அரசு சிறப்பு விடுமுறை அறிவிப்புகள் தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது என சென்னை உயர் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2015 ஆம் ஆண்டு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் காலமான சமயத்தில், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஜூலை 30 ஆம் தேதி தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்தது. இதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை, தனது, முதல் மற்றும் பொது ஷிப்ட் ஊழியர்களுக்கு மட்டும் ஊதியத்துடன் விடுமுறை அளித்தது.


நண்பகல் மற்றும் இரவு நேர ஷிப்ட் ஊழியர்களுக்கு, விடுமுறை அறிவிக்க நிபந்தனை வெளியிட்டது. இதை ஏற்க மறுத்த நிர்வாகம் 30 ஆம் தேதி விடுமுறை அறிவிப்பதாக இருந்தால் விடுமுறை தினமான ஆகஸ்ட் 8 ஆம் தேதி பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தியது. இதை ஏற்காத தொழிற்சங்கத்தினர் ஜூலை 30 ஆம் தேதி பணிக்கு வராததால் அன்றைய தினம் அவர்களுக்கு ஊதியம் வழக்கப்படவில்லை. 


இதுதொடர்பான பதிவு செய்யப்பட்ட வழக்கில், 47 ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க சேலம் தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தனியார் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின் படி அறிவிக்கப்படும் அரசு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது என நீதிபதி தெளிவுபடுத்தினார்.


நிபந்தனையுடன் விடுமுறை அளிக்க நிறுவனம் முன் வந்த போதும், அதை ஏற்காத ஊழியர்களுக்கு அன்றைய தினம் ஊதியம் பெற உரிமையில்லை எனக்கூறி தொழிலாளர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.