தேவர் மகன் திரைப்படத்தில் பிரபலமான ஓர் வசனம் வரும். கமல்ஹாசனிடம், சிவாஜி பேசும் வசனம் அது. ‘இன்னிக்கி நா விதை போடுறன், நாளைக்கு அத உன் பையன் சாப்பிடுவான். ஆனா விதை, நா போட்டது. இதென்ன பெருமையா. கடமை’ என்று. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரம்மாண்டமாக உருவாகி வந்திருக்கும் நவீன சமூகம், பல அறம் சார்ந்த மனிதர்களின் தியாகங்களால் உருவானது. ஏதோவொரு இடத்தில் எந்த ஊடக வெளிச்சமும் இல்லாமல் அறம் சார்ந்த மனிதர்கள் செய்யும் செயல், நாளைய தலைமுறைக்கு பெரும் பேருதவியாக அமையும் வகையில் மாற்றமடையும். 


மேலும் படிக்க | ‘மெயின் ரோட்டில்’ அராஜகத்தில் ஈடுபட்டதால்தான் கைது! - ஆர்.எஸ்.பாரதி விளக்கம்


எத்தனையோ பிரபலங்களின் வாழ்க்கை இயல்பாகத்தான் இருந்திருக்கிறது. அவர்கள் மாபெரும் ஆளுமைகளாக மாறி பெரும் மாற்றங்களுக்கு காரணமாக இருந்திருப்பது என்றோ, ஏதோ இடத்தில், யதேச்சையாக படித்த ஏதோ ஓர் புத்தகமாகத்தான் இருக்கிறது. எனவே, புத்தகம் என்பது பிரம்மாண்ட பயணத்தின் பெரும் வாசலாகும். எத்தனையோ திருடர்கள், குற்றவாளிகள் புத்தகங்களைப் படித்து தங்களின் வாழ்க்கையையே மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். வாசிப்பு என்பது வெறும் பழக்கமல்ல. ஒரு சமூகத்தின் மாபெரும் மாற்றமல்லவா. அதனால்தான், ஆயுதங்களைவிட புத்தகம் ஆபத்தானது என்று ஆளும் அதிகார வர்க்கங்கள் சொல்கின்றன.



அப்படிப்பட்ட பழக்கத்தை போகுகிற போக்கில் அசாத்திய முயற்சியாக தேனி மாவட்டத்தில் செய்திருக்கிறார்கள். அதுவும் எங்கே. குற்றவாளிகளும், அவரது ஆதரவாளர்களும், உறவினர்களும் என சகலரும் வந்துபோகும் காவல்நிலையத்தில். தேனி மாவட்டம் சின்னமனூர் காவல்நிலையத்தில்தான் இந்த பிரம்மாண்டமான முயற்சியை தொடங்கியிருக்கிறார்கள். 


‘போலீஸ் ஸ்டேஷன்’ என்றாலே ஒருவித அச்சத்தை உண்டு பண்ணும் சம கால சூழலில், இயல்பான ஒரு போலீஸ் ஸ்டேஷனை உருவாக்கி அசத்தியிருக்கிறார்கள் காவலர்கள். இந்த மாபெரும் முயற்சியை தொடங்கி பெரும் நம்பிக்கையை அளித்திருக்கிறார் சின்னமனூர் காவல் ஆய்வாளர் சேகர். 



சின்னமனூர் காவல்நிலையத்தில் பழையப் பொருட்களை எல்லாம் சேகரித்துவைக்கும் ஓர் அறையில் பாழடைந்த பொருட்கள் குவிக்கப்பட்டிருந்தன. இதனைக் கண்ட சின்னமனூர் காவல்நிலைய ஆய்வாளர் சேகருக்கு  உதித்தது ஒரு ஐடியா. ‘இந்தப் பொருட்களையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, இந்த இடத்தை நூலகம் மாதிரி ஏன் உருவாக்கக் கூடாது’ என்பதுதான் அது. 


உலகத்தின் மாபெரும் சொல் ‘செயல்’ என்பது போல, அந்த அறையை முழுவதுமாக மாற்றிவிட்டு பொதுநூலகம் ஒன்றை உருவாக்கிக் காட்டியுள்ளார் காவல் ஆய்வாளர் சேகர். மேலிடத்தில் முறையாக அதற்கான அனுமதியைப் பெற்றுள்ளார். தன்னார்வலர்களால் வழங்கப்பட்ட புத்தகங்களை சிறுக சிறுக சேமித்திருக்கிறார். கிட்டத்தட்ட 700 புத்தகங்களைக் கொண்டு ஒரு நூலகத்தையே காவல்நிலையத்தில் உருவாக்கியுள்ளார். 



இதுமட்டுமல்லாமல், இந்த நூலகத்தில் தினசரி நாளிதழ்கள், இதழ்களும் வைக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் 20 பேர் அமர்ந்து வாசிக்க கூடிய அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினசரி காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த நூலகத்தை பயன்படுத்தலாம். போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருவோருக்கான புத்தகங்கள் இங்கு அதிகம் இருப்பதால் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 


அதேநேரம் மற்ற நூலகங்களை போல புத்தகங்களை வீட்டுக்கு எடுத்து சென்று படிக்க அனுமதி வழங்குவதில்லை. பின் யாருக்காக இந்தப் புத்தகங்கள்?. அங்குதான் காவல் ஆய்வாளர் சேகரின் முயற்சி பாராட்டுக்குரிய தளத்துக்குச் செல்கிறது. அது என்ன?


இயல்பாக போலீஸ் ஸ்டேஷனில் கைதிகள், அவர்களது ஆதரவாளர்கள், உறவினர்கள் என பலரும் வந்துசெல்வதுண்டு. இதில் பலர் பல்வேறு விவகாரங்களுக்காக ஸ்டேஷனில் வெகுநேரம் காத்திருக்கக் கூடிய சூழல் ஏற்படுகிறது. அப்படிக் காத்திருக்கும் நபர்களுக்காகத்தான் இந்த பொது நூலகமே. வெறுமனே உட்கார்ந்து காத்திருக்காமல் ஸ்டேஷனுக்குள் இருக்கும் எந்த புத்தகத்தையும் அவர்கள் எடுத்துப் படிக்கலாம். 


மேலும் படிக்க | ‘உங்கள் வீட்டு நாயை பராமரிக்க காவலர் வேண்டுமா ?’ - ‘ஆர்டர்லி’ முறைக்கு நீதிபதி சரமாரிக் கேள்வி


விரைவில் கைதிகளுக்கும் புத்தகத்தை வழங்க பரிசீலனை செய்துகொண்டிருப்பதாகவும், அதன்மூலம் அவர்களின் மனநிலையும், வாழ்க்கையும் மாற வாய்ப்புள்ளதாகவும் சின்னமனூர் காவலர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.


காவல் ஆய்வாளர் சேகரின் இந்த முயற்சியைப் பாராட்டுவதற்குக் காரணம், அரசியல் ரீதியாக இரண்டு பெரும் மாற்றங்களை இது உண்டு பண்ணுகிறது என்ற நம்பிக்கையில்தான். புத்தகங்களைப் படிக்க பொதுமக்கள் காவல்நிலையத்துக்கு வருவதன் மூலம் ‘போலீஸ் ஸ்டேஷன்’ மீதான ஒருவித அச்சம் விலகும். எந்தப் பிரச்சனை என்றாலும் தைரியமாக காவல்நிலையத்துக்கு வந்து புகார் அளிக்கும் ‘தெம்பை’ அது வழங்கும். அதுவும், காவல்நிலையத்தின் படியே அவ்வளவாக ஏறாத கிராமப்புற பெண்களுக்கு அது சாத்தியமானால் சமூக ரீதியிலான மாற்றம்தானே.!



‘இளைஞர்களை நல்வழிப்படுத்துவதும் காவல்துறையினரின் பணிதான். அவர்களை நல்ல புத்தகங்களைப் படிக்க வைப்பதன் மூலம் அந்த மாற்றத்தைக் கொண்டுவர முடியும்’ என்று சின்னமனூர் காவல் ஆய்வாளர் பி.சேகர் அடக்கமாக கூறுகிறார். அந்தக் குரலில் அடுத்த தலைமுறைகளுக்கான விதை ஒளிந்திருக்கிறது.! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ