ஆளுநர் மாளிகையில் நுழைந்தது கொரோனா: 84 பேருக்கு தொற்று உறுதி!!
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் மூத்த ஊழியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் அவர்கள் யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லமான சென்னையில் உள்ள ராஜ் பவனில் 84 பேரின் கொரோனா வைரஸ் கோவிட் -19 (Covid-19) பரிசோதனை முடிவுகள் நேர்மறையாக வந்துள்ளன என ஒரு அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் (Banwarilal Purohit) மற்றும் மூத்த ஊழியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் அவர்கள் யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
ஒரு சில ஊழியர்களுக்கு அறிகுறிகள் காணப்பட்ட பின்னர் சோதனைகள் நடத்தப்பட்டன. நடத்தப்பட்ட 147 சோதனைகளில் 84 பேரின் சோதனை முடிவுகள் நேர்மறையாக வந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களில் பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு பணியாளர்களும் அடங்குவர். அவர்கள் அனைவரும் வளாகத்தின் வெளிப்புறத்தில், பிரதான வாயில் போன்றவற்றில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். பிரதான கட்டிடத்தில் யாரும் பணிபுரியவில்லை. அனைவரும் சுகாதாரத் துறையால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அலுவலகங்கள் உட்பட ராஜ் பவனின் (Raj Bhavan) முழுப் பகுதியும் கார்ப்பரேஷன் சுகாதார அதிகாரிகளால் கிருமி நீக்கம் செய்யப்பட்டு சுத்திகரிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் 5,849 பேருக்கு கொரோனா உறுதி..!
2020 ஜூலை 31 ஆம் தேதி வரை சுற்றுலாப் பயணிகளுக்கான ராஜ் பவன் சுற்றுப்பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் ராஜ் பவன் வலைத்தளம் குறிப்பிடுகிறது. எனினும், மார்ச் மாத இறுதியில் நாடு தழுவிய லாக்டௌனின் முதல் கட்டம் தொடங்கியதிலிருந்தே இங்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ் பவன், கிண்டி தேசிய பூங்காவின் ரிசர்வ்ட் வனப்பகுதியில் அமைந்துள்ளது. புள்ளி மான், கருப்பு பக் மற்றும் அல்பினோ போன்ற மான் வகைகளுடன் மூஞ்சூர் வகைகள், குள்ளநரி, பல வகையான ஊர்வன மற்றும் பார்ட்ரிட்ஜ்கள், பீசண்ட்ஸ், கிளிகள், காடை, பரதீஸ் போன்ற பல வகையான பறவைகளும் அங்கு உள்ளன.
கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதன்கிழமை, மாநிலத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 5849 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையின் படி, மாநிலத்தில் மொத்தம் 1,86492 பேர் கோவிட் -19-ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,31,583 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலத்தில் 51,765 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இருப்பினும், சமீபத்திய வாரங்களில் தலைநகர் சென்னையில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டது. ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பாதியாக குறைந்துவிட்டது. சென்னையில் புதன்கிழமை 1171 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 13941 ஆக உயர்ந்தது.