5, 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 60 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வு நடக்கும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பள்ளி கல்வித்துறை ஆணையர் சிஜிதாமஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


தமிழகத்தில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை கடந்த 2012-2013-ம் கல்வி ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. இம்முறையில், வளரறிமதிப்பீட்டுக்கு (Formative Assesment) 40 மதிப்பெண்ணும், தொகுத்தறி மதிப்பீட்டுக்கு (summative Assesment) 60 மதிப்பெண்ணும் ஒதுக்கப்பட்டுள்ளன.


மேற்கண்ட முறைகளில் வளரறி மதிப்பீடு என்பது FA + FB என இரண்டு வகைகளில் மதிப்பீடு செய்யப்படுகின்றன. FAல் புராஜெக்ட், மாதிரிகள் வடிவமைத்தல், செயல்பாடுகள் ஆகியவை அந்தந்த பள்ளி பாட ஆசிரியர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு 20 மதிப் பெண்கள் வழங்கப்படுகிறது. தொகுத்தறிவு மதிப்பில் பாடப் பகுதியில் இருந்து கேள்வித்தாள் தயாரித்து பள்ளி அளவில் அல்லது வட்டார அளவில் மற்றும் மாவட்ட அளவில் 60 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தி மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.


இந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 5, 8-ம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதி தேர்வின்போது, கடந்த 22.10.2019-ம் தேதியில் அறிவித்தபடி FA, FB-ல் வழங்கப்பட்ட 40 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். தொகுத்தறிவு முறையின் கீழ் வழங்கப்பட உள்ள 60 மதிப்பெண்களுக்கான தேர்வுக்குரிய கேள்வித்தாள்கள் அரசு தேர்வுத்துறையால் தயாரிக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும்.


விடைத்தாள்கள் அந்தந்த சி.ஆர்.சி. மைய அளவில் மாற்றி அனுப்பி திருத்தம் செய்து மதிப்பெண் பட்டியல் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், 5, 8-ம் வகுப்புகளுக்கான தேர்வில் முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என்று அரசு ஆணையிட்டுள்ளது. அதனால் மாணவர்கள், பெற்றோர் அச்சப்பட தேவையில்லை.


இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.