1975 மற்றும் 1979 நினைவுகள்: விடியல் கண்ட உலகக் கோப்பை... வேர்களை பரப்பிய கிரிக்கெட்டின் கதை!
World Cup Memories: 1975 மற்றும் 1979 ஆகிய ஆண்டுகளில் இங்கிலாந்தில் நடைபெற்ற இரண்டு உலகக் கோப்பையின் கதைகளையும், சுவாரஸ்ய சம்பவங்களையும் இதில் காணலாம்.
World Cup Memories: ஒருநாள் வடிவத்திற்கான உலகக் கோப்பை தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதுவரை 12 ஐசிசி தொடர்கள் நடைபெற்றுள்ள நிலையில், ஆஸ்திரேலியா அதிகமாக 5 முறை கோப்பையை கைப்பற்றியிருக்கிரது. அதேபோல், இந்தியா 2 முறையும், பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் தலா 1 முறையும் சாம்பியனாகி உள்ளன.
வெறியில் 10 அணிகள்
இந்த அணிகள் தற்போதைய உலகக் கோப்பை தொடரை வென்று தங்களின் கோப்பை கணக்கை அதிகப்படுத்திக்கொள்ள துடித்துக்கொண்டிருக்கின்றன. தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் போன்ற டெஸ்ட் அந்தஸ்து அணிகள் தங்களது முதல் கோப்பையை வாங்கவும் தீவிர முயற்சியில் இருக்கின்றன.
ஆனால், 2 முறை உலகக் கோப்பையை வென்ற அணியும், பெரும் ஜாம்பவான்களை கொண்ட அணியாகவும் திகழ்ந்த மேற்கு இந்திய தீவுகள் அணி இந்த உலகக் கோப்பைக்கு தகுதிபெறவே இல்லை என்பது மிக மிக துரதிருஷ்டவசமானதாகவும். இந்த முறை மேற்கு இந்திய தீவுகள் அணி உலகக் கோப்பைக்கு வரவில்லை என்றாலும் உலகக் கோப்பை என்று வந்துவிட்டால் மேற்கு இந்திய தீவுகளை ஒதுக்கவே முடியாது.
5 நாள்களில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடர்
1975ஆம் ஆண்டு முதல் ஆடவர் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. ஒருநாள் வடிவம் என்றாலும் அப்போது அது 60 ஓவர்களுக்கு வீசப்பட்டது. ஒரு பந்துவீச்சாளர் 12 ஓவர்கள் வரை வீசலாம். இப்போது போல் வெள்ளை பந்து இல்லாமல் சிவப்பு பந்து வீசப்பட்டது, அதுவும் வெள்ளை நிற உடையுடன் வீரர்கள் விளையாடினர். இது எப்போதும் சொல்லப்படுவது தான் என்றாலும், தற்போது 40 நாள்கள் அளவில் நடக்கும் உலகக் கோப்பை தொடர் 1975 மற்றும் 1978ஆம் ஆண்டில் வெறும் 5 நாள்களில் நடைபெற்று முடிந்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதா.
மேலும் படிக்க | போட்டியே நடக்காது, ஆனா கப்பு ஜெய்க்கலாம்; உலக்கோப்பைக்கு வார்னிங் கொடுக்கும் மழை
ஒரே நாளில் ஒரே நேரத்தில், நான்கு வெவ்வேறு மைதானங்களில் நான்கு போட்டிகள் என மூன்று நாள்களில் 12 குரூப் சுற்று போட்டிகள் நடைபெறும். அடுத்து, ஒரே நாளில் இரண்டு அரையிறுதி போட்டிகள் வெவ்வேறு மைதானங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. மேலும், புகழ்பெற்ற இறுதிப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடத்தப்பட்டது. ஏனென்றால் இவை அனைத்தும் பகல் ஆட்டங்களாக இருந்தன. இரவு போட்டி நடத்தப்படாது.
1975 உலகக் கோப்பை தொடர்
இங்கிலாந்தில் நடைபெற்ற 1975 உலகக் கோப்பை தொடரை, அந்நாட்டின் Prudential என்ற நிதி நிறுவனம் ஸ்பான்சர் செய்தது. முன்னர் கூறியது போல் 8 அணிகள் விளையாடின. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள், நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் என்ற 6 டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளும், இலங்கை மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க அணிகள் டெஸ்ட் அந்தஸ்து இன்றி அந்த தொடரில் பங்கேற்றன.
உலகக் கோப்பையில் இந்தியா தனது முதல் போட்டியை இங்கிலாந்துடன் மோதி தோல்வியுற்றது. இந்தியா அந்த தொடரில் ஒரு கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றது. கடைசி குரூப் போட்டியில் நியூசிலாந்திடம் (அப்போதும் நியூசிலாந்து தான்) வெளியேறியது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு வந்தன. அதுவரை உலகக் கோப்பையின் தீவிரத்தை அறியாத இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அரையிறுதியில் தான் இந்த முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளது.
தீவிரமும் சுவாரஸ்யமும்
இருப்பினும், அந்த போட்டியில் இயான் சேப்பல் தலைமையிலான ஆஸ்திரேலியா இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு வந்தது. நியூசிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் இறுதிப்போட்டிக்கு வந்தது. ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட மேற்கு இந்திய தீவுகளுக்கு கேப்டன் கிளைவ் லாய்டின் 105 ரன்கள் பெரிய ஸ்கோரை எட்ட உதவியது. 292 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலியா தீவிரமாக துரத்தினாலும், விவ் ரிச்சர்ட்ஸின் மூன்று முக்கிய ரன் அவுட்கள் மேற்கு இந்திய தீவுகளுக்கு கோப்பையை பெற்றுத் தந்தன.
சுனில் கவாஸ்கர் 174 பந்துகளில் 34 ரன்களை (ஒரே ஒரு பவுண்டரி) எடுத்தது, அந்த போட்டியில் இந்தியாவை 202 ரன்களில் இங்கிலாந்து வீழ்த்தியது இந்தியாவின் மறக்க இயலாத நினைவுகள். மேற்கு இந்திய தீவுகள் அவ்வளவு அச்சுறுத்தல் அளித்தாலும், அந்த அணியையே ஒரு கை பார்த்த அணி என்றால் அது பாகிஸ்தான் தான்.
பாகிஸ்தான் அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான குரூப் போட்டியில் 60 ஓவர்களுக்கு 266 ரன்களை எடுத்தது. ஆனால், பந்துவீச்சில் மிரட்டிய பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் அணியை 203 ரன்களிலேயே 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியது. ஆனால், கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆண்டி ராபர்ட்ஸ் - டெரிகி முர்ரே 76 பந்துகளுக்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, அரையிறுதிக்கு தங்கள் அணியை தகுதிபெற வைத்தனர்.
மேலும் படிக்க | இந்த உலகக் கோப்பையை ஆளப்போகும் 5 ஸ்பின்னர்கள் இவங்கதான்... எழுதி வச்சுக்கோங்க!
1979 உலகக் கோப்பை தொடர்
இதிலும் மேற்கு இந்திய தீவுகள் தான் ஆதிக்கம் செலுத்தியது. கடந்த தொடரை போல் இதிலும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள், நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதிபெற்றன. மற்ற இரண்டு இடங்களில் இலங்கை மற்றும் கனடா அணிகள் தகுதிபெற்றன. முதல் ஐசிசி கோப்பை தொடரை வென்ற இலங்கையும், இரண்டாம் இடம் பிடித்த கனடா அணியும் உலகக் கோப்பைக்கு வந்தன என்பது தனிக்கதை.
இந்திய அணி இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இந்த இரண்டு உலகக் கோப்பை தொடரிலும் தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் வெங்கட்ராகவன் தான் கேப்டனாக செயல்பட்டார் என்பது நினைவுக்கூரத்தக்கது. மேற்கு இந்திய தீவுகள், நியூசிலாந்து இலங்கை அணியுடன் தோல்வியுற்று வெளியேறியது. ஆனால், கடந்த தொடரில் இறுதிப்போட்டி வரை வந்த ஆஸ்திரேலியா இம்முறை அரையிறுதிக்கு கூட வரவில்லை. இங்கிலாந்து, நியூசிலாந்து, மேற்கு இந்திய தீவுகள் கடந்த தொடரில் வந்த அதே அணிகளுடன் பாகிஸ்தான் இம்முறை அரையிறுதிக்கு வந்தது.
ஆசிய கண்டத்தில் கிரிக்கெட்
ஆனால், இறுதிப்போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் இங்கிலாந்தை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது ஆதிக்கத்தை தொடர்ந்தது. இந்த தொடரில் குறிப்பிட்டுச் சொல்ல பல விஷயங்கள் இருந்தாலும், கிரஹாம் கூச், மைக்கெல் ஹோல்டிங், ஜான் ரைட், இயான் போத்தம், ஜோயல் கார்னர், சிக்கந்தர் பக்த் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இதில் அறிமுகமாகி சிறந்த ஆட்டத்தையும் வெளிப்படுத்தினர் எனலாம்.
இந்த இரு உலகக் கோப்பை தொடரும் ஆசிய கண்டத்தில் குறிப்பாக, இலங்கை, பாகிஸ்தானில் கிரிக்கெட்டை பரவலாக்கியது. இந்தியாவை இலங்கை வென்றதும், அரையிறுதி வரை பாகிஸ்தான் வந்ததும் இதற்கு முக்கிய காரணமாகும். ஆனால் அடுத்த உலகக் கோப்பை தான் இந்தியாவையே புரட்டிப்போட்டது என நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியவேண்டும் என்று இல்லை.
மேலும் படிக்க | ‘இது என் கடைசி உலக கோப்பை’ ரவிச்சந்திரன் அஸ்வின் உருக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ