பரபரப்பான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது
வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 34வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பன்ட் பவுலிங் தேர்ந்தெடுக்க, ராஜஸ்தான் அணி பேட்டிங் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பட்லர் மற்றும் தேவ்தத் படிக்கல் டெல்லி அணியின் பந்துவீச்சை தொடக்கம் முதலே அடித்து ஆடினர். இருவரும் பந்துகளை அடிக்கடி பவுண்டரிக்கு பறக்க விட்டதால் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
மேலும் படிக்க | ipl2022-ல் அதிக ரன்களை அடித்த டாப் 5 பேட்ஸ்மேன்கள்
35 பந்துகளை எதிர்கொண்ட படிக்கல் 55 ரன்கள் விளாசி எல்பிடபள்யூ முறையில் அவுட்டானார். கடந்த சில போட்டிகளாக ரன் எடுக்க முடியாமல் தடுமாறிய அவர், இப்போட்டியில் பார்முக்கு திரும்பி 7 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களை விளாசி அரைசதம் அடித்தார். மறுமுனையில் பட்லர், ருத்ர தாண்டவம் அடினார். அவரை அவுட்டாக்க முடியாமல் டெல்லி வீரர்கள் திசைதெரியாமல் முழித்தனர். பந்துகளை எல்லைக்கோட்டுக்கு அடிக்கடி அடித்த அவர், வாண வேடிக்கையும் காட்டினார்.
குல்தீப் ஓவரில் 105 மீட்டர் சிக்சர் பறக்க விட்ட பட்லர், ஷர்துல் தாக்கூர் ஓவரில் 107 மீட்டர் சிக்சர் விளாசினார். இந்த தொடரில் 3வது சத த்தை விளாசிய அவர், 65 பந்துகளில் 116 ரன்கள் விளாசி 18வது ஓவரின் முடிவில் அவுட்டானார். கேப்டன் சஞ்சு சாம்சனும் அதிரடி காட்டினார். 19 பந்துகளை எதிர்கொண்ட அவர் 46 ரன்கள் எடுத்தார். முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி, அதிரடி காட்டினாலும், யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை.
ஓபனிங் பேட்ஸ்மேன்களான வார்னர் 28 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பிரித்திவி ஷா 37 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதிரடியாக விளையாடிய ரிஷப் பன்ட் 24 பந்துகளில் 44 ரன்கள் விளாசி அவுட்டானார். கடைசி ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது. பேட்டிங் செய்த ரோமன் பவல் முதல் 2 பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்டதால், மைதானத்தில் பரபரப்பு நிலவியது. 3வது பந்தையும் சிக்சருக்கு விளாசி பவல் அமர்களப்படுத்தினார். அப்போது, மைதானத்தில் நோபால் கேட்டு டெல்லி வீரர்கள் முறையிட்டனர். அம்பயர்களின் முடிவை ஏற்காத டெல்லி கேப்டன் ரிஷப் பன்ட், வீரர்களை திரும்ப வருமாறு அழைத்தார். சிறிதுநேர சலசலப்புக்கு பின் மீண்டும் போட்டி நடைபெற்றது. முடிவில் ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் படிக்க | RRvsDC: நூறு எனக்கு ரொம்ப ராசி - பட்லர் மந்திரம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR