Vijay vs Vijayakanth, Political Parties First Conference: நடிகர் விஜய் கடந்த டிசம்பர் மாதம் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நிலையில், அதன் முதல் மாநில மாநாடு இன்று (அக். 27) நடைபெற இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டிக்கு அருகே உள்ள வி.சாலை பகுதியில் 85 ஏக்கர் திடலில் மாநாடு இன்று நடைபெற இருக்கிறது. 3 லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என முதலில் கணக்கிடப்பட்டாலும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக தவெகவின் முதல் மாநில மாநாடு பார்க்கப்படுகிறது. விஜய்யின் இந்த நிகழ்வு பெரிய அளவில் கவனம் பெற்றிருக்க, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, 2005ஆம் ஆண்டில் மதுரையில் மறைந்த விஜயகாந்த் தலைமையில் நடந்த தேமுதிகவின் முதல் மாநில மாநாட்டை நினைவுக்கூர்ந்து பதிவிட்டுள்ளார்.


நள்ளிரவில் பிரேமலதா போட்ட குண்டு


பிரேமலதா அவரது X பக்கத்தில் இன்று நள்ளிரவில்,"இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு... மதுரை தேமுதிக முதல் மாநாடு 150 ஏக்கர் நிலப்பரப்பில் 2.5 லட்சர் சேர் போடப்பட்டு நடத்தப்பட்டது... உட்கார இடம் இல்லாமல் மாநாட்டு பந்தலுக்கு வெளியே லட்சோப லட்ச தொண்டர்கள் குவிந்தனர்... மொத்தம் 25 லட்சம் பேர் கலந்து கொண்டனர். உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது" என பதிவிட்டுள்ளார். அதாவது, தவெக முதல் மாநில நடக்கும் வேளையில் தேமுதிகவின் மாநாட்டை நினைவுக்கூர்ந்து பதிவிட்டது விஜய்யை சீண்டுவது போல் உள்ளது என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


மேலும் படிக்க | தவெக மாநாட்டில் விஜய் பேசப்போகும் 5 முக்கியமான விஷயங்கள்..!


விஜயகாந்த் வித்தியாசமானவர்


அந்த வகையில், விஜய்காந்த் மற்றும் விஜய்யின் ஆகியோரின் அரசியல் முக்கியத்துவத்தை ஒப்பிடுவது மட்டுமின்றி, இருவருடைய கட்சிகளின் முதல் மாநில மாநாட்டை ஒப்பிடுவதும் இங்கு அவசியமாகிறது. தமிழ்நாட்டில் பல நடிகர்கள் தனிக் கட்சிகளை தொடங்கியிருக்கிறார்கள் என்றாலும் அதில் எம்.ஜி.ஆர் மற்றும் விஜயகாந்த் மட்டுமே வெற்றிக்கண்டவர்கள் எனலாம். அதில் எம்ஜிஆர் திமுகவில் இருந்து பிரிந்து தனியே அதிமுக என்ற கட்சியை தொடங்கி சுமார் 10 ஆண்டு காலம் முதலமைச்சராக செயல்பட்டார். எனவே அவர் கதையும் வேறு. 


இங்குதான் விஜயகாந்த் சற்றே வித்தியாசமானவராக பார்க்கப்படுகிறார். தனது ரசிகர் மன்றங்களை ஒன்றிணைத்தே அவர் தேமுதிகவை உருவாக்கினார். 2006இல் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 8% வாக்குகளை அள்ளினார். இருப்பினும் அந்த தேர்தலில் விஜயகாந்த் மட்டுமே விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்றார். 2011 சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி வைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றிபெற்றது. விஜயகாந்த் கட்சித் தொடங்கிய 6ஆவது ஆண்டுக்குள் எதிர்க்கட்சித் தலைவராக உருவெடுத்தார்.


ஆனால் அதுதான் அரசியலில் விஜயகாந்த் தொட்ட உச்சம் எனலாம். அதன்பின் தேமுதிக தொடர் பின்னடைவுகளையும், தோல்விகளையுமே சந்தித்தது. விஜயகாந்தின் உடல்நிலையும் மோசமடைய தேமுதிகவின் நிலைமையும் மிக மோசமானது. பிரேமலதா முன்னிறுத்தப்பட்டாலும் கூட விஜயகாந்த் அளவிற்கு வேறு யாருக்கும் அங்கு செல்வாக்கு இல்லை. இதுவரை மக்களவை தேர்தலில் தேமுதிக ஒரு இடத்தில் கூட வென்றதே இல்லை. 


விஜய் vs விஜயகாந்த்... ஓர் ஒப்பீடு


இருந்தாலும் தற்போது விஜய் மீதும் தவெக மீதும் எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே எதிர்பார்ப்பு தேமுதிக தொடங்கும்போது அக்கட்சியின் மீதும் விஜய்காந்த் மீதும் இருந்தது. விஜய் கட்சியின் பெயரை அறிவித்து, கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து, கட்சியின் கொடியை வெளியிட்டு, கட்சியின் பாடலை வெளியிட்டு கட்சி தொடங்கி சுமார் 8 மாதங்களுக்கு பின் தற்போது முதல் மாநில மாநாட்டை நடத்த உள்ளார். விஜய் திருச்சி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மாநாடு நடத்த இடம் தேடியும் கிடைக்காத காரணத்தால் விழுப்புரத்தில் தற்போது ஏற்பாடு செய்துள்ளார்.


மேலும் படிக்க | களைக்கட்டும் தவெக மாநாட்டு அரங்கம்!! இந்த விஷயங்களை கவனிச்சீங்களா?


ஆனால், விஜயகாந்த் 'தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்' என்ற தனது கட்சியின் பெயரையே தனது முதல் மாநில மாநாட்டில்தான் நடத்தினார். விஜயகாந்த் விருதுநகரை சேர்ந்தவராக இருந்தாலும், எப்போதும் மதுரை மண்ணைச் சேர்ந்தவர் என்றே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர். எனவேதான் முதல் மாநில மாநாட்டை மதுரையில் சிறப்பாக நடத்தியிருந்தார்.


யாருக்கு அதிக கூட்டம்...?


விஜயகாந்த் 2006 சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து களமிறங்கினார். விஜய் 2026 சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து அரசியலில் குதித்தார். விஜயகாந்த் அவரது அரசியல் மாநாட்டை சட்டப்பேரவை தேர்தலுக்கு சுமார் 6-7 மாதங்களுக்கு முன்னர், அதாவது 2005ஆம் ஆண்டு செப். 14ஆம் தேதிதான் முதல் மாநில அரசியல் மாநாட்டை நடத்தினார். ஆனால் விஜய்யோ 2026ஆம் ஆண்டு தேர்தலுக்கு சுமார் ஒன்றரை ஆண்டுகள் முன் தற்போது முதல் மாநில மாநாட்டை நடத்துகிறார். விஜயகாந்தை விட விஜய் நீண்ட கால செயல்பாட்டை முன்னெடுத்துள்ளார் எனலாம். 


இருப்பினும் விஜயகாந்த் திமுக, அதிமுக இருக்கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து தன்னை மாற்றாக முன்னிறுத்தினார். முதல் மாநில மாநாட்டில் விஜயகாந்தின் அதிரடி பேச்சு பலரையும் கவர்ந்தது. பிரேமலதா இன்று அவரது பதிவில் குறிப்பிட்டது போல் அப்போது மாநாட்டு பந்தலை தாண்டியும் லட்சக்கணக்கான தொண்டர்கள் அன்று அங்கு குவிந்திருந்தனர். அதே கூட்டம் இன்று விஜய்க்கும் கூடும் எனலாம்.      


நேற்று இரவில் இருந்தே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநாட்டு திடலுக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிய தொடங்கினர். இருப்பினும் இன்று மாலைதான் மாநாடு தொடங்கும் என்பதால் பலரும் தேசிய நெடுஞ்சாலை பகுதியிலேயே குவிந்து காணப்பட்டனர். இன்று காலையில் பாதுகாப்பு பணியாளர்கள் குறைவாக இருந்த நேரம் பார்த்து ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் திடலில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை தாண்டி இருக்கைகளை ஆக்கிரமித்துள்ளனர்.


மேலும் படிக்க | தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் வீர தமிழச்சியின் கட் அவுட்! யார் இந்த அஞ்சலை அம்மாள்?


தவெக மாநாட்டில் சிறப்பு ஏற்பாடு


ஆனால், விஜய்காந்த் தேமுதிக மாநாட்டை 150 ஏக்கர் மைதானத்தில் நடத்தினார். ஆனால் தற்போது தவெக மாநாடு 85 ஏக்கர் மைதானத்தில்தான் நடைபெற இருக்கிறது. இதனால் இருக்கைகளின் எண்ணிக்கை பாதியளவு குறையும். தேமுதிக மாநாட்டில் 2.5 லட்சம் இருக்கைகள் என்றால், இங்கு 1 லட்சத்திற்கும் சற்றே அதிகமான இருக்கைகள் ஏற்பாடு செய்யப்படலாம். ஆனால், இருக்கைகள் இன்றி மைதானத்தை சூழ்ந்து நிற்கும் தொண்டர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும். 


தேமுதிக மாநாட்டில் 25 லட்சம் பேர் வந்ததாக பிரேமலாத கூறினாலும், அதை கணக்கிட அப்போது பெரிய வசதிகள் இல்லை. ஆனால், இன்று தவெக மாநாட்டின் முகப்பின் பல்வேறு இடங்களில் QR Code வைக்கப்பட்டுள்ளது. இதனை ஸ்கேன் செய்வதன் மூலம் தொண்டர்களின் வருகை பதிவாகும், இதனால் எத்தனை வந்தார்கள் என்பதும் ஓரளவுக்கு தெரிந்துவிடும். வருகை தரும் தொண்டர்களுக்கு e-சான்றிதழும் வழங்கப்படுகிறது.


கொள்கையை அறிவிப்பாரா விஜய்?


விஜயகாந்த் தேமுதிகவின் முதல் மாநில மாநாட்டில் பேசியபோது, ஊழலை ஒழிப்பேன் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களை முன்னேற்றுவேன் என பொதுவாக பேசினாலும் இதுதான் கொள்கை என தெளிவாக பேசியிருக்க மாட்டார். அதேபோல் கட்சியின் பெயரிலும் 'தேசிய', 'திராவிட' என சற்றே முரணான பெயர்களையும் வைத்திருந்தார். இதனால் தேமுதிகவின் கொள்கைகள் தற்போது வரை ஒரு தெளிவின்மையோடு இருப்பதை பார்க்க முடியும் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள். 


இந்த இடத்தில்தான் விஜய் வேறுபட வேண்டும். அரசியல் தெளிவோடு தனது கொள்கை, கோட்பாடு, நிலைபாடு ஆகியவற்றை எளிமையாகவும், காத்திரமாகவும், விரிவாகவும் தனது தொண்டர்களுக்கு விஜய் இன்று அறிவித்தாக வேண்டும். கட்சி எதை நோக்கி செயல்பட வேண்டும், ஆட்சியை பிடிப்பதை தவிர கட்சியின் இலக்கு என்ன ஆகியவற்றை விஜய் இன்று விளக்க வேண்டும். திமுக, அதிமுக, நாம் தமிழர், பாமக உள்ளிட்ட மற்ற கட்சிகளை விட தவெக எதில் வித்தியாசமானது என்பதை ஆக்கப்பூர்வமாக விளக்க வேண்டும். இதை செய்யாவிடில் விஜய்யும், விஜயகாந்தை போல் காலம் செல்ல செல்ல மங்கிவிட வாய்ப்பிருக்கிறது. அது கூட்டம் அதிகமாக கூடினாலும் சரி, குறைவாக கூடினாலும் சரி...


மேலும் படிக்க | தமிழக வெற்றிக் கழக மாநாடு நடக்கும் இடத்தின் ட்ரோன் காட்சிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ