தமிழகத்தில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 2017-2018ம் கல்வியாண்டில் 100 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாணவர்கள் இடைநிற்றல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பாஜக எம்பிக்கள் சுதாகர் துகாராம் மற்றும் பிபி சவுத்ரி ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிலளித்துள்ளார். அதில், தேசிய அளவில் 2015-16ம் ஆண்டில் மாணவர்கள் இடைநிற்றல் 8.1 விழுக்காடு இருந்த நிலையில், 2016-17ம் ஆண்டில் அது 10 விழுக்காடாக அதிகரித்திருப்பதாகத் தெரிவித்தார். 


ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் மாணவர்கள் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. அதேநேரம், தமிழகத்தில் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் இடைநிற்றல் 100 விழுக்காடு அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார்.


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை அமலில் உள்ளது. 9ம் வகுப்பு முதல் 75 சதவீத வருகைப்பதிவுடன், முழு ஆண்டுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மாணவர்கள் தேர்ச்சி அடைவர். நாட்டிலேயே மிக அதிகமாக தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 100 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் புள்ளிவிவரங்களை வெளியிட்டிருக்கிறது.


மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரின் தகவலுக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை, வறுமை, பொருளாதார சூழல் போன்ற காரணங்களால் மாணவர்களால் படிப்பைத் தொடர முடியாத சூழல் நிலவுவதாக தெரிவித்துள்ளது. இதுபோன்று இடைநின்ற மாணவர்களை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் மூலம் SSA திட்டத்தில் சேர்த்து, தொடர்ந்து கற்பித்து வருவதாகவும் மாநில பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.