ஆர்சிபி அணியின் முன்னாள் கோச்... இப்போது இந்த அணிக்கு... மாற்றம் வருமா?
Daniel Vettori SRH Head Coach: கடந்த ஐபிஎல் சீசனில் 10ஆவது இடத்தை பிடித்த ஹைதராபாத் அணி, தனது தலைமை பயிற்சியாளராக டேனியல் வெட்டோரியை நியமித்துள்ளது.
Daniel Vettori SRH Head Coach: 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்தே சுமார் இரண்டு மாதங்கள் தான் ஆகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக கோப்பையை வென்று சாம்பியனானது. 17ஆவது ஐபிஎல் தொடர் அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் தான் நடக்கும், இன்னும் அதற்கு 10 மாத காலம் உள்ளது. இருப்பினும், ஐபிஎல் குறித்த பேச்சுக்கு மட்டும் எப்போதும் ஓய்வே இல்லை.
2024 ஐபிஎல் மீதான எதிர்பார்ப்பு
தோனி தான் 2024ஆம் ஆண்டு தொடரிலும் விளையாடுவதை உறுதிசெய்துவிட்ட பின் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் அடுத்தாண்டிற்காக பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில், ஐபிஎல் அணிகளுக்கான ஏலத்தின் பர்ஸ் தொகை ரூ. 90 கோடியில் இருந்து ரூ. 100 கோடியாக உயர்த்தப்பட்டது. இவை மட்டுமின்றி பெங்களூரு அணிக்கு ஜிம்பாப்வே அணியின் மூத்த வீரர் ஆண்டி ஃபிளாவர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இப்படி, ஐபிஎல் குறித்த பேச்சுகளும், எதிர்பார்ப்புகளும் தொடர்ந்து இருந்து வரும் சூழலில் மற்றொரு தகவலும் திடீரென வந்துள்ளது, அதுவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில்...
மீண்டும் வருகிறார் வெட்டோரி
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த பிரையன் லாராவுக்கு பதில் டேனியல் வெட்டோரி நியமிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெட்டோரி முன்பு 2014ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். மேலும் தற்போது அவர் ஆஸ்திரேலிய ஆடவர் அணியின் உதவிப் பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார்.
எஸ்ஆர்ஹெச் ஸ்டைல்
இதன்மூலம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவர்களின் ஐந்து சீசன்களில் மட்டும் மூன்று தலைமை பயிற்சியாளர்களை மாற்றி நான்காவதாக வெட்டோரியை நியமித்துள்ளனர். ஹைதராபாத் அணி கடந்த 2016ஆம் ஆண்டு சீசனில் சாம்பியனானது குறிப்பிடத்தக்கது. அந்த அணிக்கு 2019 மற்றும் 2022 ஆகிய இரண்டு சீசன்கள் டாம் மூடியும், 2020 மற்றும் 2021 ஆகிய சீசன்களில் ட்ரெவர் பேலிஸ் மற்றும் கடந்த 2023 சீசனனில் லாரா ஆகியோர் தலைமை பயிற்சியாளராக இருந்தனர். நடந்த முடிந்த 2023 ஐபிஎல் சீசனில் டாம் மூடிக்கு பதிலாக லாரா நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த அணி தொடரில் நான்கு வெற்றிகள் மற்றும் பத்து தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை தான் பிடித்தது.
மேலும் படிக்க | ஆர்சிபி-க்கு புது கோச் வந்தாச்சு இனியாவது தலையெழுத்து மாறுமா?
வெட்டோரியின் பயிற்சியாளர் ரெஸ்யூம்
வெட்டோரி தற்சமயம், பர்மிங்காம் பீனிக்ஸ் ஆடவர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார், மேலும் 2022ஆம் ஆண்டு மே மாதம் முதல், ஆஸ்திரேலிய தேசிய ஆடவர் அணியில் இருந்து வருகிறார். சிபிஎல்லில் பார்படாஸ் ராயல்ஸ், பிக் பாஷ் லீக்கில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் வைட்டலிட்டி பிளாஸ்டில் மிடில்செக்ஸுடன், தலைமைப் பயிற்சியாளராக இருந்துள்ளார். பங்களாதேஷ் ஆடவர் தேசிய அணியில் ஸ்பின்-பவுலிங் ஆலோசகராகவும் அவர் இருந்தார்.
3 அணிகளில் மாற்றம்
ஆர்சிபிக்கு தலைமைப் பயிற்சியாளராக வெட்டோரி இந்த போது, அந்த அணி 2015இல் பிளேஆஃப் மற்றும் 2016இல் இறுதிப்போட்டிக்கும் வந்தது நினைவுக்கூரத்தக்கது. அந்த இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் அணியிடம் ஆர்சிபி கோப்பையை பறிகொடுத்தது. 2024 சீசனுக்கு முன்னதாக ஐபிஎல்லில் இது மூன்றாவது உயர்தர பயிற்சியாளர் நியமனம் ஆகும். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டார். லக்னோ அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆண்டி ஃபிளவர் ஆர்சிபி அணிக்கு தலைமை பயிற்சியாளரானார்.
நிலை மாறுமா?
சன்ரைசர்ஸ் சமீபத்திய ஆண்டுகளில் ஐபிஎல்லில் ஒரு கடினமான சூழலில் உள்ளது. ஐபிஎல் தொடரில் 2021ஆம் ஆண்டு முதல், அவர்கள் 13 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர், 29 இல் தோல்வியடைந்துள்ளனர். 2016ஆம் ஆண்டு முதல் (அவர்கள் சாம்பியன்களாக இருந்தபோது) 2020 வரை, சன்ரைசர்ஸ் ஒவ்வொரு சீசனிலும் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. வெட்டோரி மற்றும் கேப்டன் எய்டன் மார்க்ராம் ஆகியோர் தலைமையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மீண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ஐபிஎல் போன்ற போட்டிகளுக்கு ஐசிசி விதித்துள்ள 2 முக்கிய விதிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ