ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்லாதது ஏன்?... ஓபிஎஸ் வாக்குமூலத்தால் பரபரப்பு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்லாதது, சிசிடிவி காட்சிகள் அகற்றப்பட்டது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் முதல் முறையாக ஆஜரானார். காலை 11.30 மணிக்கு தொடங்கிய விசாரணை 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. அதன் பின்னர் பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கிய விசாரணை, மேலும் ஒன்றரை மணி நேரம் நீடித்தது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்வது தொடர்பாக தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அளித்த வாக்குமூலத்தை சுட்டிக்காட்டி ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை ஆணையம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் ராம் மோகன் ராவ் தன்னிடம் அது தொடர்பாக எதுவும் பேசவில்லை எனவும், அவ்வாறு கேட்டிருந்தால் தான் உடனடியாக கையெழுத்து போட்டிருப்பேன் எனவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | ”எனக்கு எதுவுமே தெரியாது” - ஜெயலலிதா சிகிச்சை குறித்து ஓபிஎஸ்
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 35 நாட்களில் ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என அப்போதய அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோரிடம் தான் கூறியதாகவும், அப்பல்லோ மருத்துவர்களிடம் கலந்து பேசிய பிறகு வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து முடிவெடுக்கலாம் என சி.விஜயபாஸ்கர் கூறியதாகவும் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி மருமகன் விஜயகுமார் ரெட்டியை சந்தித்து தான் இதே கருத்தை வலியுறுத்தியதாகவும், ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும், ஒரு வாரத்தில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என விஜயகுமார் ரெட்டி கூறினார் எனவும் ஓ.பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார். அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தான் எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்ததாகவும், அப்போலோ மருத்துவமனை சிசிடிவி கேமராக்களை அகற்ற தான் உத்தரவிடவில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார். சசிகலாவின் அழைப்பின் பெயரில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்க வந்த அமெரிக்க மருத்துவர் சமின் சர்மா ஆஞ்சியோகிராபி சிகிச்சை அளிக்கக்கூறிய நிலையில், அவர் எந்த சிகிச்சையும் அளிக்காமல் சென்றது தொடர்பான விவரங்கள் குறித்தும் தனக்குத் தெரியாது என ஓ.பன்னீர் செல்வம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சுமார் மூன்றரை மணி நேரம் நடந்த விசாரணையில் ஓ.பன்னீர்செல்வத்திடம் 78 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், பல கேள்விகளுக்கு தனக்கு எந்த விவரமும் தெரியாது என்றே ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து, ஓ.பன்னீர் செல்வத்திடம் நாளையும் விசாரணை தொடர உள்ளது.
மேலும் படிக்க | நான் ஜெயலலிதாவை பார்க்கவே இல்லை : இளவரசி..!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR