“பட்டணப் பிரவேச விழாவுக்கு மு.க.ஸ்டாலின் அனுமதி” - தருமபுரம் ஆதீனம் தகவல்!
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி தந்துள்ளதாக தகவல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீன மடத்தில் 27 வது ஆதீன கர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார். பதவியேற்ற நாளில் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளிப் பல்லக்கில் புதிய ஆதீனகர்த்தர் அமரந்து வீதி உலா வந்தார். இதையடுத்து, தருமபுரம் ஆதினம் வரும் 22-ம் தேதி பட்டினப் பிரவேச நிகழ்ச்சி வைத்துள்ளார். அப்போது, அவரை பக்தர்கள் பல்லக்கில் வைத்து சுமந்து செல்வார்கள். இதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி எதிர்ப்பு தெரிவித்து சட்டத்திற்கு புறம்பானது என்று அறிக்கை விடுத்தார். அதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை கோட்டாட்சியர் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பும், வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர்.
இதில், மன்னார்குடி செண்பக மன்னார் செண்ட அலங்கார ஜீயர் ஒருபடி மேலே போய், ‘இந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டால் அமைச்சர்கள் சாலையில் நடமாட முடியாது' என்று பேசினார். கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக தற்போது மன்னார்குடி ஜீயர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப பிரச்சனை பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், பல்லக்குத் தூக்குவது எங்கள் உரிமை என்றும், எனவே இதற்கு தடை விதிக்க கூடாது என்றும் தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டணப் பிரவேசத்தில் பல்லக்கு சுமக்கும் 72 பேர் மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் கடிதமாக எழுதி கோரிக்கை வைத்தனர். அந்தக் கடிதத்தில், பல்லக்கைச் சுமப்பது எங்கள் சமய உரிமை. எங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டோம். எங்களிடம் கருத்துக் கேட்டறியாமல் தடை விதித்தது வருத்தத்துக்குரியது. தருமபுரம் ஆதீனத் திருமடத்தைச் சுற்றியுள்ள தெருக்களில் வசிக்கும் 72 பேர் பரம்பரை பரம்பரையாக சிவிகை பல்லக்கு தூக்கி வருகிறோம். இவர்களில் 4 பேர் கோடி நாட்டாமை என அழைக்கப்படுகின்றனர். அவர்களது மேற்பார்வையில் தற்போது பல்லக்கு தூக்கும் இளைஞர்களில் பலர் கல்லூரிகளில் படிப்பவர்களாகவும், பட்டப்படிப்பை முடித்தவர்களாகவும் இருக்கின்றனர். தங்களுக்கு கல்வி அறிவு கொடுத்தது தருமபுரம் ஆதீனம்தான் என்றும், தங்களுக்கு வீடு மற்றும் நிலம் ஆகியவற்றை தருமபுரம் ஆதீனம் வழங்கியுள்ளதாகவும், தங்களை யாரும் கட்டாயப்படுத்தி பல்லக்கை சுமக்க சொல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். பல்லக்கு சுமப்பது காலம் காலமாக உள்ள சமய உரிமை. அதனை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டோம். இவ்விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு, தடை விதிக்கப்பட்ட பல்லக்கு நிகழ்வுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க | மயிலாடுதுறை ஆதீன பட்டின பிரவேச தடை அரசியலாக்கப்படுகிறது: அமைச்சர் சேகர்பாபு
இதனிடையே, தருமபுரம் ஆதீனம் தற்போது புதிய தகவலைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது, ‘திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு சாதனையில் நேற்றைய நாள் மீண்டும் இந்த பட்டணப் பிரவேச விழாவை நடத்தலாம் என்று தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். அவர்களுக்கு நமது நல்லாசிகள். இந்த விழா தொடர்ந்து நடத்தப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முயற்சித்திருக்கிறார். அவர்களுக்கும், அறநிலைத்துறை ஆணையர், செயலர் உள்ளிட்ட அனைவருக்கும் எல்லா நலன்களும் வளங்களும் கிடைக்க வாழ்த்துகிறோம். மரபுவழிபட்ட இதுபோன்ற சம்பிரதாயங்களில் அரசு தன்னுடைய நிலைப்பாட்டை என்றைக்குமே மாற்றிக்கொள்ளும் என்பதை இதன்மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். நேற்றைய நாள் இரவு தொலைபேசி வாயிலாக அழைத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பட்டின பிரவேச நிகழ்ச்சி சம்பிரதாயபடி நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார். அவர்களுக்கு எங்கள் நல்லாசிகள். ஆன்மீக மறுப்பாளர்கள் கொள்கையில் அவர்கள் இருப்பது போன்று எங்கள் கொள்கையில் நாங்கள் இருந்து வருகிறோம். மனிதாபிமான அடிப்படையில் தோளில் சுமப்பது விமர்சிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் அவரவர் சொந்த விருப்பத்தின் பேரிலேயே சுமக்கின்றனர். இறைவன் கொடுத்த தவத்தினால் கிடைப்பது இந்த பல்லக்கு. இதனை எளிமையாக நினைக்கின்றனர். தவம் உடையவர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும். பட்டிணப் பிரவேசம் நிகழ்வை முந்தைய ஆதீனங்கள் நிறுத்தாமல் செய்ததை நாங்களும் தொன்றுதொட்டு தற்போது செய்து வருகிறோம்’ என்றார்.
மேலும் படிக்க | கணபதி மந்திரத்துடன் தொடங்கிய அரசு விழா - கடுப்பான தமிழக அமைச்சர்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR