 2019 வரை அவர் பாகிஸ்தான் அணியுடன் மேற்கொண்ட பயிற்சிப் பணிகள் சிறப்பாக இருந்தன, குறிப்பாக கடந்த 2017-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடித்து ICC சாம்பியன்ஸ் டிராபியை வென்றது குறிப்பிடத்தக்கது.