ரெஸ்லிங் உலகின் ‘காலா’.! HBD அண்டர்டேக்கர்
ரெஸ்லிங் உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் அண்டர்டேக்கருக்கு இன்று பிறந்த நாள்
WWE-ல் சீரிஸில் அது முக்கியமான மேட்ச். இரண்டு பேர் மட்டும் மோதும் காரசாரப் போட்டி. முதலில் ரிங்கிற்குள் ஒருவர் வரவேண்டும். ஆள் இன்னும் வரவில்லை. அதற்குப் பதிலாக, நீண்ட சவப்பெட்டி ஒன்றை நான்குபேர் தூக்கிக் கொண்டு வருகிறார்கள். அதை ரிங் மேடை மீது வைத்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். WWF-ன் ஒட்டுமொத்த ஸ்டேடியமும் மிகுந்த எதிர்பார்ப்போடு சவப்பெட்டியையே பார்த்துக்கொண்டு இருக்கிறது. திடீரென சவப்பெட்டி உடைந்து உள்ளே இருந்து ஒருவர் மேலெழுகிறார். ஒட்டுமொத்த ஸ்டேடியமும் ‘அண்டர்டேக்கர்...அண்டர்டேக்கர்...அண்டர்டேக்கர்’ என ஆர்ப்பரிப்பின் உச்சத்தில் கத்துகிறது. சொல்லப்போனால் அப்போது ஸ்டேடியத்தில் இருந்தவர்களின் உணர்வெழுச்சியைப் போலத்தான் தொண்ணூறுகளில் இந்தப் போட்டியை வீட்டில் டிவியில் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும் இருந்தது.!
மேலும் படிக்க | இறுதியாக... WWE-ல் இருந்து ஓய்வு பெற்றார் ‘The Undertaker’... காரணம் என்ன தெரியுமா?
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹாஸ்டன் நகரில் 1965ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி அண்டர்டேக்கர் பிறந்தார். அவரின் இயற்பெயர் மார்க் வில்லியம் காலாவே. மல்யுத்த வீரராக ஆகும் ஆசையெல்லாம் சிறுவயது அண்டர்டேக்கருக்கு இல்லை. காரணம், அப்போது அவர் கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தார். அதில் சிறந்த வீரராகவும் திகழ்ந்தார். பிறகு அண்டர்டேக்கருக்கு ஒரு மனிதரைப் பிடிக்கிறது. டான் ஜார்டைன் என்னும் அந்த நபர் ஒரு மல்யுத்த வீரர். பிறகென்ன.! வழக்கம்போல், அண்டர்டேக்கரின் பாதை மாறுகிறது. ஜார்டைனிடம் தினமும் மல்யுத்தம் கற்கிறார் அண்டர்டேக்கர். ஆறடி உயரம், ஆஜானுபாகுவான தோற்றம், தைரியம், வித்தியாசமான அணுகுமுறை, பொறுமைக் கலந்த ஆக்ரோஷம் ஆகியவை சிறந்த மல்யுத்த வீரர் ஆகுவதற்கான அம்சங்கள் அண்டர்டேக்கருக்கு கைக்கொடுத்தன.
மேலும் படிக்க |நீண்ட நாள் காதலியை ரகசியமாக கரம் பிடித்தார் The Rock!
உலகின் மிகப்பெரிய தொழில்முறை மல்யுத்த நிறுவனங்களில் ஒன்றான WWE நடத்திய "சர்வைவர் சீரிஸ்" போட்டிகளில் தான் முதன்முதலாக அண்டர்டேக்கர் என்ற பெயரோடு அவர் களமிறங்கினார். அதற்கு முன்பு உள்ளூர் நிறுவனங்களில் ஆடிய போட்டிகளில் பல பெயர்களைக் கொண்டு அண்டர்டேக்கர் ஆடினாலும், இந்தப் போட்டிக்குப் பிறகு தனது பெயரை அவர் மாற்றிக்கொள்ளவே இல்லை. அதுவே காலத்துக்கும் நிலைத்து நின்றது. ‘World Heavy Weight Championship’, ‘Hardcore Championship’, ‘WWE Championship’ என பல போட்டிகளில் வென்று அசத்தினார் அண்டர்டேக்கர். குறிப்பாக, ‘Wrestlemania’ சீரிஸில் அண்டர்டேக்கர் செய்த சாதனை அளப்பரியது. அந்த தொடரில் வேறெந்த வீரரும் செய்யாத சாதனையை அவர் செய்துள்ளார். அந்த தொடரில் அதிக போட்டிகளில் கலந்துகொண்ட வீரர் என்ற சாதனையை அண்டர்டேக்கர் தனதாக்கினார். இதில், 21 போட்டிகளில் அவர் வென்று ரெஸ்லிங் உலகில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.
மேலும் படிக்க |இவர் எப்படி ஆட்டோவில் உட்கார்ந்தார்? WWW தி கிரேட் காளி Video வைரல்
ஆரம்பகால கட்ட வீரர்களுடன் மோதிய அண்டர்டேக்கர், பின்னர் புதிதாக களமிறங்கும் வீரர்கள் வரை மோதிப்பார்தார். இதனால் ரெஸ்லிங் உலகில் பழைய ஆட்கள் முதல் நவீன தலைமுறைவரை அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உண்டு. மற்ற ப்ளேயர்களை விட அண்டர்டேக்கருக்கு எப்போதும் ஒரு வசீகரம் உண்டு. அதற்கு அவர் தேர்ந்தெடுக்கும் உடை, பாவனைகள் ஒருபுறமிருந்தாலும், அவர் குறித்தான மர்மக் கதைகளே அண்டர்டேக்கருக்கு இன்னும் கூடுதல் வசீகரத்தைத் தந்தது. அண்டர்டேக்கருக்கு ஏழு உயிர் உண்டு, ஏழு முறை செத்த உயிரோடு மீண்டும் வந்தார் அண்டர்டேக்கர், பூமிக்கடியில் புதைத்துவிட்டு சென்றவுடன் ‘டமாரென’ எழுந்து வந்தவர், அவருக்கு இன்னும் 2 மறுபிறவி இருக்கிறது, சாகாவரம் பெற்ற வீரர் போன்ற ஏராளமான மர்மக் கதைகளை சிறுவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதுண்டு. எந்தப் போட்டியென்றாலும் முதலில் ஆரவாரமான இசையுடன் பெரிய ‘பைக்’-ல் அண்டர்டேக்கர் ரிங்கை சுற்றும் காட்சியை யாராலும் மறக்க முடியாதது. இதேபோல், மற்ற வீரர்கள் தங்களது ‘Smack’-ஐ உடனடியாக எதிராளி மீது சுமத்தி வெற்றிபெறுவார்கள். ஆனால், அண்டர்டேக்கர் அப்படியில்லை. முதலில் சண்டையிடுவார். சண்டையிட்டுக்கொண்டேதான் இருப்பார். அவ்வளவு எளிதில் தனது ஸ்மாக்கை அண்டர்டேக்கர் உபயோகப்படுத்த மாட்டார். அவரின் அந்த உத்தி, பார்வையாளர்களை மேலும் ஆர்வமடையச் செய்யும். ‘எப்போது அந்த ஸ்மாக் போடுவார் ; எப்போது போடுவார்’ என்று ஆடியன்ஸுக்கு பல்ஸ் எகிறும். ‘அவ்வளவுதான் போட்டியை முடித்துவிடலாம்’ என்று அண்டர்டேக்கர் நினைத்துவிட்டால்தான் அந்த ‘ஸ்மாக்கை’ போடுவார். அதுவும் எப்படி ?.! ‘பச்செக்கென’ எதிராளியின் கழுத்தில் ஒரு அறை விழுந்தது போன்று இரு சிறுத்தைப்பிடி. உடனே தூக்கிகீழே கடாசிவிடமாட்டார். அதுவரை அந்த தருணத்துக்காக காத்துக்கொண்டிருந்த ரசிகர்களின் ஆரவாரத்துக்காக 30 விநாடிகள் அந்த நிலையிலேயே எதிராளியை கட்டுக்குள் வைத்திருப்பார். ஒட்டுமொத்த கூட்டத்தின் ஆரவார சத்தம் அரங்கத்தை அதிரச்செய்யும். அது அடங்குவதற்குள் எதிராளியை அப்படியே தூக்கி கீழே போட்டுவிட்டு, ஆட்டத்தை முடித்துவிடுவார். அந்த அற்புதத்தை இன்றுவரை எந்த ரசிகராலும் மறக்கவே முடியாது.
மேலும் படிக்க | SeePics: மல்யுத்தத்தில் குதித்த பிரபல கிரிக்கெட் வீரர்!
இதுமட்டுமல்லாமல், எதிராளியை தலைகீழாக பிடித்துக்கொண்டு அப்படியே அவர்களின் தலையை தரையில் மோதவிட்டு நிலைகுலைய வைப்பதும் அவரின் தனி பாணி.
எதிராளியிடம் நிறைய அடிவாங்கிய அண்டர்டேக்கர் அப்படியே நிலைகுலைந்து படுத்துவிடுவார். ‘இனி அவ்வளவுதான்’ என நாம் நினைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அதுவரை அமைதியாக படுத்துக்கொண்டிருந்த அண்டர்டேக்கர் ‘பட்’டென எழுந்து உட்காருவது ஃபேன்டஸி ஹீரோக்களின் சாகசத்துக்கு நிகரானது. ரிங்-கிற்குள் அண்டர்டேக்கரின் சண்டைகளைப் போல, அவரின் இந்த சுவாரஸ்ய சாகசங்களும் பலரையும் ஈர்த்தது. ஓய்வுபெற்ற பின்னரும் அவரைப் பற்றிய பேச்சுகளும், மர்ம கதைகளும் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. சாகாவரம் பெற்றதாக சொல்லப்படும் மர்மக்கதை மனிதர் அண்டர்டேக்கருக்கு இன்று பிறந்த நாள். 57 வயதிலும் அதே மிடுக்கு.! தொப்பி, கழுகு, நீண்ட பைக், கால்தொடும் அளவுக்கான நீண்ட கோர்ட், அமானுஷ்யமான இசை என கலந்துகட்டிய அண்டர்டேக்கருக்கு நிகராக வேறு எந்த மல்யுத்த வீரரையும் நாம் ஒப்பிட முடியாது. ஏனெனில், ரெஸ்லிங் உலகில் மூன்று தலைமுறைகளையும் தனது வசீகரித்தால் கோலோச்சிய ‘காலா’ அவர்.!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR