நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. இதையடுத்து சென்னை முதல் போட்டியில் தோற்றால் அந்த சீசனில் நன்றாக விளையாடும் என ஒரு தரப்பும், முதல் போட்டியிலேயே தோற்றுள்ளதால் அந்த அணி இந்தத் தொடர் முழுக்கவே சொதப்பும் என மற்றொரு தரப்பும் விவாதிக்கத் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில், இதுவரை சென்னை அணி தனது முதல் போட்டியில் பெற்ற முடிவுகள் மற்றும் தொடரின் இறுதியில் அந்த அணி என்ன இடத்தைப் பெற்றது எனும் விபரத்தை விளக்கமாகப் பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2008ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் முதல் சீசனில் சென்னை அணி தனது முதல் போட்டியில் பஞ்சாப்பை எதிர்கொண்டது. அதில் பஞ்சாப்பை வென்ற சென்னை அணி, அந்தத் தொடரில் ரன்னர்-அப் பாக வந்தது. அதாவது இறுதிப் போட்டி வரைக்கும் வந்து தோற்றது. 2009ஆம் ஆண்டு நடந்த 2ஆவது சீசனின் தனது முதல் போட்டியில் மும்பை அணியிடம் வீழ்ந்தது சென்னை அணி. அதே நேரம், அந்தத் தொடரின் அரை இறுதிவரை சென்னை அணி வந்தது.


                                                              


2010ஆம் ஆண்டு தனது முதல் போட்டியிலேயே டெல்லி அணியிடம் தோற்றது சென்னை அணி. ஆனால், அந்தத் தொடரில் சாம்பியன் ஆனதும் அதே சென்னை அணிதான். சென்னை முதன்முறையாகக் கோப்பையை வென்றதும் அந்த சீசனில்தான். 2011ஆம் ஆண்டு முதல் போட்டியில் கொல்கத்தா அணியை வென்று வெற்றிக் கணக்கைத் தொடங்கிய சென்னை அணி, இறுதியில் சாம்பியன் ஆனது. சென்னை அணி தொடர்ச்சியாக வென்ற இரண்டாவது கோப்பை இது. 2012ஆம் ஆண்டு முதல் போட்டியிலேயே மும்பை அணியிடம் தோற்றது சென்னை. ஆனால் அந்தத் தொடரின் இறுதியில் ரன்னர்- அப்பாக வந்தது சென்னை.


2013ஆம் ஆண்டை எடுத்துக்கொண்டால் அதற்கு முந்தைய ஆண்டில் நடந்த கதையே இதிலும் தொடர்ந்தது. முதல் போட்டியில் மும்பையிடம் தோற்ற சென்னை இறுதிப் போட்டியில் மீண்டும் ரன்னர்- அப்பாக மட்டுமே வந்தது. 2014இல் முதல் போட்டியில் பஞ்சாப்பிடம் தோற்றது சென்னை. அந்த சீசன் இறுதியில் சென்னை அணிக்கு 3ஆம் இடம் கிடைத்தது. 2015இல் டெல்லியை வென்று வெற்றியுடன் கணக்கைத் தொடங்கிய சென்னை அணி, இறுதிப் போட்டியில் தோற்று ரன்னர்- அப்பாக வந்தது.


2016 , 2017 புள்ளி விபரத்தை எங்கு தேடினாலும் கிடைக்காது. காரணம், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அந்த இரு ஆண்டுகளும் சென்னை அணி விளையாட ஐபிஎல் நிர்வாகம் தடைவிதித்தது. தடை முடிந்து 2018ஆம் ஆண்டு திரும்பி வந்த சென்னை அணி முதல் போட்டியில் மும்பை அணியை வென்றது. அந்த சீசனில் சாம்பியன் பட்டமும் வென்றது. 2019ஆம் ஆண்டு ஆர்சிபி அணியை முதல் போட்டியில் தோற்கடித்த சென்னை, இறுதிப் போட்டி வரை வந்து ரன்னர்- அப் இடத்தைப் பிடித்தது.


                                                                    


சென்னை அணிக்கு ஒட்டுமொத்த ஐபிஎல்லில் பரிதாபகரமான ஆண்டு என்றால் அது 2020 தான். முதல் போட்டியில்  மும்பையை வென்ற சென்னை அணி, தொடர் தோல்விகளால் 7ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. 2021ஆம் ஆண்டு முதல் போட்டியில் டெல்லியிடம் தோற்றது சென்னை. ஆனால் அசத்தலாக விளையாடி அந்த சீசனில் சாம்பியன் ஆனது.


மேலும் படிக்க | IPL 2022: முதல் போட்டியில் வாகை சூடியது KKR! தடுமாறியது CSK


ஆகவே, இந்தப் புள்ளி விபரங்களின் அடிப்படையில் பார்த்தால், வெற்றியுடன்  கணக்கைத் தொடங்கிய சீசனில் சென்னை அணி சாம்பியனும் ஆகியுள்ளது; அதே நேரம் சாம்பியன் ஆகாமலும் இருந்தது. அதேபோல, தோல்வியுடன் கணக்கைத் தொடங்கிய சீசனில் சென்னை அணி சாம்பியன் பட்டமும் வென்றுள்ளது; அதேபோல சாம்பியன் ஆகாமலும் இருந்துள்ளது.


எனவே சென்னை அணியைப் பொறுத்தவரையில் முதல் போட்டியின் ரிசல்ட்டை வைத்து எந்தவிதமான முன்முடிவுக்கும் வர முடியாத சூழலே உள்ளது. எனவே சென்னை அணி இந்தத் தொடரில் என்ன செய்யப் போகிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.


மேலும் படிக்க | ‘அந்த’ பிளேயர்தாங்க ரொம்பப் பயம் காட்டுறாரு: கே.எல். ராகுல் ஓபன் டாக்!