CM Stalin About BJP Scam: திருவாரூர் அருகே பவித்திரமானிக்கம் தனியார் திருமண அரங்கில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் இல்ல திருமண விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று  திருமணத்தினை நடத்தி வைத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர் அவர் பேசியதாவது, "எம்பி செல்வராஜன், மாநிலச் செயலாளர் முத்தரசனும் திருமண விழாவிற்கு வருகை தந்ததை சுட்டிக்காட்டி பெருமையுடன் கூறினர். இந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்ததற்கு காரணம் மண்ணின் மைந்தர் என்ற காரணம் இருந்தாலும், எம்பி செல்வராஜ் பொருத்தவரை, அவர் அன்போடு பண்போடு பாசத்தோடு என்னிடத்தில் மட்டுமல்ல எல்லோரிடத்திலும் பழகக் கூடியவர்.


நான் தமிழ்நாடு முதல்வரான பிறகு பல்வேறு மாவட்டங்களுக்கு, பல்வேறு பகுதிகளுக்கு அரசு நிகழ்ச்சிகளுக்கு, அரசியல் நிகழ்ச்சிகளுக்கு, பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்வதுண்டு. ஆனால் இந்த நிகழ்ச்சியை பொருத்தவரைக்கும் நானே மனமுவந்து தேதி வழங்கி மூன்று தினங்களுக்கு முன்பே டெல்டா மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பை பெற்றேன். மணமக்களை வாழ்த்துவதற்கு ஒரு வாய்ப்பைப் பெற்று இருக்கிறேன். 


இதற்காக தான் இந்த கூட்டணி


1975ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்ட எம்பி செல்வராஜ், 48 ஆண்டு காலம் கட்சியில் மக்களுக்காக உழைத்து வருகிறார். மக்கள் தொண்டனாக இருந்து தொடர்ந்து கடமையாற்றி வருகிறார். மக்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் பல்வேறு போராட்டங்களை நடத்திய பெருமை செல்வராஜிக்கு உண்டு. எம்பி செல்வராஜ் மகளின் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றதற்கு பெருமகிழ்ச்சி அடைகிறேன்.



நாடாளுமன்றத் தேர்தலில் தற்போது உள்ள கூட்டணி தொடர்ந்து நீடிக்கும் அதை நான் உறுதியாக சொல்கிறேன். இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும், இன்று சர்வாதிகார பாசிச ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிற பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்தியாவை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். அதற்காக தான் 'இந்தியா' கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.


'15 ரூபாயாவது தந்தார்களா...?'


ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மும்பையில் இந்திய கூட்டணியின் மூன்றாவது கூட்டம் நடைபெற உள்ளது. அதில் நானும் பங்கேற்க உள்ளேன். தமிழ்நாட்டில் ஒரு நல்ல ஆட்சி உருவாக்கிட அனைவரும் காரணமாக இருந்தீர்கள். அதே போல் ஒன்றியத்தில் நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் ஒரு நல்ல ஒன்றிய அரசு அமைய நீங்கள் காரணமாக இருக்க வேண்டும்.


நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை இந்த திருமணத்தில் தொடங்கி வைக்க வேண்டும் என சிபிஐ மாநில செயலர் முத்தரசன் குறிப்பிட்டார். திருவாரூரில் தான் தேர்தல் பிரச்சாரம் தொடங்க வேண்டும் என நினைத்தேன். அதே போல் இந்த மேடையில் நின்று பிரச்சாரத்தை தொடங்கி உள்ளேன்.


வெளிநாடுகளில் இருக்கக்கூடிய கருப்பு பணங்களை எல்லாம் கைப்பற்றி இந்தியாவிற்கு கொண்டுவந்து நாட்டு மக்கள் அத்தனை பேருக்கும் 15 லட்சம் ரூபாய் கொடுக்கப் போகிறேன் என அறிவித்தார் மோடி. நான் பல கூட்டங்களில் கேட்டேன் ரூ. 15 லட்சம் வேண்டாம், ஒரு 15 ஆயிரம் மட்டும் அல்லது 15 ஆயிரம் கூட வேண்டாம் 15 ரூபாய் கொடுத்தார்களா...?


மேலும் படிக்க | பாஜகவை தூக்கி எறியாவிட்டால் அரசியலமைப்பு சட்டம் அவ்வளவுதான்... திருமாவளவன் பேச்சு!


'வெட்ட வெளிச்சமாகும் பாஜகவின் ஊழல்'


நாட்டில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு எல்லாம் வேலை வாய்ப்பு தருவோம் மோடி சொன்னார். ஆனால் செய்தார்களா வேலைகள் பறிக்கப்பட்டுள்ளது, இதுதான் இந்த ஆட்சியின் நிலைமை. மதக்கலவரத்தை ஏற்படுத்தி நாட்டைப் பிளவுபடுத்தும் கொடிய ஆட்சி நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்தியா கூட்டணி உருவாக தமிழகத்தில் உள்ள கூட்டணிக் கட்சிகள் காரணமாக உள்ளன. ஊழலைப் பற்றி பேச மோடிக்கும், பாஜகவுக்கும் என்ன அருகதை உள்ளது. 


இன்று சிஏஜி அறிக்கையில் பாஜக ஆட்சி ஊழல் ஆட்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழு விதமான ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டம், கிராமப்புற அமைச்சகத்தின் ஆய்வு திட்டம், விமான வடிவமைப்பு திட்டம், சுங்கச்சாவடி திட்டம் ஆகியவற்றில் ஊழல் நடைபெற்றுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் போலியான செல்போன் நம்பர் உள்ளது. அந்த நம்பரில் 7 லட்சம் பயனாளிகள் இணைக்கப்பட்டு மோசடி நடைபெற்றுள்ளது.


இந்தத் திட்டத்தில் இறந்த 88 லட்சம் பேருக்கு சிகிச்சையும், இறந்த இரண்டு லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு காப்பீடு தொகையும் வழங்கப்பட்டு முறைகேடு நடைபெற்றுள்ளதாக சிஏஜி குறிப்பிட்டுள்ளது. பாரத் மாலா திட்டத்தில் சாலைகளுக்கு நிர்ணயித்ததை விட இரண்டு மடங்கு கூடுதல் தொகை வழங்கப்பட்டுள்ளது. துவாரகா விரைவு நெடுஞ்சாலை திட்டத்தில் 278 மடங்கு கூடுதல் செலவிடப்பட்டுள்ளது. 


திமுக பனங்காட்டு நரி


சுங்கச்சாவடிகளில் முறைகேடான வசூல் நடைபெற்று உள்ளது. நாடு முழுவதும் உள்ள 600 சுங்கச்சாவடியில் ஐந்தில் மட்டும் சிஏஜி ஆய்வு செய்துள்ளது. இது போன்ற பாஜக அரசின் முறைகேடுகள் குறித்து, திமுக அரசும், அதன் கூட்டணி கட்சிகள் பேசுகின்றது. இதனால் ஆத்திரமடையும் பாஜக அரசு வருமான வரித்துறை, அமலாக்கத் துறைகளை ஏவி வருகிறது. இதைக் கண்டு அஞ்சுகிற கட்சி திமுக அல்ல. திமுக பனங்காட்டு நரி, சலசலப்புகளுக்கெல்லாம் அஞ்சாது.


தமிழக மக்களை இந்திய மக்களை மோடி அரசு இனியும் ஏமாற்ற முடியாது. சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யக்கூடிய திமுக ஆட்சி. வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். ஒரு கோடிக்கு மேற்பட்டோருக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த உரிமைத்தொகை யார் யாருக்கு சேர வேண்டுமோ அவர்களுக்கு கண்டிப்பாக சென்றடையும்" என்றார். மேலும் இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்,  சட்டமன்றம் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


மேலும் படிக்க | ஆளுநர்கள் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை: தமிழிசை சௌந்தர ராஜன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ