Pongal 2024: பொங்கல் பண்டிகை தமிழ்நாடு மட்டுமின்றி தமிழர்கள் வாழும் பகுதியில் கொண்டாடப்படுவது வழக்கம். அறுவடை திருநாளான இந்த தை பொங்கல் பண்டிகை தை மாதம் முதல் நாள் அன்று கொண்டாடப்படுகிறது. மார்கழி கடைசி நாளான இன்று போகி பொங்கலை தொடர்ந்து தை பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாள்கள் கொண்டாட்டம் இருக்கும். இது நாடு முழுவதும் வெவ்வேறு பெயர்களில் அறுவடை திருநாள் கொண்டாடப்படுகிறது. சங்கராந்தி பண்டிகை தெலுங்கு பேசும் மக்களிடையே கொண்டாடப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி பொங்கல் விழா


அந்த வகையில், பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் ஆகியவற்றில் கடந்த வாரம் முதலே தொடங்கிவிட்டது எனலாம். பொங்கல் பானையில் சர்க்கரை பொங்கல் இடுவது, கரும்பு உண்ணுவது, ஜிகு ஜிகு வேட்டி சட்டைகளில் போட்டோசூட் என கடந்த சில நாள்களாக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதேபோல், ஒன்றிய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகனின் டெல்லி இல்லத்திலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 


இந்த பொங்கல் விழாவில் பிரதமர் மோடி (PM Modi) பங்கேற்று உரையாற்றினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 


மேலும் படிக்க | அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு எப்போது? தேதியை அறிவித்த அமைச்சர் மூர்த்தி!


பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து


பிரதமர் மோடி தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி - சட்டையில் பொங்கல் விழாவிற்கு வருகை தந்திருந்தார். அவர் அந்நிகழ்வில் ஆற்றிய உரையில், "தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு" என்ற திருக்குறளை குறிப்பிட்டு பேசினார். அதாவது, நாட்டு மக்களின் தேவைக்குக் குறையாத விளைபொருளும், தகுதியுடைய சான்றோர்களும், தாழ்வில்லாத செல்வத்தை உடையவரும் ஒன்று சேர்ந்திருப்பதே, நல்ல நாடாகும் என்பதையும் அவர் இந்தி மொழியில் விளக்கினார். மேலும், இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என தமிழிலும் பிரதமர் மோடி தனது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார். 



இந்த பொங்கல் விழாவில் பாஜக மேலிட நிர்வாகிகள், பிரபலங்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்ட நிலையில், நடிகை மீனாவும் (Actress Meena) இதில் கலந்துகொண்டார். குறிப்பாக, நடிகை மீனாவுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதாவது, நடிகை மீனாவுக்கு நிகழ்ச்சியில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மீனாவுக்கு அதிக முக்கியத்துவம்?


அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒருவர் அளித்த தகவல்களின்படி, நிர்மலா சீதாராமன், தமிழிசை செளந்தரராஜனுக்கு அடுத்தபடியாக நடிகை மீனாவுக்குதான் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மீனாவுக்கு முதல் வரிசையில் அருகில் இடம் அளிக்கப்பட்டிருந்தது. அதற்கு அடுத்த வரிசையில்தான் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனுக்கு இடம் அளிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. 


அதுமட்டுமின்றி, இந்நிகழ்ச்சியில் பொங்கல் வைக்கும் போதும் பிரதமருக்கு அருகில் மீனா மற்றும் பிரபல நடன இயக்குநரான கலா மாஸ்டர் ஆகியோர்தான் இருந்தார்கள் என்றும் கூறப்படுகிறது. மீனா அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இல்லை என்ற நிலையில், ஒரு நடிகையாக அவருக்கு இத்தகைய முக்கியத்துவம் அளிக்கப்படுவது அவர் விரைவில் பாஜகவில் இணைய இருப்பதற்கான அறிகுறிகள் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. வரும் மக்களவை தேர்தலுக்கு அவர் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 


தமிழக பாஜகவில் திரை பிரபலங்கள்


பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். அவருக்கு நடிகை மீனா மிகவும் நெருக்கமான தோழி ஆவார். அந்த வகையில், மீனாவும் குஷ்பு பாணியில் பாஜகவில் இணைந்து கட்சி பொறுப்பை பெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே குஷ்பு மட்டுமின்றி நமீதா, ராதாரவி, கங்கை அமரன், கஸ்தூரி ராஜா, குட்டி பத்மினி, பொன்னம்பலம், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், இசையமைப்பாளர் தினா, தயாரிப்பாளர் நடராஜன், நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் தமிழக பாஜகவில் உள்ளனர். மேலும் இவர்களில் பலரும் எல். முருகன் தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக இருந்தபோது, கட்சியில் இணைந்தவர்கள் ஆவர். தற்போது அண்ணாமலை தலைவராக இருக்கும் வேளையில், நடிகை காயத்ரி ரகுராம், கௌதமி போன்றோர் பாஜகவில் இருந்து விலகியதும் நினைவுக்கூரத்தக்கது.  


மேலும் படிக்க | Pongal Gift: 1000 ரூபாயை பெற இன்றே கடைசி நாள்... பொங்கலுக்கு பின்னரும் கிடைக்குமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ