Cyclone Michaung News In Tamil: ‘மிக்ஜாம்’ புயல் ஏற்படுத்தியுள்ள இயற்கைப் பேரிடரால் சென்னை, சுற்றுப்புற மாவட்டங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த பாதிப்புகளைச் சரிசெய்ய #TNCMPRF-க்குத் தாமாக முன்வந்து நிதி அளித்து வரும் நல்லுள்ளங்களுக்கு நன்றி. நானும் என்னுடைய ஒரு மாத ஊதியத்தை மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்காக அளிக்கிறேன். தமிழ்நாட்டின் அனைத்து MLA, MP-களும் அளித்திட வேண்டுகிறேன். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனைவரும் தாராளமாக நிதி வழங்கிடுங்கள் என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிதி உதவி குறித்து தமிழக மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியது..


தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 


இந்தப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு தங்களின் பங்களிப்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், அமைச்சர் பெருமக்களும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிடவுள்ளார்கள். 


இந்தச் சூழ்நிலையில், நல்லுள்ளம் கொண்ட பல்வேறு தொழில் நிறுவனங்களும், தன்னார்வ அமைப்புகளும், பொது மக்களும் இந்த மாபெரும் பணிக்கு தங்களது பங்களிப்பினையும் வழங்கிட விருப்பம் தெரிவித்து, அரசைத் தொடர்பு கொண்டு வருகிறார்கள்.


எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைத்திடவும், புதிய வாழ்வாதாரங்களை மீள உருவாக்கிடவும் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்களும், தன்னார்வலர்களும், பொதுமக்களும் முதலமைச்சர் பொது நிவாரண நிதி வாயிலாக, மிக்ஜாம் மீட்புப் பணிகளுக்குத் தங்களின் பங்களிப்பை வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னதாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.