SA vs SL: என்னா அடி... ஒரே போட்டியில் இத்தனை ரன்களா - உலகக் கோப்பையில் டாப் போட்டி இதுதான்!
World Cup 2023, SA vs SL: தென்னாப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இன்றைய லீக் போட்டிதான், உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுக்கப்பட்ட போட்டியாகும். பல்வேறு சாதனைகளை படைத்துள்ள இந்த போட்டியின் முக்கிய நிகழ்வுகளை இதில் காணலாம்.
World Cup 2023, SA vs SL Highlights: நடப்பு உலகக் கோப்பை தொடர் கடந்த அக். 5ஆம் தேதி முதல் தொடங்கியது. முதல் போட்டியில் இருந்தே பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமின்றி நடைபெற்று வரும் இந்த தொடரின் மூன்றாவது நாளான இன்று இரண்டு போட்டிகள் நடந்தன.
அதிரடி காட்டிய தென்னாப்பிரிக்கா
நடப்பு தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் - வங்கதேச அணிகள் தரம்சாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் மோதின. இதில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஆப்கனை வீழ்த்தியது. இப்போட்டி காலை 10.30 மணிக்கு தொடங்கப்பட்ட நிலையில், மற்றொரு லீக் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் மதியம் 2 மணியளவில் தொடங்கியது.
நடப்பு தொடரின் நான்காவது லீக் போட்டியான அதில் தென்னாப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. காரணமா, முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணியில் டி காக், வான் டெர் டசன், மார்க்ரம் ஆகியோர் சதங்களை அடித்து மிரட்டினர். இதில், மார்க்ரம் 49 பந்துகளில் சதம் அடித்து உலகக் கோப்பையில் ஒருவரால் அடிக்கப்பட்ட அதிவேக சதம் என்ற பெருமையை பெற்றார்.
பயம் காட்டிய குஷால் மெண்டிஸ்
இதன்மூலம், தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 428 ரன்களை குவித்தது. இலங்கை பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு இன்று சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை. அதேபோல், இலங்கை அணி பேட்டிங் வந்தபோது, இரண்டாவது ஓவரிலேயே பதும் நிசங்கா யான்சன் பந்துவீச்சில் டக் அவுட்டானார்.
ஆனால் மறுபுறம் குஷால் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் குவித்தார். குறிப்பாக 25 பந்துகளில் அவர் அரைசதம் அடித்தார். அதில் 6 சிக்ஸர்களும், 3 பவுண்டரிகளும் அடக்கம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பெரேரா 7 ரன்களில் அவுட்டானாலும் 10 ஓவர்களில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் எடுத்து சற்று வலுவான நிலையிலேயே இருந்தது. ஆால், மெண்டிஸ் 76 ரன்களில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழக்க இலங்கையின் பின்னடவு மீண்டும் தொடங்கியது.
சதீரா, தனஞ்செய டி செல்வா ஆகியோர் ஓரளவு தாக்குபிடித்தாலும், அசலங்கா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் கேப்டன் ஷனாகாவும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் இந்த ஜோடி 80 ரன்களை சேர்த்த நிலையில், அசலங்கா 79 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெளுத்தெடுத்த வெல்லலகே இன்றைய போட்டியிலும் சோபிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
மேலும் படிக்க | AFG vs BAN: எங்கே வெற்றியை கோட்டைவிட்டது ஆப்கான்? - கடைசி இடத்தில் நடப்பு சாம்பியன்
அடுத்த கேப்டன் ஷனகாவும் 68 ரன்களில் வெளியேற 9ஆவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் சேர்ந்த ராஜிதா, பதிரானா ஜோடி சற்று ரன்களை பெற்றுத் தந்தது. ராஜிதா மட்டும் ரன்களை பவுண்டரிகள் மூலம் சேர்த்துக்கொண்டே இருந்தார். அவர் 31 பந்துகளில் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியாக இலங்கை அணி 44.5 ஓவர்களில் 326 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதன்மூலம், தென்னாப்பிரிக்கா 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா பந்துவீச்சில் ஜெரால்ட் கோட்ஸி 3, யான்சன், ரபாடா, கேஷவ் மகராஜ் உள்ளிட்டோர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள்
தென்னாப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இன்றைய லீக் போட்டிதான், உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுக்கப்பட்ட போட்டியாகும். இதில் தென்னாப்பிரிக்கா 428 ரன்களையும், இலங்கை 326 ரன்களையும் எடுத்தது. இதன்மூலம், ஒரே போட்டியில், 754 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரே போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து அதிக ரன்கள் எடுக்கப்பட்ட போட்டிகளின் பட்டியலில் இப்போட்டி முதலிடத்தை பிடிக்கிறது.
புள்ளிப்பட்டியலில்...
இதுவரை நான்கு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் முறையே புள்ளிப்பட்டியலின் முதல் நான்கு இடத்தை பிடித்துள்ளன. தோல்வி அடைந்த ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகள் முறையே 7,8,9,10ஆவது இடத்தில் உள்ளன. ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் 5, 6ஆவது இடத்தில் உள்ளன. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி நாளை (அக். 7) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
மேலும் படிக்க | IND vs AUS: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அஸ்வின் ஏன் இடம்பெறுவார்? 6 காரணங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ