2021-ல் ரஜினி தான் கோட்டையில் கொடியேற்றுவார்; அவர்தான் முதல்வர்: க.தியாகராஜன்
தொடர்ந்து ரஜினிக்கு ஆதரவான கருத்துக்களை கூறி வரும் கராத்தே தியாகராஜன், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், நடிகர் ரஜினிகாந்த் இன்னும் ஆறு மாதத்தில் கட்சி ஆரம்பிப்பார் எனக் கூறியுள்ளார்.
சென்னை: கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் பற்றி அறிவித்தார். அப்பொழுது அவர், நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என அறிவித்தார். இந்த அறிவிப்பு நீண்ட காலமாக ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு பெரும் ஆனந்தத்தை தந்தது. அரசியலுக்கு வருகிறேன் என்று கூறியதோடு மட்டுமில்லாமல், ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் வகையில் புதிய வலைத்தளம் (https://www.rajinimandram.org/) ஒன்றினை தொடங்கினார். இந்த வலைதளம் நம்மிடையே தகவல் பரிமாற்றத்திற்கான ஊடகமாக மட்டுமின்றி, தமிழ்நாட்டில் நல்லதொரு மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு கருவியாகவும் செயல்படும்" எனவும் தெரிவித்திருந்தார்.
அரசியலுக்கு வருவேன் என அறிவித்த பிறகு "ஆன்மீக அரசியல், பா.ஜ.க-வுக்கு ஆதரவு, சபரிமலை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம், 7 பேர் விடுதலை விவகாரம், காஷ்மீர் விவகாரம் மற்றும் மொழி கொள்கை என நடிகர் ரஜினிகாந்த தெரிவித்த கருத்துக்கள் பெரும் அளவில் விவாதத்துக்கு உள்ளானது. ரஜினியின் பெரும்பாலான கருத்துக்கள் பாஜகவுக்கு ஆதரவாகவே உள்ளது என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரஜினி அரசியல் பிரவேசத்திற்கு பல அரசியல் கட்சிகள் வாழ்த்துக்களை கூறினாலும், சில கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனாலும் சில தலைவர்கள் அவருக்கு ஆதரவாகவும், ரஜினி அரசியலுக்கு வந்தால், பல நல்ல மாற்றங்கள் ஏற்படும் எனவும் தொடர்ந்து கூறிவருகின்றனர். ஆனாலும் அரசியல் அறிவிப்புக்கு பின்பும் ரஜினி தொடர்ந்து படங்களில் தான் நடித்து வருகிறார் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், ரஜினிக்கு தொடர்ந்து ஆதரவான கருத்துக்களை கூறி வரும் கராத்தே தியாகராஜன், இன்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில், நடிகர் ரஜினிகாந்த் இன்னும் ஆறு மாதத்தில் கட்சி ஆரம்பிப்பார் எனக் கூறியுள்ளார்.
அவர் கூறியது, தமிழகத்தில் கருணாநிதி, அம்மையார் ஜெயலலிதா ஆகியோரின் வெற்றிடத்தை நிரப்ப அண்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தால் மட்டும் முடியும். அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, அதாவது ஆறு மாதத்திற்கு முன்பே கட்சியை கட்டாயமாக ஆரம்பிப்பார். கட்சியை ஆரம்பித்த பிறகு, அவர் (ரஜினிகாந்த்) மிகப்பெரிய வெற்றியை பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ப்பார்.
2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிச்சியமாக கோட்டையில் கொடியேற்றுவார். எல்லோரும் எதிர்பார்க்கும் தலைவராக அண்ணன் ரஜினிகாந்த் இருப்பார் எனக்கூறினார்.