மைலாப்பூர் இரட்டை கொலை - குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்..!
மயிலாப்பூர் இரட்டைக் கொலை வழக்கில் கைதான குற்றவாளி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே இந்த கொலையை அரங்கேற்ற திட்டம் தீட்டியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்(65) மற்றும் அவரது மனைவி அனுராதா(60). அங்கிருக்கும் துவாரகா குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த தம்பதியின் மகன் மற்றும் மகள் அமெரிக்காவில் மருத்துவர்களாக இருக்கின்றனர். ஸ்ரீகாந்த் குஜராத் மாநிலத்தில் தனியார் ஐடி கம்பெனி ஒன்றை நடத்தி வந்தார். மகள் நிறை மாத கர்ப்பிணியாக இருந்ததால் கடந்த ஆறு மாத காலமாக அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில், ஸ்ரீகாந்தும், அனுராதாவும் தங்கியிருந்துள்ளனர். அங்கிருந்து சென்னை திரும்பிய அவர்களை, அவர்களது வீட்டில் நீண்ட காலமாக ஓட்டுநராக பணியாற்றும் லால் கிருஷ்ணா விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
வீட்டில் 40 கோடி ரூபாய் பணம் மற்றும் நகைகள் இருப்பதை ஸ்ரீகாந்த் தம்பதி பேசியதாக கூறப்படுகிறது. இதன்மீது ஆசைப்பட்ட ஓட்டுநர் லால் கிருஷ்ணா, சென்னை திரும்பிய அந்த தம்பதியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக அவரின் நண்பர் ரவியையும் அழைத்துள்ளார். அவர்களின் திட்டப்படி, வீட்டிற்கு அழைத்து வந்த ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதாவை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர், சடலத்தை துணியால் சுற்றி நெமிலிச் சேரியில் இருக்கும் பண்ணையில் குழி தோண்டி புதைத்து விட்டு, வீட்டில் இருந்த பணத்தை எடுக்க முற்பட்டுள்ளனர். ஆனால், லாக்கரில் எதிர்பார்த்த பணம் இல்லாததால் நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.
இதற்கிடையே, அமெரிக்காவில் இருக்கும் ஸ்ரீகாந்தின் மகன், தனது தந்தைக்கு தொடர்ந்து போன் செய்துள்ளார். மொபைல் ஸ்விட்ஸ் ஆஃப் ஆனதால், ஓட்டுநர் லால் கிருஷ்ணாவுக்கு போன் செய்துள்ளார். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த மகன் அங்கிருந்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். வீட்டிற்கு உடனடியாக சென்று பார்க்குமாறும் கூறியுள்ளார். இதனிடிப்படையில் அங்கு வந்த உறவினர்கள் வீட்டில் ரத்தக்கறை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
வீட்டிற்கு வந்த காவல்துறையினர், கொலை நடைபெற்றதைக் கண்டுபிடித்து உடனடியாக லால் கிருஷ்ணாவை பிடிக்க திட்டம் தீட்டியுள்ளனர். அவர் ஆந்திரா செல்வதை கண்டுபிடித்த காவல்துறை, உடனடியாக அம்மாநில காவல்துறையை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறியுள்ளனர். அவர்களின் உதவியுடன் லால் கிருஷ்ணாவை தமிழக காவல்துறை கைது செய்தது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் கண்ணன், "இரட்டை கொலை குறித்து விளக்கினார். 40 கோடி ரூபாய் பணத்துக்கு ஆசைப்பட்டு நண்பர் ரவியுடன் சேர்ந்து ஓட்டுநர் லால் கிருஷ்ணா ஸ்ரீகாந்த் தம்பதியை கொலை செய்துள்ளனர்.
அவர்கள் எதிர்பார்த்த பணம் லாக்கரில் இல்லாத நிலையில் வீட்டில் இருந்த 70 கிலோ வெள்ளி 9 கிலோ தங்கம், வைரம் பிளாட்டினம் என கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை மூட்டை மூட்டையாக கட்டி உள்ளனர். கொலைக்குப் பிறகு ஸ்ரீகாந்தின் செல்போன் மற்றும் சில தடயங்களையும் அழித்த அவர்கள், கார் மூலமாக திருவான்மியூர், அடையாறு - கோயம்பேடு மற்றும் கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திராவுக்கு லால் கிருஷ்ணா மற்றும் ரவி ராம் இருவரும் வேகமாக சென்றனர்.
ஆந்திரா செல்லக்கூடிய வழியில் உள்ள சுங்க சாவடிகள் மற்றும் அவர்களுடைய செல்போன் சிக்னல் ஆகியவற்றை கண்காணித்து அதன் மூலமாக அவர்கள் செல்லக்கூடிய வழியை கண்டுபிடித்தோம். இது குறித்து ஆந்திர போலீசாருக்கு தகவல் கொடுத்து, அதனடிப்படையில் ஆந்திரா போலீசார் லால் கிருஷ்ணா மற்றும் ரவி ராயை கைது செய்தனர்.
பின்னர் தமிழக போலீசாருக்கு தகவல் கொடுத்து லால் கிருஷ்ணா மற்றும் ரவி இருவரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் நகை மற்றும் பணத்திற்காக ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.இருவரின் உடல்களும் புதைக்கப்பட்ட பண்ணை தோட்டத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்போடு கொலையாளிகளை அழைத்துச் சென்றனர். அங்கு உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தை கொலையாளிகள் அடையாளம் காட்ட, தொழில் அதிபர் ஸ்ரீகாந்த், அவரது மனைவி அனுராதா ஆகியோரின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. பின்னர் பிரேத பரிசோதனைக்காக இருவரின் உடல்களும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதனையடுத்து இரட்டை கொலை செய்த கொடூர கொலையாளிகள் லால் கிருஷ்ணா மற்றும் ரவி இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட சுமார் 1,000 சவரன் தங்க நகைகள், சுமார் 50 கிலோ வெள்ளிப்பொருட்கள், 2 செல்போன்கள் மற்றும் இன்னவோ கார் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தல் மற்றும் திருட்டு வழக்காக பதிவு செய்யப்பட்ட இவ்வழக்கினை ஆதாய கொலை வழக்காக மாற்றம் செய்து மைலாப்பூர் போலீசார் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
மேலும் படிக்க | மலேசியா பெண்ணை ஏமாற்றிய நெல்லை இளைஞர் - வசமாக சிக்கியது எப்படி?
இந்நிலையில், மயிலாப்பூர் இரட்டைக் கொலை வழக்கில் கைதான குற்றவாளி லால் கிருஷ்ணா, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே இந்த கொலையை அரங்கேற்ற திட்டம் தீட்டியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். தன்னைப் பிரிந்து வாழும் மனைவியின் முன் பணக்காரனாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வெறியில் இந்த கொலை, கொள்ளை செய்ய சதி திட்டம் தீட்டியதாக தெரிவித்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் சென்னை வந்தபோது 40 கோடி விவகாரம் குறித்து பேசும்போதே சதி திட்டத்தை தொடங்கிவிட்டதாக தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், சம்பவ தினத்திலிருந்து மூன்று நாட்களுக்கு முன்பே பண்ணை வீட்டில் குழிகளை தோண்டி வைத்து காத்திருந்து,கொலை செய்ததை வாக்குமூலமாக கொடுத்திருக்கிறார். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நீடித்துவருகிறது.
மேலும் படிக்க | சாதி பெயரை கூறி அடித்து துன்புறுத்தல் - ஏக்கத்தோடு வந்த நின்ற பள்ளி மாணவர்கள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR