உலகத்தையும் பாதிக்கக்கூடிய பிரச்சனை காலநிலை மாற்றம் -அன்புமணி!
காலநிலை மாற்ற கட்டுப்பாட்டு செயல்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மாநிலங்களவையில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்!
காலநிலை மாற்ற கட்டுப்பாட்டு செயல்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மாநிலங்களவையில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்!
இதுதொடர்பாக அவர் மாநிலங்களவையில் பேசியதாவது., இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்தையும் பாதிக்கக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை குறித்து இந்த அவையின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். அது தான் காலநிலை மாற்றம் ஆகும். 150 ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் சராசரி வெப்பநிலை 14 டிகிரி செல்சியசாக இருந்தது. தொழில்புரட்சிக்குப் பிறகு இன்று பூமியின் சராசரி வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்து இப்போது 15.1 டிகிரி செல்சியசாக உள்ளது. ஒரு டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை அதிகரித்ததற்கே மிகப்பெரிய அளவில் இயற்கை பேரழிவுகளை உலகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இப்போது வந்து விட்டது.
இந்தியாவைப் பொறுத்தவரை நடப்பாண்டில் மும்பை வரலாறு காணாத வெள்ளத்தை சந்தித்தது. இந்த பருவத்தில் மட்டும் அரேபியக் கடலில் நான்கு புயல்கள் உருவாகியுள்ளன. இதற்கு முன் இப்படி ஒரு சூழல் ஏற்பட்டதில்லை. இந்த ஆண்டில் கோடைக்காலத்தில் ஒதிஷா மாநிலத்தை புயல் தாக்கியுள்ளது.
நடப்பாண்டில் தமிழ்நாட்டில் ஊட்டிக்கு அருகில் உள்ள அவலாஞ்சி என்ற இடத்தில் ஒரே நாளில் 911 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இது தான் இதுவரை தமிழ்நாட்டில் பெய்த மிக அதிக மழை ஆகும். தமிழ்நாட்டில் ஆண்டு முழுவதும் பெய்யக்கூடிய சராசரி மழை அளவே 950 மில்லி மீட்டர் மட்டும் தான்.
இந்த ஆண்டில் ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்பம் பதிவாகியுள்ளது. அதனால் பல இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டிருக்கிறது. காலநிலை மாற்றம் என்பது படிம எரிபொருட்களை பயன்படுத்துதல், நிலக்கரியை எரிபொருளாகக் கொண்ட மின்னுற்பத்தி நிலையங்கள், மாசு, வாகனங்களின் பயன்பாடு போன்றவற்றால் ஏற்படுகிறது. வெப்பநிலை அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன், ஹைட்ரோப்ளூரோ கார்பன்ஸ் (Hydrofluorocarbon), குளோரோப்ளூரோ கார்பன்ஸ் (Chlorofluorocarbon) ஓசோன் போன்ற பசுங்குடில் வாயுக்கள் அதிக அளவில் வெளியேற்றப் படுவது தான்.
காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஐ.நா. செயல்திட்ட ஒப்பந்தத்திலும், 2015-ஆம் ஆண்டு பாரிஸ் உடன்பாட்டிலும் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது என்பதால் இந்தியாவில் காலநிலை அவசர நிலையை செயல்படுத்துவதுடன், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைத் திட்டத்தையும் Climate Change Action Plan) செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
காலநிலை மாற்றத்திற்கு மேலை நாடுகள் தான் முக்கியக் காரணம் என்ற போதிலும், அந்த நாடுகளை விமர்சித்துக் கொண்டிருப்பதற்கு பதிலாக காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது நமது கடமை ஆகும். அதற்காக படிம எரிபொருட்களின் பயன்பாட்டையும், நிலக்கரியை பயன்படுத்தி அனல் மின்சாரம் உற்பத்தி செய்வதையும் குறைத்தல்,மரபுசாரா எரிசக்தியை, குறிப்பாக, சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்னுற்பத்தியை அதிகரித்தல், வனப்பரப்பை விரிவாக்குதல், பொதுப்போக்குவரத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
மனிதர்களின் இறைச்சித் தேவைக்காக அதிக எண்ணிக்கையில் கால்நடைகள் வளர்க்கப்படுவது அதிக அளவில் மீத்தென் வாயுவை வெளிப்படுத்துவதால் அதை குறைக்க வேண்டும். புதுமையான நகர்ப்புற திட்டமிடல் கொள்கைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். இவை அரசின் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
உலகில் இதுவரை 5 நாடுகள் காலநிலை நெருக்கடி நிலையை அறிவித்துள்ளன. உலகம் முழுவதும் ஏராளமான மாநகரங்களும் காலநிலை நெருக்கடி நிலையை அறிவித்துள்ளன. எனவே, இந்தியாவை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகத்தையும் காப்பாற்ற இந்தியாவில் காலநிலை நெருக்கடி நிலையை அறிவிக்கவும், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைத் திட்டத்தை செயல்படுத்தவும் இது தான் சரியான நேரம் ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.