சமூக நீதியைச் சாய்க்கும் மத்திய - மாநில அரசு; வைகோ கண்டனம்!
சமூக நீதியைச் சாய்க்கும் மத்திய - மாநில அரசுகளுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்,.
சமூக நீதியைச் சாய்க்கும் மத்திய - மாநில அரசுகளுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்,.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., மத்திய பா.ஜ.க., அரசு, சமூக நீதியை ஆழக் குழிதோண்டிப் புதைக்கும் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறது. மருத்துவப் படிப்புகளுக்கு ‘நீட்’ நுழைவுத் தேர்வைத் திணித்து, பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன இளைய சமூகத்தினரின் மருத்துவர் ஆகும் இலட்சியத்தைத் தகர்த்துத் தவிடுபொடி ஆக்கி விட்டது.
எடப்பாடி பழனிச்சாமி அரசும் தமிழக மக்களிடம் நம்பிக்கையை ஊட்டி, ஏமாற்றி, வஞ்சித்துவிட்டது.
தற்போது மேலும் ஒரு பேரிடியைப் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மீது மத்திய அரசு ஏவி உள்ளது.
2020-21 ஆம் ஆண்டுக்கான பல் மருத்துவ முதுநிலைப் படிப்புக்கு ‘நீட்’ தேர்வு என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின் பிரிவு 12 இல், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மட்டுமே பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 27 விழுக்காடு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று குறிப்பிட்டு இருக்கிறது.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு பல் மருத்துவ முதுகலைப் படிப்புக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இதில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மட்டும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்படும். ஆனால் மாநிலங்களிலிருந்து பெறப்படும் 50 விழுக்காடு இடங்களுக்கு, இட ஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என்று வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பு சமூக நீதிக்கு சாவுமணி அடிப்பதாகும்.
பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு உரிமையைத் தட்டிப் பறிக்கும் பா.ஜ.க. அரசு, பொருளாதாரத்தில் பின்தங்கிய, அதாவது மத்திய அரசின் அளவுகோலின்படி மாதம் ரூ.66 ஆயிரம் வருவாய் ஈட்டுபவர்கள் உயர்சாதி ஏழைகள். மத்திய - மாநில அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் அவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு ஆணை பிறப்பித்து இருக்கின்றது.
முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கும் பா.ஜ.க. அரசின் அறிவிப்பு கண்டிக்கத்தக்கது. இதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
மாநிலங்களிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும் அகில இந்திய அளவிலான இடங்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இடங்கள் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.
பா.ஜ.க. அரசுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில், எடப்பாடி பழனிச்சாமி அரசும் சமூக நீதியைப் புறக்கணித்து வரும் செய்தியை ‘இந்து’ ஆங்கில நாளேடு (18.10.2019) வெளியிட்டு இருக்கிறது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் 26 துறைகளுக்கான மொத்தம் 54 பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கு 2019 ஜூலை 8 ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 14 பேராசிரியர்கள், 14 இணைப் பேராசிரியர்கள், 26 துணைப் பேராசிரியர்களுக்கான பணிகளுக்கு விண்ணப்பங்களை பல்கலைக் கழகம் பெற்றுள்ளது.
மத்திய அரசின் ஆசிரியப் பணிகளுக்கான இடஒதுக்கீட்டுச் சட்டம் 2019 இன் படி, மேற்கண்ட பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படும்; அதில் மாநில அரசு பின்பற்றும் இடஒதுக்கீட்டு முறை அடிப்படையில் பணி நியமனம் செய்வது இல்லை என்று பாரதிதாசன் பல்கலைக் கழகம் தீர்மானித்துள்ளது.
கல்வித் துறையில் மத்திய அரசின் ஏகபோக ஏதேச்சாதிகார ஆதிக்கத்திற்கு எதிராக தமிழகம் போர்க்குரல் எழுப்பி வரும் நிலையில், தமிழ்நாட்டின் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் மத்திய அரசு சட்டத்தின் கீழ் பணி நியமனங்கள் இருக்கும் என்றும், மாநில அரசின் இடஒதுக்கீடு கிடையாது என்றும் அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. சமூக நீதியைச் சாய்க்கும் இந்த அறிவிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது.
இந்தியாவிலேயே சமூக நீதிக்கு முன்னுதாரணமாகத் திகழும் தமிழகத்தில், மாநில சுயாட்சிக்காகக் குரல் கொடுக்கும் தமிழகத்தில், தமிழ்ப் புலவன் பாரதிதாசன் பெயரில் இருக்கும் கல்லூரியில் மாநில அரசு பின்பற்றும் இடஒதுக்கீடு இல்லை என்பது கண்டிக்கத்தக்கது. எனவே எடப்பாடி பழனிச்சாமி அரசு உயர் கல்வித்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு முறையைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.