கர்நாடக சட்டமன்றத் தேர்தல்: பாஜகவிற்கு எதிராக களமிறங்குகிறது அதிமுக - எடப்பாடியின் ஸ்கெட்ச் என்ன?
BJP AIADMK Breakup: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்றும், புலிகேசிநகர் தொகுதியில் அதிமுக கர்நாடக மாநிலத் தலைவர் அன்பரசன் போட்டியிடுவார் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
BJP AIADMK Breakup: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 19) அறிவித்தார். அதேவேளையில் பெங்களூரு சட்டப்பேரவைத் தொகுதிக்கான வேட்பாளரையும் அவர் அறிவித்தார்.
வேட்பாளர் அறிவிப்பு
"கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் புலிகேசிநகர் தொகுதியில் டி.அன்பரசனை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அன்பரசன் அதிமுகவின் கர்நாடக மாநிலத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக, கடந்த காலங்களில் கர்நாடகாவில் தேர்தலில் போட்டியிட்டு ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, திராவிட மேஜர் கடந்த காலத்தில் KGF தொகுதியில் மூன்று முறை வென்றார்.
கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, மே 13ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். மேலும், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் அதிமுக அக்கட்சிக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தியுள்ளது.
இபிஎஸ் vs அண்ணாமலை
தமிழ்நாட்டில் ஏற்கெனவே அதிமுக - பாஜக கட்சிகளுக்கு இடையேயான கூட்டணியில் புகைச்சல் உள்ளதாக தெரிகிறது. எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக இரு கட்சிகளின் வட்டாரங்களில் இருந்தும் தகவல்கள் கூறுகின்றன. மேலும், அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பாஜக தமிழ்நாட்டில் வளராது என அண்ணாமலை பாஜக மேலிடத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, திமுக முக்கிய நிர்வாகிகளின் சொத்து பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, அடுத்து அதிமுகவினரின் சொத்து பட்டியலும் வெளியிடப்படும் என மறைமுகமாக தெரிவித்திருந்தது அந்த புகைச்சலை மேலும் அதிகப்படுத்தியது எனலாம். தொடர்ந்து, அண்ணாமலை குறித்து தான் கருத்து தெரிவிக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியது இருவருக்கும் இடையே பிரச்னை தீவிரமடைந்திருப்பதை காட்டுவதாகவும் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்தனர்.
ஓபிஎஸ் தரப்பு?
தற்போது அண்ணாமலை கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பொறுப்பாளராக இருக்கும் வேளையில், அதிமுகவின் இந்த வேட்பாளர் அறிவிப்பு, அண்ணாமலை எதிர்ப்பு நடவடிக்கையாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பொதுசெயலாளராக பொறுப்பேற்ற பின்னர், அதிமுக சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும். ஓபிஎஸ் தரப்பினரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவோம் என கூறியிருந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது.
மேலும் படிக்க | அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் பணம்? சோதனை செய்த அதிகாரிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ